பட மூலாதாரம், Getty Images
பிப்ரவரி 27 அன்று தமிழ் நாளிதழ்கள் மற்றும் இணைய செய்தி ஊடகங்களில் வெளியான முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியின் கழிவறையில் 9-ஆம் வகுப்பு மாணவர் ஒருவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
இறந்த மாணவர், ராசிபுரத்தில் உள்ள எல்.ஐ.சி. காலனியில் வசித்து வந்த பி. கவின்ராஜ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
“கவின்ராஜ் புதன்கிழமை அன்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார். கழிப்பறைக்கு சென்ற அவர் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராத சூழலில் அவருடைய வகுப்பைச் சேர்ந்த மற்றொரு மாணவர் கழிப்பறைக்கு சென்று பார்த்துள்ளார்.
அங்கே கவின் சுயநினைவு ஏதுமின்றி இருந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அவர் அவசரமாக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கவின் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் என்று காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கவினின் உடலை பார்க்க மருத்துவமனைக்கு விரைந்த அவரின் பெற்றோர்கள், தங்களின் மகன் உடலை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கே சர்ச்சை நிலவியது. காவல்துறையினர் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
காவல்துறையின் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக” அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருமணம் செய்துகொள்வதாக பொய் சத்தியம் கூறி உறவில் ஈடுபட்டவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 18 வயதுக்குட்பட்ட பெண்ணுடன் பாலியல் ரீதியாக உறவு வைத்துக் கொண்ட ஆணுக்கு வழங்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தது, மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை.
பொய்யான சத்தியத்தின் பேரில் நடந்த உடலுறவுக்கு அந்த பெண் அளித்த ஒப்புதல் செல்லுபடியாகாது என்றும் அந்த தீர்ப்பில் நீதிபதி ஊர்மிலா ஜோஷி பால்கே அறிவித்துள்ளார் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழ் தன்னுடைய செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
திருமணம் செய்து கொள்வதாக கூறி உறவில் ஈடுபட்ட ஆணுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டிருந்ததை எதிர்த்து அந்த ஆண் உயர் நீதிமன்றத்தை நாடினார். அப்பெண் இந்த நபரை ஒருதலைபட்சமாக காதலித்ததாகவும், அவருடைய சொந்த விருப்பத்தின் பேரிலேயே உடலுறவில் ஈடுபட்டதாகவும் அந்த நபர் தன் வாதத்தை முன்வைத்தார் என அச்செய்தி குறிப்பிடுகிறது.
பட மூலாதாரம், Getty Images
“16 வயதுக்குட்பட்ட பெண்ணின் ஒப்புதல் என்பது சட்டரீதியாகவே செல்லுபடியாகாது என்று கூறிய நீதிமன்றம் திருமணம் செய்து கொள்வதாக கூறி அந்த பெண்ணை அந்நபர் தவறாக வழிநடத்தியுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மே 11, 2019 அன்று 16 வயது இளம் பெண் அளித்த புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது காவல்துறை. சிறப்பு போக்ஸோ நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஆணுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இருவரின் ஒப்புதலின் பேரில் தான் இந்த உறவு இருந்தது என்று கூறி இத்தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் அவர்” என்கிறது அந்த செய்தி.
“ஆரம்ப காலம் தொட்டே குற்றம்சாட்டப்பட்ட நபர் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்று குறிப்பிட்ட நீதிபதி, இது வெறுமனே சத்தியத்தை மீறும் செயலல்ல. இது ஒருவரை மயக்கும் வேலையும் கூட. பொய்யான சத்தியம் அளிக்கப்பட்டது. மேலும் அந்த பெண் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார். அந்த பெண் 16 வயது பூர்த்தியடையாத பெண் என்பதால் அவருடைய ஒப்புதல் இங்கு செல்லுபடியாகாது. திருமணம் செய்து கொள்வோம் என்று தவறாக அளிக்கப்பட்ட நம்பிக்கையின் அடிப்படையில் அந்த பெண் உடலுறவுக்கு ஒப்புக் கொண்டுள்ளார் என்று அந்த தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்,” என்று அந்த செய்தி தெரிவிக்கிறது.
அனைத்து பள்ளிகளிலும் தெலுங்கு பாடம் கட்டாயம் – மாநில அரசு உத்தரவு
தெலுங்கானாவில் அனைத்து பள்ளிகளிலும் 2025-26-ம் கல்வி ஆண்டு முதல் தெலுங்கை கட்டாய பாடமாக்கி மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது என்று தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
தெலுங்கானாவில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களிலும் 1 முதல் 10-ம் வகுப்பு வரை தெலுங்கு பாடம் கட்டாயமாக்கப்பட்டு கடந்த 2018-ம் ஆண்டு அப்போதைய மாநில அரசு சட்டம் கொண்டு வந்தது.
தெலுங்கானா (பள்ளிகளில் தெலுங்கு கற்பித்தல் மற்றும் கற்றல் கட்டாயம்) சட்டம் என்ற இந்த சட்டத்தை பல்வேறு காரணங்களால் முந்தைய பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி முழு வேகத்துடன் அமல்படுத்தவில்லை.
தற்போதைய காங்கிரஸ் அரசு இந்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி 2025-26-ம் ஆண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் தெலுங்கு மொழி பாடம் கட்டாயம் என அரசு உத்தரவிட்டு உள்ளது. 1 முதல் 10-ம் வகுப்பு வரை தெலுங்கு மொழி பாடம் கட்டாயம் எனவும், சி.பி.எஸ்.இ மற்றும் ஐ.சி.எஸ்.இ மற்றும் பிற வாரியங்களில் அடுத்த 2025-26-ம் கல்வி ஆண்டு முதல் 9 மற்றும் 10-ம் வகுப்புகளிலும் தெலுங்கு பாடத்தை கற்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
சி.பி.எஸ்.இ மற்றும் பிற கல்வி வாரியங்களில் பயிலும் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘எளிய தெலுங்கு’ பாடப்புத்தகமான ‘வெண்ணிலாவை’ தேர்வுக்கு பயன்படுத்த முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி முடிவு செய்துள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை – பேருந்து நிலையத்தை சூறையாடிய பொதுமக்கள்
மகாராஷ்டிர மாநிலம், புனேவில் உள்ள ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்துக்குள் 26 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார் என்று தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
“இதையடுத்து, பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக கூறி பேருந்துநிலையத்தை பொதுமக்கள் சூறையாடினா். இச்செயலில் ஈடுபட்ட நபா் தலைமறைவாக உள்ளதாகவும், ஏற்கெனவே குற்றப்பின்னணி கொண்ட அவரைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
பல்தான் நகருக்குச் செல்ல பேருந்துக்காகக் காத்திருந்தபோது அந்த பெண்ணை அணுகிய நபர் பேருந்து மற்றொரு நடைமேடைக்கு வந்தடைந்திருப்பதாகக் கூறியுள்ளார். அவரை தொடர்ந்து பின் சென்ற போது, வெறிச்சோடிய இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த காலி பேருந்தை அந்த நபர் காட்டியுள்ளார். நம்பிக்கை அளிக்கும் வகையில் அந்த ஆண் பேசியதால் அந்த பெண் அந்த பேருந்துக்குள் ஏறியதாகவும் அங்கே அவர் மீது பாலியல் ரீதியாக தாக்குதல் நடைபெற்றதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார் பாதிக்கப்பட்ட பெண்.
சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் அந்நபரை காவல்துறையினா் அடையாளம் கண்டனா். தத்தாராயா ராமதாஸ் கட்டே என்ற அந்த நபர் தலைமறைவாகியுள்ளார். அவரைப் பிடிக்க பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்” என அச்செய்தி குறிப்பிட்டுள்ளது.
அரசியல்மயப்படுத்தப்படாத அரசியலமைப்பு வேண்டும் – ரஜீவ் அமரசூரிய
இலங்கையில் அரசியல்மயப்படுத்தப்படாத அரசியலமைப்பு வேண்டும் என்று சட்டதரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரிய அறிவித்துள்ளார் என்று வீரகேசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
“அரசியலமைப்பில், குறிப்பாக நிறைவேற்றதிகாரத்தில் மேற்கொள்ளப்படும் தொடர் திருத்தங்கள், அரசியலமைப்புத்திருத்தங்கள் அரசியல்மயப்படுத்தப்படக்கூடிய அச்சுறுத்தலைக் காண்பிக்கின்றது.
பட மூலாதாரம், Virakesari
அரசியலமைப்பானது அரசியல் நலன்களுடன் பிணைந்ததாக இருக்கக்கூடாது. மாறாக அது ஒட்டுமொத்த மக்களினதும் கூட்டு நலனைப் பிரதிபலிப்பதாக அமையவேண்டும். எனவே நாம் முன்நோக்கிப் பயணிப்பதற்கு, இலங்கையில் சகலரையும் உள்ளடக்கிய, அரசியல்மயப்படுத்தப்படாத அரசியலமைப்பு உருவாக்க செயன்முறையொன்று முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்தவேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய வலியுறுத்தினார்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தினால் செவ்வாய்கிழமை (25) கொழும்பிலுள்ள ஜானகி ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு விசேட உரையாற்றுகையிலேயே ரஜீவ் அமரசூரிய மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.” என அச்செய்தி குறிப்பிடுகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு