நார்வே செஸ் முதல் சுற்றில் குகேஷை வீழ்த்தினார் கார்ல்சன் | Norway Chess: Magnus Carlsen defeats Gukesh in opening round

Share

நார்வே செஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷை வீழ்த்தினார்.

நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி அந்நாட்டில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகிறது. 6 வீரர்கள் கலந்து கொண்டுள்ள இந்தத் தொடரின் முதல் சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷுடன் மோதினார்.

இதில் கார்ல்சன் வெள்ளை காய்களுடனும், குகேஷ் கருப்பு காய்களுடனும் விளையாடினார்கள். 4 மணி நேரத்துக்கும் மேல் நீடித்த இந்த ஆட்டத்தில் 55-வது நகர்த்தலின் போது குகேஷ் செய்த தவறு காரணமாக கார்ல்சன் வெற்றி பெற்றார்.

முதல் சுற்றின் முடிவில் கார்ல்சன் 3 புள்ளிகளுடன் முதலிடத்தை 2-ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர், தனது முதல் சுற்றில் சகநாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான பேபியானோ கருனாவை தோற்கடித்தார். இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜூன் எரிகைசி, சீனாவின் முதல் நிலை வீரரான வெய் யி மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

கிளாசிக்கல் ஆட்டம் டிராவில் முடிவடைந்தால் வெற்றியை தீர்மானிக்க அர்மகேடான் விளையாட்டு நடத்தப்படும். இதில் அர்ஜூன் எரிகைசி வெற்றி பெற்றார். இதனால் அவருக்கு 1.5 புள்ளிகள் வழங்கப்பட்டது. வெய் யி ஒரு புள்ளியை கைப்பற்றினார். மகளிர் பிரிவில் இந்தியாவின் ஹோனேரு ஹம்பி, சகநாட்டைச் சேர்ந்த ஆர்.வைஷாலியை தோற்கடித்தார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com