“‘பொதுவாகவே தீபாவளிக்கு விலையுயர்ந்த, ஆடம்பரமான, அதிக வேலைப்பாடுகள் நிறைந்த ஆடைகள் உடுத்துபவர்கள் உண்டு. அதில் தவறில்லை. ஆனால், பட்டாசு வெடிக்கும்போது உடலில் தீக்காயங்கள் ஏற்படுவதைத் தடுக்க உகந்த துணி, நம் எல்லாருக்கும் தெரிந்த காட்டன் எனப்படும் பருத்திதான். காட்டன் உடைகளும் எளிதாக தீ பற்றி எரியக்கூடியதே என்றாலும் அதை அணிவதே பாதுகாப்பு.
எடுத்துக்காட்டாக, தீபாவளி அன்று ஒருவர் காட்டன் உடை அணிந்தும், மற்றொருவர் synthetic fabric வகையில் ஒன்றான பாலியஸ்டர் உடையை அணிந்துகொண்டு பட்டாசுகளை வெடிக்கிறாரென்று வைத்துக்கொள்வோம். இவை இரண்டில், காட்டன்தான் விரைவாக தீ பிடிக்கக்கூடியது. ஆனால், காட்டன் டிரெஸ்ஸில் தீப்பிடித்து பரவும் நேரத்திற்குள் பாலியஸ்டர் உருக தொடங்கிவிடும்.
காட்டன் அணிந்திருப்பவரின் உடையில் தீப்பிடிக்க தொடங்கியவுடன் தீ உடையில் பரவி பிறகுதான் தோலைத் தொடும். ஆனால், பாலியஸ்டர் அணிந்திருப்பவருக்கு அப்படி அல்ல. அந்தத் துணி ஒரு மெழுகு போல் உருகி தோலின் மீது படிந்து கொப்பளங்களை உருவாக்கும். தோலை உரிக்கக்கூடும். அதனால், காட்டனைக் காட்டிலும் பாலியஸ்டர் ஏற்படுத்தும் பாதிப்புகள் அதிகம். பட்டும் இயற்கையில் இருந்து கிடைக்கும் இழைதான். பட்டாடையையும் பட்டாசு வெடிக்கும்போது உடுத்தலாம். ஆனால், அதைவிட காட்டன் உடுத்துவதே சிறந்தது” என்கிறார்.