தொடர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 15 வயது சிறுமி; தாத்தா,தாய் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு பதிவு!

Share

திருச்சி மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ராகுல் காந்தி, குழந்தைகள் நலக் குழு தொடர்பான கோப்புகளை ஆய்வு செய்தார். அப்போதுதான், 15 வயது சிறுமிக்கு அவரது உறவினர்களே பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. கரூர் மற்றும் திருச்சியில் வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது கண்டறியப்பட்டு, 15 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, குழந்தைகள் பாதுகாப்பு துறை தரப்பில் விசாரித்தோம்.

“கரூர் மாவட்டத்தில் பெற்றோருடன் வசித்து வரும் 15 வயது சிறுமி கடந்த 2021- ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். கரூர் மற்றும் திருச்சி பகுதிகளில் அந்த சிறுமிக்கு இத்தகைய கொடுமை அரங்கேறியுள்ளது. இப்படி, தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அந்த சிறுமிக்கு, கடந்த 2023 – ம் வருடம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், அந்த குழந்தையை தனியார் மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு சென்றதால், மருத்துவமனை நிர்வாகத்தினர் போலீஸாரிடம் புகார் கொடுத்தனர். அதன்பிறகு, காவல்துறை அணுகியபோது அந்த சிறுமி தரப்பு குழந்தையை பெற்றுக்கொள்ள மறுத்ததால், திருச்சி மாவட்ட குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைத்துள்ளனர். அதன்பிறகு, இந்த விவகாரம் அப்படியே விடப்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் 23 – ம் தேதி குழந்தைகள் நலக்குழு சார்பில் விசாரணைக்கு ஆஜராகும்படி சிறுமியின் குடும்பத்தினருக்கு கடிதம் அனுப்பியதோடு, கடந்த 3 – ம் தேதி அந்த சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டோம்.

அந்த சிறுமியை அவரின் தாத்தா, அங்கிருந்த இளைஞர், மற்றொரு முதியவர், மற்றும் நெருங்கிய உறவினர்கள் என்று பலரும் தன்னை மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்ததாக, அந்த சிறுமி கூறினார். அதனைத் தொடர்ந்து, குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ராகுல் காந்தி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பிறகு, சிறுமியின் தாய், தாத்தா உள்ளிட்ட 15 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் யாரையும் கைது செய்யவில்லை. விசாரணை போய்க்கொண்டிருக்கிறது” என்றார்கள்.

15 வயது சிறுமி ஒருவருக்கு அவரது தாத்தா உள்ளிட்ட உறவினர்களே பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com