
-
- எழுதியவர், சேவியர் செல்வகுமார்
- பதவி, பிபிசி தமிழ்
-
“காலையில் இருந்து வந்த யாருமே அங்கிருந்து செல்லவில்லை. கூட்ட நெரிசலில் சிக்கிய நான் சில இளைஞர்களின் உதவியால் தப்பினேன்.” என கூட்ட நெரிசலில் சிக்கிய துர்காதேவி பிபிசியிடம் தெரிவித்தார்.
“யாருக்கும் உணவு, தண்ணீர் கிடைக்கவில்லை. குழந்தைகளும் மயக்கமடைந்ததை என் கண்களால் பார்த்தேன்,” என்கிறார் கரூர் கூட்ட நெரிசலை நேரில் கண்ட லட்சுமி.
கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்தனர். மேலும் பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
கூட்ட நெரிசல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் தெரிவித்துள்ளார்.
கரூரில் மதியம் 12 மணிக்கு கூட்டம் நடத்த அனுமதி வாங்கியிருந்த நிலையில் மாலை வேளையில் தான் விஜய் அங்கு சென்றுள்ளார். சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் பிபிசி தமிழ் பேசியது.
‘உணவு, தண்ணீர் தட்டுப்பாடு’

தவெக கூட்டத்தில் கலந்து கொண்ட வேலுச்சாமிபுரத்தைச் சேர்ந்தவரான துர்கா தேவி தான் நூலிழையில் கூட்ட நெரிசலில் இருந்து தப்பியதாகக் குறிப்பிடுகிறார். “காலை நேரத்தில் கூட்டம் அளவாகவே இருந்தது. விஜயின் வருகை தாமதம் ஆகவே கூட்டம் அதிகரித்தது. வெளியூர் மக்கள் அதிகளவில் வந்திருந்தனர். நேற்று பிரசார கூட்டம் நடைபெற்றதால் கடைகள், உணவகங்கள் அடைக்கப்பட்டிருந்தன. அதனால் வெளியூரிலிருந்து வந்தவர்களுக்கு உணவும் தண்ணீரும் கிடைக்கவில்லை. மாலை கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கு முன்பாகவே பலர் மயக்கமடைந்தனர்.” என்றார்.
சில இளைஞர்கள் உதவியால் தான் உயிர்பிழைத்ததாக குறிப்பிடும் துர்கா தேவி, “காலையில் இருந்து வந்தவர்கள் யாருமே அங்கிருந்து கலைந்து செல்லவில்லை. நேரம் ஆகஆக கூட்டம் சேர்ந்து கொண்டே இருந்தது. மாலையில் கட்டுக்கடங்காத அளவிலான கூட்டம் சேர்ந்ததால் நெரிசல் ஏற்பட்டது. நானும் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டேன். எங்கள் ஊரைச் சேர்ந்த சில இளைஞர்கள் நான் ஒரு கட்டடத்தின் மீது ஏற உதவி செய்தார்கள். அதனால் காயமின்றி பிழைத்தேன்.” என்றார்.

மயக்கமடைந்த குழந்தைகள்
கூட்ட நெரிசலுக்கு முன்பே குழந்தைகள் பலரும் மயக்கமடைந்ததை தன் கண்களால் பார்த்ததாகக் குறிப்பிடுகிறார் அதே ஊரைச் சேர்ந்தவரான லட்சுமி.
பிபிசியிடம் பேசிய அவர், “காலையில் பெரிய அளவிலான கூட்ட நெரிசல் இல்லை. முதலில் ஏற்பாடுகள் சரியாகவே இருந்தது. ஆனால் கூட்டம் அதிகரிக்கவே யாராலும் சமாளிக்க முடியவில்லை. பல குழந்தைகளும் மயக்கமடைந்ததை என் கண்களால் பார்த்தேன்.” எனத் தெரிவித்தார்.

காலையிலிருந்தே கர்ப்பிணி பெண்களும் குழந்தைகளும் காத்திருந்ததாக கூறுகிறார் அதே ஊரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரான ஆனந்த் குமார்.
“கரூரில் இதுபோன்ற கூட்டத்தை நான் பார்த்ததில்லை. விஜய் மாலை தான் வந்தாலும் மதியத்திலிருந்தே கூட்டம் நிறைந்து காணப்பட்டது. கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளை எவ்வாறு அழைத்து வந்தார்கள் எனத் தெரியவில்லை.” என்றார் அவர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு