பட மூலாதாரம், GOVERNMENT OF PAKISTAN
இரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பிறகு மத்திய கிழக்கு பிராந்தியம் போரின் பிடியில் சிக்கியுள்ளது.
இதனால் அதிகரித்து வரும் பிராந்திய பதற்றங்களுக்கு மத்தியில், கத்தாரின் முன்னாள் பிரதமர் ஹமத் பின் ஜாசிம் பின் ஜபர் அல் தானியின் ஒரு பரிந்துரை விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.
இப்போது மீண்டும் ஒருமுறை அரபு-இஸ்லாமிய அரசியல் மற்றும் இராணுவக் கூட்டணி பற்றிய விவாதம் வேகம் எடுத்துள்ளது.
ஹமத் பின் ஜாசிம் பின் ஜபர் அல் தானி, வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகள் உடனடியாகத் தங்கள் கருத்து வேறுபாடுகளைக் களைந்து ‘நேட்டோ’ பாணியில் ஒரு ‘பயனுள்ள இராணுவ மற்றும் பாதுகாப்பு கூட்டணியை’ உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.
இந்தக் கூட்டணியில் “செளதி அரேபியா மையப் பாத்திரத்தை வகிக்க வேண்டும் மற்றும் பாகிஸ்தான் மற்றும் துருக்கியுடன் ஆழமான ஒத்துழைப்பு இருக்க வேண்டும்” என்று அவர் கூறுகிறார்.
இதற்கு முன்னதாக இஸ்லாமியக் கூட்டணியை உருவாக்கும் யோசனையை செப்டம்பர் 2024-இல் துருக்கி அதிபர் ரசிப் தயிப் எர்டோகன் முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த நேரத்தில் இஸ்ரேலின் விரிவாக்கவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ள இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.
அதேபோல், செப்டம்பர் 2025-இல் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரும் ‘இஸ்லாமிய நேட்டோ’வை உருவாக்கக் கோரிக்கை விடுத்திருந்தார்.
2017-இல் செளதி அரேபியாவின் தலைமையில் உருவாக்கப்பட்ட 34 இஸ்லாமிய நாடுகளின் இராணுவக் கூட்டணியின் பொறுப்பு முன்னாள் பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷெரீஃபிடம் ஒப்படைக்கப்பட்டது.
அந்த நேரத்தில் இது ‘பயங்கரவாதம்’ மற்றும் ‘தீவிரவாதத்திற்கு’ எதிராகச் செயல்படும் என்று செளதி தலைவர்கள் கூறினர்.
அப்போது இந்தக் கூட்டணியின் தலைமை ஜெனரல் ரஹீல் ஷெரீஃபிடம் ஒப்படைக்கப்பட்டதற்கு இரான் தனது ஆழ்ந்த கவலையையும் எதிர்ப்பையும் பதிவு செய்தது.
அந்தக் காலக்கட்டத்திலும் வளைகுடா நாடுகளுக்கு இடையிலான வரலாற்றுப் பகை மற்றும் பிராந்திய நலன்களின் மோதல் காரணமாக இந்தக் கூட்டணி குறித்துக் கேள்விகள் எழுந்தன. இவை இப்போதும் நீடிக்கின்றன மற்றும் எந்தவொரு புதிய கூட்டணிக்கும் ஒரு பெரிய தடையாக உள்ளன.
யேமன் விவகாரத்தில் செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையிலான கருத்து வேறுபாடுகள் மற்றும் கத்தார் மற்றும் எமிரேட்ஸ் இடையிலான கடந்த கால பதற்றங்கள் இதற்கு முக்கிய உதாரணங்களாகும்.
யேமன் போர் செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் வெவ்வேறு புவியியல் மற்றும் அரசியல் நலன்களை வெளிப்படுத்தியுள்ளது. அதேபோல் ‘ஓபெக்’ அமைப்பில் எண்ணெய் உற்பத்தி முடிவுகள், ஆப்பிரிக்கா மற்றும் செங்கடல் பகுதியில் செல்வாக்கை அதிகரிப்பதற்கான முயற்சிகளிலும் அவர்களின் நிலைப்பாடு ஒருவருக்கொருவர் மாறுபட்டதாகவே இருந்துள்ளது.
தவிர, கடல் எல்லைத் தகராறு மற்றும் ‘யாசாத்’ பகுதியை ‘கடல்சார் பாதுகாக்கப்பட்ட பகுதி’யாக அறிவிப்பது போன்ற விவகாரங்களிலும் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயங்களில் சில ஆய்வாளர்கள் இதனை வளைகுடா பிராந்தியத்தின் இந்த இரு சக்திகளுக்கும் இடையே நடக்கும் ‘அமைதியான போட்டி’ என்று கூறுகின்றனர்.
இத்தகைய இழுபறிகளைக் கருத்தில் கொள்ளும்போது, ‘கல்ஃப் நேட்டோ’வை உருவாக்கும் சிந்தனை எந்த அளவிற்கு உண்மையாக முடியும் மற்றும் இதில் என்ன தடைகள் வரக்கூடும்?
ஜிசிசி தலைமையில் ஒரு இராணுவ மற்றும் பாதுகாப்புத் தொழில் தளத்தை உருவாக்கும் இலக்கு எவ்வளவு நடைமுறைக்குச் சாத்தியமானது மற்றும் இதற்கு அமெரிக்காவின் சாத்தியமான எதிர்வினை என்னவாக இருக்கும்?
வளைகுடா நாடுகள் துருக்கி, பாகிஸ்தானுடன் இராணுவ மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க விரும்பினால், பாகிஸ்தான் உண்மையில் எந்த அளவிற்கு இந்தப் பாத்திரத்தை வகிக்க முடியும்?
கத்தாரின் முன்னாள் பிரதமர் என்ன கூறினார்?
பட மூலாதாரம், Thomas Koehler/Photothek via Getty Images
கத்தாரின் முன்னாள் பிரதமர் அரசியல் மற்றும் இராணுவக் கூட்டணியின் கருத்தை முன்னெடுத்துச் செல்லும்போது, “நமது பிராந்தியத்தின் தற்போதைய போர் எப்போதாவது ஒரு நாள் முடிவுக்கு வரும், ஆனால் இதிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வது அவசியம்” என்றார்.
அவர் ‘எக்ஸ்’ தளத்தில், “வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் ஒற்றுமையுடனும் ஒருமைப்பாட்டுடனும் நேட்டோ போன்ற ஒரு பயனுள்ள மற்றும் உண்மையான இராணுவ மற்றும் பாதுகாப்பு கூட்டணியை உருவாக்க வேண்டும்” என்று எழுதினார். இதில் “செளதி அரேபியா மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்க வேண்டும், ஏனெனில் அதுதான் மிகப்பெரிய நாடு” என்று அவர் முன்மொழிந்தார்.
போர் முடிவடையும் வரை காத்திருக்காமல் தயாரிப்புப் பணிகளைத் தொடங்க வேண்டும் என்றும், மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கக் கருத்து வேறுபாடுகளைக் களைய வேண்டும் என்றும் ஹமத் பின் ஜாசிம் வலியுறுத்தினார்.
அவர் இரான் நாட்டை உதாரணமாகக் காட்டி, “தடைகள் இருந்த போதிலும் அது ஏவுகணைத் தொழிற்சாலையை நிறுவியது மற்றும் துரதிர்ஷ்டவசமாக அதே ஏவுகணைகளால் வளைகுடா நாடுகள் குறிவைக்கப்பட்டன” என்றார்.
இருப்பினும் இந்தப் போரின் பொறுப்பு இஸ்ரேலையே சாரும் என்றும், “அது பிராந்தியத்தில் இராணுவ, பொருளாதார மற்றும் அரசியல் மேலாதிக்கத்தைப் பெற நெருப்பைத் தூண்டியது” என்றும் அவர் கூறினார்.
வளைகுடா நாடுகள் இஸ்ரேல் மற்றும் இரான் ஆகிய இரு நாடுகளுக்கும் எதிராக ஒன்றிணைய வேண்டும் என்று ஹமத் பின் ஜாசிம் பரிந்துரைத்தார்.
அவர், “இரான் அண்டை நாடு, எனவே அதனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தெளிவான உத்தி அவசியம், அதேநேரத்தில் இஸ்ரேலுடனான உறவுகள் நல்ல அண்டை உறவு மற்றும் பாலத்தீன உரிமைகளைப் பாதுகாப்பதன் அடிப்படையில் இருக்க வேண்டும்” என்று எழுதினார்.
இறுதியாக, வளைகுடா கவுன்சில் நாடுகள் தாக்கப்பட்ட போதிலும் பல அரபு நாடுகளின் மௌனம் ஆச்சரியமளிப்பதாக அவர் கூறினார்.
“இதே நிலைதான் துருக்கி மற்றும் பாகிஸ்தானுடன் வலுவான உறவைக் கொண்ட ஒரு இராணுவ, பாதுகாப்பு மற்றும் புவியியல் கூட்டணியை உடனடியாக உருவாக்க வளைகுடா நாடுகளைத் தூண்டுகிறது, ஆனால் அது தனது ‘மண்ணின் மைந்தர்களையும்’ நம்ப வேண்டும்” என்றார் அவர்.
சமூக வலைதளங்களில் விவாதம்
பட மூலாதாரம், KAY NIETFELD/AFP via Getty Images
ஹமத் பின் ஜாசிமின் சமூக வலைதளப் பதிவு ஒரு புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளது.
ஜெட்டாவில் வசிக்கும் பத்திரிகையாளர் சலே அல்-பஹீத் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கும்போது, “சிறிய நாடுகள் பெரிய நாடுகளிடமிருந்து தலைமையைப் பறிக்க முயலும்போது உடன்பாடும் கூட்டணியும் எப்படிச் சாத்தியம்? சிறிய நாடுகள் பெரிய நாடுகளுக்கு எதிராக வெறுப்பு மற்றும் தலையீட்டுக் கொள்கையைத் தொடரும்போது ஒற்றுமையும் சமரசமும் எப்படி ஏற்படும்?” என்று கேள்வி எழுப்பினார்.
அவர் ‘எக்ஸ்’ தளத்தில், “பல ஆண்டுகளாக செளதி அரேபியா துணிச்சலுடனும் உறுதியுடனும் இரானிய திட்டங்களுக்கு எதிராக நின்று அதன் விரிவாக்கத்தைத் தடுக்கப் பலவற்றை அனுபவித்தது, அதே நேரத்தில் சிலர் தெஹ்ரானை நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர். அதனுடன் ரகசிய ஒப்பந்தங்களைச் செய்து கொண்டு, இரான் உடனான உறவுகள் உட்பட மற்ற விஷயங்களில் செளதி அரேபியாவைச் சிக்க வைத்தனர்” என்று எழுதினார்.
“நீங்கள் மிகவும் அழகான விஷயத்தைப் பேசினீர்கள், ஆனால் வளைகுடாவின் சிறிய நாடுகள் உண்மையில் இதற்குத் தயாராக உள்ளனவா?” என்று ஹமத் பின் ஜாசிமிடம் சலே அல்-பஹீத் கேட்டார்.
கத்தாரின் மூத்த இராஜதந்திரி ஹமத் பின் அப்துல்அஜிஸ் அல்-குவாரி, ஹமத் பின் ஜாசிமுடன் உடன்பட்டு, “பிராந்தியத்தின் சோதனை ஒரு தற்காலிக நெருக்கடி மட்டுமல்ல, அது நமது அடையாளம், திசை மற்றும் எதிர்காலத்தைச் சோதித்த ஒரு வாழ்வாதாரத் தேர்வாகும்” என்று எழுதினார்.
வளைகுடா நாடுகள் தங்கள் பாதுகாப்பு மற்றும் உத்தி ரீதியான கூட்டணியை மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும், பாகிஸ்தான் மற்றும் துருக்கி போன்ற ‘இஸ்லாமியச் சகோதரர்களுடன்’ கூட்டாண்மையை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
செளதி அரேபியாவிலிருந்து பதர் என்ற பயனர் கருத்திடும்போது, “செளதி அரேபியா யாருடைய பாதுகாப்பையும் தேடும் நாடு அல்ல. இது அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் தனது பாதுகாப்பையும் தனது நலன்களையும் பாதுகாக்கும் திறன் கொண்டது, இதற்கு எந்த வளைகுடா இராணுவக் கூட்டணியும் தேவையில்லை. மாறாக, மற்ற சிறிய வளைகுடா நாடுகள் செளதி அரேபியா இல்லாமல் தனியாக நிற்க முடியாது” என்று எழுதினார்.
அவர் தொடர்ந்து, “யாராவது செளதி அரேபியாவின் நிழலில் தஞ்சம் அடைய விரும்பினால், அவர்களுக்கான கதவு திறந்திருக்கிறது. ஆனால் யாராவது இரான் நாட்டின் அடைக்கலத்தை விரும்பினால் விளைவுகளையும் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும். கத்தார் முன்பு அப்படிச் செய்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இஸ்ரேலைத் தனது பாதுகாப்பு உத்தரவாதமாகக் கருதி அதனுடன் சென்றது” என்றார்.
சிலர் ஹமத் பின் ஜாசிம் பிராந்திய நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களைப் பற்றிப் பேசாதது குறித்து அதிருப்தி தெரிவித்தனர், ஏனெனில் “அனைத்துப் பிரச்சனைகளும் இங்கிருந்துதான் தொடங்குகின்றன. அமெரிக்காவிடம் அரபுகள் மண்டியிடுவது நிறுத்தப்பட வேண்டும்.” என்று கூறினர்.
அதே நேரத்தில் பாகிஸ்தான் பயனர்கள், “திடீரென்று அனைவருக்கும் பாகிஸ்தானுடன் இராணுவக் கூட்டணி தேவைப்படுகிறது…” என்று கருத்துத் தெரிவிக்கின்றனர்.
அரபு நாடுகளில் வரலாற்றுப் பகை மற்றும் ‘வளைகுடா நேட்டோ’ கனவு
பட மூலாதாரம், Getty Images
செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கத்தார் இடையிலான வரலாற்றுப் பகையைக் கருத்தில் கொள்ளும்போது ‘வளைகுடா நேட்டோ’ உருவாக்கம் எந்த அளவிற்கு உண்மையாக முடியும் மற்றும் எந்தப் பெரிய சவால்கள் அதன் பாதையில் தடையாக இருக்கும்?
மெஹ்ரான் காம்ராவா, கத்தாரில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகப் பேராசிரியராகவும், அரபு ஆய்வு மற்றும் கொள்கை ஆய்வுகளுக்கான மையத்தின் ஆராய்ச்சிப் பிரிவு இயக்குநராகவும் உள்ளார்.
அவரது கூற்றுப்படி, “வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் ஏதேனும் நெருக்கடியைச் சந்திக்கும் போதெல்லாம் அது ஒரு அலகாக இணைந்து செயல்படுகிறது என்பதை வரலாறு நமக்குக் காட்டியுள்ளது. வெளியுலகின் பார்வையில், இரான்-இராக் போர் நடந்தபோதுதான் ஜிசிசி உருவானது. அந்த போரில் வெற்றி பெறும் நாடு ஜிசிசி அல்லது அதன் உறுப்பு நாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமையலாம் என்று கருதப்பட்டது. போர் முடிந்த உடனேயே இராக் உண்மையில் ஜிசிசி உறுப்பினர் ஒருவரை (இராக் போர் நடந்த சமயத்தில் குவைத்) தாக்கியதை நாம் பார்த்தோம்.”
பிபிசி உருதுவிடம் பேசிய மெஹ்ரான் காம்ராவா, “தொடக்கத்திலிருந்தே ஜிசிசி நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் உருவானது மற்றும் நெருக்கடியின் போது அது ஒரு ஒருங்கிணைந்த அலகாகச் செயல்படுகிறது. ஆனால் வெளி நெருக்கடி குறையும் போது ஜிசிசியின் அணுகுமுறை மாறுகிறது. இந்தத் தற்போதைய நெருக்கடி வாழ்வாதாரத்திற்கான ஒரு முக்கியமான மற்றும் நிலைகுலையச் செய்யும் நெருக்கடியாகக் கருதப்படுகிறது” என்கிறார்.
அவர் தொடர்ந்து, “ஜிசிசி தனது உறுப்பினர்களின் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் இராணுவப் பாதுகாப்பை உறுதி செய்ய ஏதேனும் நடவடிக்கை எடுத்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். அமெரிக்காவுடனான உறவை ஆழப்படுத்துவதாக இருந்தாலும் சரி, நேட்டோவில் சேருவது குறித்துப் பரிசீலிப்பதாக இருந்தாலும் சரி அல்லது இது போன்ற வேறு ஏதேனும் கூட்டணியை உருவாக்குவதாக இருந்தாலும் சரி” என்றார்.
சைமன் வொல்ப்காங் ஃபக்ஸ், ஜெருசலேமின் ஹீப்ரு பல்கலைக்கழகத்தில் ‘தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கில் இஸ்லாம்’ துறையின் இணைப் பேராசிரியராக உள்ளார். அவர் கத்தாரின் முன்னாள் பிரதமரின் கூற்றை அசாதாரணமானது எனக் கருதுகிறார், ஏனெனில் “இதில் போருக்கு இஸ்ரேல் மற்றும் இரான் ஆகிய இரு நாடுகளையும் சமமாகப் பொறுப்பேற்கச் செய்துள்ளார் மற்றும் வளைகுடா நாடுகள் இதில் எப்படிச் சிக்கியுள்ளன என்பதை விளக்கியுள்ளார்.”
அவரது கூற்றுப்படி, “இதில் எந்த சந்தேகமும் இல்லை, இது வளைகுடா நாடுகளைத் தனியாக விட்ட, அவர்களுக்கு முன்னதாக எந்தத் தகவலும் அல்லது எச்சரிக்கையும் அளிக்காத மற்றும் போரின் போது அவர்களுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகளை மீண்டும் வழங்கத் தயாராக இல்லாத அமெரிக்கா மீதான மறைமுக விமர்சனமும் ஆகும்.”
பிபிசி உருதுவிடம் பேசிய சைமன், “இஸ்ரேல் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களின் பாதுகாப்புக்குத் தங்களை விட முன்னுரிமை அளிக்கப்பட்டது என்ற உணர்வு வளைகுடா நாடுகளில் காணப்படுகிறது. அமெரிக்காவுடன் நீண்டகால கூட்டணி இருந்தாலும், பில்லியன்கணக்கான டாலர் மதிப்புள்ள ஆயுதங்கள் வாங்கப்பட்டு பாதுகாப்பிற்காக அமெரிக்காவை நம்பி இருந்தாலும், நெருக்கடியின் போது அது உதவவில்லை” என்றார்.
அவரது கூற்றுப்படி, “அரபு நாடுகளில் இந்த உணர்வு மிகவும் தெளிவாகவும் ஆழமாகவும் உள்ளது மற்றும் இதனைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.”
கத்தார் மீது செளதி அரேபியா விதித்த தடையின் பின்னணியில் செளதி அரேபியாவின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்வதும் அசாதாரணமானது என்று சைமன் கூறுகிறார்.
“இது ஏதோ மாறிவிட்டது என்பதையும் வளைகுடா நாடுகள் உண்மையில் கவலை கொண்டுள்ளன என்பதையும் காட்டுகிறது. தாங்கள் ‘நிலைத்தன்மையின் தீவு’ என்றும் தங்களைச் சுற்றி இரான், இராக், சிரியா, யேமன், இஸ்ரேல் மற்றும் பாலத்தீன மோதல்களிலிருந்து தனித்து இருக்கலாம் என்றும் அவர்கள் நீண்ட காலமாக நம்பிக் கொண்டிருந்தார்கள்.” அவரது கூற்றுப்படி இந்த உணர்வு இப்போது அனைத்து நாடுகளிலும் பொதுவாக உள்ளது.
இருப்பினும் அவர், “இத்தகைய கூட்டணி நடைமுறைக்குச் சாத்தியமானது என்று நான் நினைக்கவில்லை” என்றும் கூறுகிறார்.
அவர் செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையிலான பதற்றமான உறவுகள் மற்றும் சூடான் மற்றும் லிபியா போன்ற பகுதிகளில் நிலவும் பெரிய இழுபறிகளை உதாரணமாகக் கூறி, “செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே ஆதிக்கப் போட்டி முடிவுக்கு வராது. இராணுவ ரீதியாக செளதி படை எமிரேட்ஸை விட மிகவும் வலிமையானது. எமிரேட்ஸிடம் 65,000 வீரர்கள் மட்டுமே உள்ளனர்” என்றார்.
“பின்னர் இஸ்ரேலுடனான கூட்டணி குறித்த கேள்வி உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் ஆகியவை ஆபிரகாம் ஒப்பந்தங்களில் (Abraham Accords) இணைந்தன, அதே சமயம் செளதி அரேபியா தொடர்ந்து பாலத்தீன நாடு அமைப்பதில் உறுதியாக உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் காஸாவின் நிர்வாகத்தைப் பொறுப்பேற்கத் தயார் என்று பரிந்துரைத்தது, இது செளதி அரேபியாவிற்கு உடன்பாடானது அல்ல. எனவே இந்த இரு பெரிய ஆட்டக்காரர்களும் ஒன்றிணைந்து செயல்பட முடியாது. குவைத், பஹ்ரைன், ஓமன் மற்றும் கத்தார் போன்ற சிறிய நாடுகள் ஒருவேளை இணையலாம், ஆனால் ஒட்டுமொத்தமாக ‘கல்ஃப் நேட்டோ’ கடுமையான கருத்து வேறுபாடுகள் காரணமாகச் சாத்தியமில்லை.”
பிரிட்டன் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் மத்திய கிழக்கு விவகார நிபுணரும் ‘கிங் பைசல் ஆய்வு மற்றும் இஸ்லாமிய ஆய்வுகள் மையத்தின்’ இணை ஆய்வாளருமான உமர் கரீமும் சைமன் மற்றும் மெஹ்ரானுடன் உடன்பட்டு, ‘கல்ஃப் நேட்டோ’ கருத்தை ‘முற்றிலும் சாத்தியமற்றது’ என்று கூறுகிறார்.
பிபிசி உருதுவிடம் பேசிய உமர், “இந்த விஷயம் திறன் மற்றும் நோக்கம் ஆகிய இரண்டையும் சார்ந்தது, இது இந்த நடவடிக்கையை சாத்தியமற்றதாக மாற்றுகிறது” என்கிறார்.
வளைகுடா நாடுகளில் வலுவான நோக்கமின்மை, தலைமை குறித்த கருத்து வேறுபாடுகள் மற்றும் வெளிநாட்டு சக்திகள் மற்றும் வெளிநாட்டு ஆயுதங்களை நம்பியிருப்பதால் இது சாத்தியமில்லை என்று உமர் கருதுகிறார்.
‘அமெரிக்கா மீதான சார்பு விரைவில் முடிவுக்கு வருவது கடினம்’
பட மூலாதாரம், Getty Images
ஜிசிசி தலைமையில் இராணுவ மற்றும் பாதுகாப்புத் தொழில் தளத்தை உருவாக்கும் இலக்கு எவ்வளவு சாத்தியமானது மற்றும் அமெரிக்கா இதற்கு எப்படிப் பதிலளிக்கலாம்?
இதைப் பற்றி சைமன் வொல்ப்காங் ஃபக்ஸ் கருத்து தெரிவிக்கையில், தொழில் தள விவகாரமும் சிக்கலானது என்கிறார். “வளைகுடா நாடுகள் சுற்றுலா, போக்குவரத்து மற்றும் உயர் தொழில்நுட்பத் துறைகளில் கவனம் செலுத்தியுள்ளன, ஆனால் அவர்களிடம் உண்மையான தொழில் தளம் இல்லை. இதற்குப் பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் உள்ளூர் உழைப்பாளர்கள் தேவை, அவை தற்போது அவர்களிடம் இல்லை,” என்று தெரிவித்தார்.
“தேசியப் பாதுகாப்பு மற்றும் ஆயுதங்கள் தயாரிப்பு என்று வரும்போது வெளிநாட்டுப் பணியாளர்களை நம்பி இருக்க முடியுமா? இதுவும் சந்தேகத்திற்குரியதே. எனவே தற்போதும் எதிர்காலத்திலும் அமெரிக்கா மீதான சார்பு தொடரும், ஏனெனில் மாற்று வழிகள் இல்லை மற்றும் வளைகுடா படைகள் அமெரிக்க ஆயுதங்களையே நம்பியுள்ளன” என்று சைமன் கூறுகிறார்.
மற்ற கூட்டணிகள் குறித்துப் பேசும் உமர் கரீம், இதன் உள்கட்டமைப்பை உருவாக்கக் குறைந்தது பத்து ஆண்டுகள் ஆகும் என்றும் ஒருவேளை 20-30 ஆண்டுகள் கூட ஆகலாம் என்றும் கூறுகிறார். அதன் பிறகே இதன் அடிப்படை தயாராகும், அதுவும் மற்ற சக்திகளின் உதவியுடன் மட்டுமே, தனியாக அல்ல. எனவே இது ஒரு பகற்கனவு மட்டுமே என்றும் அமெரிக்கா இதில் அதிக கவனம் செலுத்தாது என்றும் கூறலாம்.
பேராசிரியர் மெஹ்ரான் காம்ராவாவுக்கும் இத்தகைய தொழில் தளம் உருவாகும் என்பதில் நம்பிக்கை இல்லை, ஏனெனில் அவரது கூற்றுப்படி “அந்த நாடுகளுக்கு இடையே இராணுவத் திறன் முதல் தலைமை மற்றும் கட்டுப்பாடு வரையிலான விஷயங்களில் கடும் போட்டியும் கருத்து வேறுபாடும் உள்ளது.”
கோட்பாட்டு ரீதியாகவோ அல்லது வாய்மொழியாகவோ இந்த நாடுகள் ஒன்றிணையலாம் “ஆனால் ஒரு தொழில்முறை இராணுவத் தளத்திற்கு நீண்டகாலத் திட்டம், முதலீடு, தளவாடங்கள் மற்றும் நடைமுறைச் சூழல்கள் தேவை, இவை அனைத்தும் தற்போது நடைமுறைக்குச் சாத்தியமாகத் தெரியவில்லை” என்று மெஹ்ரான் காம்ராவா கருதுகிறார்.
பாகிஸ்தான் எவ்வாறு பங்களிக்க முடியும்?
பட மூலாதாரம், Andrew Harnik/Getty Images
வளைகுடா நாடுகள் துருக்கி மற்றும் பாகிஸ்தானுடன் இராணுவ மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் தீவிரப்படுத்த விரும்பினால், பாகிஸ்தான் என்ன பாத்திரத்தை வகிக்க முடியும்?
அரசியல் மற்றும் திறன் அடிப்படையில் பாகிஸ்தான் சில வரம்புகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாக உமர் கரீம் கூறுகிறார்.
“ஒருபுறம் பாகிஸ்தானின் சொந்த பாதுகாப்புத் தொழில் தளம் அவ்வளவு வளர்ச்சியடையவில்லை மற்றும் நவீன இராணுவத் தொழில்நுட்பம் மற்றும் ஆயுதங்களுக்காக அது சீனாவை அதிகம் நம்பியுள்ளது. எனவே பாகிஸ்தான் வளைகுடா நாடுகளுக்கு எதையாவது வழங்கினால், அதன் அர்த்தம் சீனத் தொழில்நுட்பம் மற்றும் ஆயுதங்கள் மறைமுகமாக வளைகுடா சந்தைகளுக்குச் செல்லும் என்பதாகும். தவிர, தற்போது பாகிஸ்தானின் பாதுகாப்பு உறவுகள் வளைகுடாவில் முக்கியமாகச் செளதி அரேபியாவுடன் மட்டுமே உள்ளன. இதன் அர்த்தம் ஆயுதங்களை விற்பதற்கான சந்தை பெரும்பாலும் செளதி அரேபியாவில்தான் கிடைக்கும்.”
அவரது கூற்றுப்படி, “மறுபுறம் துருக்கியிடம் ஒப்பீட்டளவில் மேம்பட்ட பாதுகாப்புத் தொழில் தளம் உள்ளது மற்றும் அது வளைகுடா நாடுகளுடன் கூட்டு உற்பத்தித் திட்டங்களில் ஈடுபட முடியும். அத்துடன் தொழில்நுட்பப் பரிமாற்ற ஒப்பந்தங்கள் மூலம் வளைகுடா நாடுகளில் உள்ளூர் அளவில் ஆயுத உற்பத்தியும் சாத்தியமாகும்.”
வளைகுடா நாடுகள் பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய இரு நாடுகளிலும் புதிய திட்டங்களில் முதலீடு செய்யலாம், இது அவர்களின் பாதுகாப்புத் துறையை ஊக்குவிக்கும் என்று உமர் கூறுகிறார். தவிர, உள்ளூர் அளவில் பாதுகாப்பு தொடர்பான தளவாடங்களைப் பெரிய அளவில் தயாரிக்கவும் இது உதவும்.
இதைப் பற்றிச் சைமன் வொல்ப்காங் ஃபக்ஸ் கூறுகையில், “பாகிஸ்தான் பாரம்பரியமாக வளைகுடா முடியாட்சிகளுக்கு மனித சக்தியை வழங்கியுள்ளது, ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. செளதி அரேபியா தனது இராணுவத்தில் பெருமளவு முதலீடு செய்துள்ளது மற்றும் அது தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) ஏழு சதவீதத்தைப் பாதுகாப்பிற்காகச் செலவிடுகிறது. எனவே இப்போது பாகிஸ்தான் வீரர்களை நம்பி இருக்க வேண்டிய அவசியம் அதற்கு இல்லை.”

பாகிஸ்தான் இராணுவம் பயிற்சி பெற்ற மற்றும் பயனுள்ள படை என்றும் நெருக்கடி நிலையில் பங்காளியாக முடியும் என்றும் சைமன் கருதுகிறார். “ஆனால் பாகிஸ்தான் இரான் மற்றும் வளைகுடா நாடுகள் ஆகிய இரு தரப்புடனும் நல்ல உறவைக் கொண்டுள்ளது மற்றும் அது யேமன் போன்ற மோதல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கிறது. அதேபோல் துருக்கியும் இரானுடன் உறவு கொண்டுள்ளதுடன் நேட்டோ உறுப்பினராகவும் உள்ளது.”
துருக்கியைப் பொறுத்தவரை, அமெரிக்காவின் செல்வாக்கில் இல்லாத எந்தவொரு திட்டத்திலும் துருக்கி ஈடுபடுவதை நேட்டோ ஏற்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று சைமன் கருதுகிறார்.
மெஹ்ரான் காம்ராவாவும் சைமனுடன் உடன்பட்டு, பயிற்சி மற்றும் தலைமை மற்றும் கட்டுப்பாடு விஷயங்களில் பாகிஸ்தான் முக்கியப் பங்கு வகிக்க முடியும் என்கிறார். “ஆனால் தற்போதைய மோதலில் பார்த்தபடி, அமெரிக்காவின் போர்களில் ஈடுபட பாகிஸ்தான் தயங்குகிறது.”
இரான் நாட்டிற்கு எதிரான எந்தவொரு இராணுவ நடவடிக்கையிலும் பாகிஸ்தானின் நடைமுறைப் பங்களிப்பைத் தான் பார்க்கப் போவதில்லை என்று மெஹ்ரான் காம்ராவா கருதுகிறார், ஏனெனில் “பாகிஸ்தான் இரானுடன் நீண்ட எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது மற்றும் இந்த விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக உள்ளது.”
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு