லெஃப்ட் – ரைட் காம்பினேஷனில் களமிறங்கிய ரோகித்-தவான் ஓப்பனிங், வலுவான பௌலிங் குழு, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா -பாகிஸ்தான் மேட்ச்சின் வெற்றி என அந்த தொடரின் ஒவ்வொரு முக்கியமான விஷயங்களையும் ஆவணப்படுத்துகிறது இந்த நிகழ்ச்சி. நிகழ்ச்சியின் ஹைலைட் சாம்பியன்ஸ் டிராஃபியின் இறுதிப் போட்டி குறித்து விரிகிறது. திடீரென பெய்த மழை, அதனால் 20 ஓவர்களாக மாறிய போட்டி, எதிர்பாராத ரோகித் சர்மாவின் விக்கெட், அதனை பின் தொடர்ந்த விராட் கோலியின் அதிரடி 43 ரன்கள், பின்பு களமிறங்கிய இங்கிலாந்தின் பார்ட்னர்ஷிப், இந்திய பௌலர்கள் நிகழ்த்திய விக்கெட் வித்தைகள் என அனைத்து தருணங்கள் குறித்தும் நிகழ்ச்சியில் பேசிய வீரர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
இறுதியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அணியின் வெற்றியில் அனைவரின் பங்கும் இருந்தாலும், தோனியின் தலைமை அதில் மிக முக்கியமானது. முற்றிலும் புதிய இளம் அணியை ஏற்றது, ரோகித் சர்மாவை ஓப்பனராக களமிறக்கியது, ஓவர் தீர்மானிப்பது, ரன்கள் அள்ளித்தந்த இஷாந்த் சர்மா விக்கெட் எடுத்தது, ஸ்பின்னர்களுக்கு இறுதி இரண்டு ஓவர்கள் அளித்தது என பல இடங்களில் தோனியின் தலைமை வெற்றிக்கு வழிவகை செய்தது.