ஷார்ஜா: நடப்பு மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் நியூஸிலாந்து அணியை 60 ரன்களில் வீழ்த்தியுள்ளது ஆஸ்திரேலிய அணி.
ஷார்ஜாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. பெத் மூனி 40 ரன்கள் மற்றும் எல்லிஸ் பெர்ரி 30 ரன்கள் எடுத்தனர். கேப்டன் அலிசா ஹீலி, 26 ரன்கள் எடுத்தார்.
149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்கை நியூஸிலாந்து அணி விரட்டியது. அமெலியா கெர் மற்றும் சூசி பெட்ஸ் இணைந்து 47 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பிறகு நியூஸிலாந்து அணியால் ரன் குவிக்க முடியவில்லை. 19.2 ஓவர்கள் முடிவில் 88 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது அந்த அணி. இதன் மூலம் ஆஸ்திரேலியா 60 ரன்களில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் ஆஸி வீராங்கனை மேகன் ஷட் 3.2 ஓவர்கள் வீசி 3 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். பிளேயர் ஆப் தி மேட்ச் விருதையும் அவர்தான் வென்றார். அனபெல் 3, சோபி 2 மற்றும் ஜார்ஜியா, தஹ்லியா மெக்ராத் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் ‘குரூப் ஏ’ பிரிவில் 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தான், நியூஸிலாந்து, இந்தியா மற்றும் இலங்கை அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.