‘தேவையற்ற இன்ஸ்ட்ரக்‌ஷன்’ – சத நாயகன் ரிஷப் பந்த் அவுட் குறித்து தினேஷ் கார்த்திக் ‘பாயின்ட்’ | Eng vs Ind – Dinesh Karthik has a point on the dismissal of Rishabh Pant

Share

ஹெடிங்லே டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று இந்திய அணி அருமையாகத் தொடங்கியது. முதல் ஒரு மணி நேர ஆட்டத்தில் இங்கிலாந்து செய்வதறியாது விழி பிதுங்கியது. ஆனால், ஷுப்மன் கில் (147), கருண் நாயர் (0) ஆட்டமிழந்த பிறகு செட்டில் ஆன ரிஷப் பந்த்துக்கு உள்ளிருந்து ‘மெசேஜ்’ வந்தது. இதனையடுத்து அவர் தடுப்பாட்டத்துக்குச் சென்றதால் ஆட்டமிழந்தார்.

359/3 என்று தொடங்கிய இந்திய அணி, கடைசியாக ஷர்துல் தாக்கூர் 1 ரன்னில் ஆட்டமிழக்க, 454/7 என்று ஆனது. இதனால் 550 ரன்களை முதல் இன்னிங்ஸில் எடுத்து இங்கிலாந்தை விட்டு ஆட்டிப்படைக்கும் வாய்ப்பு கொஞ்சம் பின்னடைவு கண்டது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸ்சில், 113 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 471 ரன்கள் குவித்தது.

இன்று காலை ஆட்டம் தொடங்கியதும் ஷுப்மன் கில், ரிஷப் பந்த் எந்த ஓர் இடையூறும் இன்றி ஆடி வந்தனர். ரிஷப் பந்த் பந்துகளை அருமையாக லீவ் செய்ததை எதிர்முனையில் இருந்த ஷுப்மன் கில்லே பாராட்டியது ஸ்டம்ப் மைக்கில் கேட்டது. ஷோயப் பஷீர் பந்தை ரிஷப் பந்த் மிகப் பெரிய சிக்சருக்குத் தூக்கி தன் சதத்தை எடுத்து முடித்தார். அதுவும் ரிஷப் பந்த்தின் புகழ்பெற்ற ஒரு கை சிக்ஸ் அது. சதம் அடித்த பிறகு அதைக் கொண்டாட சக்தி வாய்ந்த ஷாட் ஒன்றை லாங் ஆஃபுக்கும் ஸ்ட்ரெய்ட்டுக்கும் இடையே தூக்கி அடித்தார், அது கேட்ச் ஆவது போல் சென்று சிக்ஸ் ஆனது.

அடுத்த பஷீர் ஓவரில் ஷுப்மன் கில் 147 ரன்களில் மேலேறி வந்து பஷீர் பந்தை தூக்கி அடித்தார். அது ஸ்கொயர் லெக்கில் நின்று கொண்டிருந்த ஒரே பீல்டரான டாங் கையில் போய் உட்கார்ந்தது. பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் கருண் நாயர் இறங்கினார். ரிஷப் பந்த் அவரை ஸ்ட்ரைக்குக் வர விடாமல் கொஞ்சம் காத்தார். ஸ்டோக்ஸை இறங்கி வந்து நேராக அடித்த விளாசல் பவுண்டரி ஸ்டோக்ஸின் கோபத்தை அதிகரித்தது. திடீரென டிஃபன்ஸ் ஆடறாரு, திடீரென இறங்கி வந்து வெளுக்குறாரு எப்படித்தான் போடுவது என்பது போன்ற கோபம் அது. பிறகு ரிஷப் பந்த்துக்கு பஷீர் பந்தில் ஸ்டம்பிங் வாய்ப்பை ஜேமி ஸ்மித் கோட்டை விட்டார். பெரிய ஷாட்டுக்குப் போன ரிஷப் பேட்டும் பறந்து போய் பின்னால் விழுந்தது.

கருண் நாயருக்கு ஸ்ட்ரைக் கிடைத்தபோது அவர் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ஆஃப் வாலி பந்தை ஸ்கொயர் ட்ரைவ் ஆடியிருந்தால் பந்து பவுண்டரி சென்றிருக்கும். ஆனால், கவருக்கு மேல் தூக்கி அடிக்க முயன்றார். அங்கு ஆலி போப் அசாதாரணமான ஒரு கேட்சைப் பிடிக்க, கருண் நாயரின் மீள்வருகை சோகத்தில் முடிந்தது. இதன் பிறகுதான் ரிஷப் பந்த் பெவிலியனில் ஓர் உதவிக்காகச் செய்கை செய்ய, அப்போது ‘2 விக்கெட்டுகள் போயிருக்கிறது, கொஞ்சம் நிதானிக்கவும்’ என்று அறிவுரை வழங்கப்பட்டதாக தினேஷ் கார்த்திக் வர்ணனையில் தெரிவித்தார்.

அதன் பிறகு அவர் ஓவர் தடுப்பாட்டத்தை ஆடிக்கொண்டிருந்தார். ரிஷப் பந்த் ஒரு ரிதம் பிளேயர், அவர் சதம் அடித்த பிறகு பந்து கால்பந்து சைஸுக்கு அவர் கண்களுக்குத் தெரியும். நல்ல அடிக்கும் ரிதத்தில் இருந்தவரைப் போய் ‘நின்று ஆடு, நிதானித்து ஆடு’ என்று கம்பீரோ, ஷுப்மன் கில்லோ அல்லது இருவருமோ இப்படிப்பட்ட அறிவுரையை வழங்கியிருக்கக் கூடாது. இதனால் ஜாஷ் டங்கின் பந்து ஒன்றுக்கு ஸ்ட்ரோக் எதையும் ஆடாமல் கால் கேப்பில் வாங்கி எல்.பி.டபிள்யூ ஆனார் ரிஷப் பந்த். பெவிலியனிலிருந்து வந்த இந்த ‘இன்ஸ்ட்ரக்‌ஷன்’ தான் ரிஷப் பந்த்தின் ரிதம் காலியாகி அவுட் ஆகக் காரணம் என்று தினேஷ் கார்த்திக் வர்ணனையில் சுட்டிக் காட்டினார்.

471 ரன்கள் குவிப்பு: ரவீந்திர ஜடேஜா (11), ஷர்துல் தாக்கூர் (1) , பும்ரா (0) பிரசித் கிருஷ்ணா (1) என அடுத்தடுத்து விக்கெட்டுகள் கழண்டன. சிராஜ் மட்டும் ஆட்டமிழக்காமல் 3 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸ்சில், 113 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 471 ரன்கள் குவித்திருந்தது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com