புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த தே.மு.தி.க-வின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“தே.மு.தி.க-விற்கு ராஜ்யசபா சீட் அளிக்க வேண்டியது அ.தி.மு.க-வின் கடமை. இது, ஏற்கனவே கடந்த 2024-ம் வருட தேர்தலில் முடிவு செய்யப்பட்டது தான். அ.தி.மு.க ராஜ்யசபா சீட் தே.மு.தி.க-விற்கு கொடுக்கவில்லை என்றால் அடுத்த கட்ட நிலைப்பாடு குறித்து முடிவு எடுக்கப்படும். பொறுத்தார் பூமி ஆழ்வார் என்ற பழமொழிக்கு ஏற்ப நாங்கள் பொறுமையாக உள்ளோம். இதற்காக, நாங்கள் பதட்டமோ பயமோ வேறு எந்த முடிவோ நாங்கள் எடுக்கவில்லை. பொறுமைக் கடலினும் பெரிது என்று பத்திரிகையாளர்களுக்கு தான் நான் கூறினேன். தி.மு.க தரப்பில் கூறியபடி கமலுக்கு ராஜ்ய சபா சீட்டு வழங்கியுள்ளனர். அது, வரவேற்கத்தக்கது. அரசியலில் நம்பிக்கைதான் முக்கியம். வார்த்தை தான் முக்கியம். கொடுத்த வார்த்தை மீது முடிவு எடுத்தால் தான் பொதுமக்கள் அவர்களை நம்புவார்கள். கடந்த 2024 – ம் வருட தேர்தலிலேயே 5 எம்.பி சீட்டுகளும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் முடிவு செய்யப்பட்ட ஒன்று. தே.மு.தி.க-விற்கு வந்த வாய்ப்பை ஒரு முறை அன்புமணி ராமதாஸ் தட்டி பறித்து விட்டார். மற்றொரு முறை ஜி.கே.வாசனுக்கும் தரப்பட்டது. அதை தே.மு.தி.க மனதார ஏற்றுக்கொண்டது. எனவே தான் கூறுகிறோம்… ஏற்கனவே முடிவு எடுத்தபடி ராஜ்யசபா சீட் தே.மு.தி.க-வுக்கு தர வேண்டியது அ.தி.மு.க-வின் கடமை. சொன்ன சொல்லில் உறுதியாக இருந்து தே.மு.தி.க-விற்கு அ.தி.மு.க தலைமை அறிவிக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் மீது அவருக்கு நம்பிக்கை வரும். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கருத்தை கூறிவிட்டு வந்து விடுவார்கள். அதற்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டும். அவர் அவர்களுக்கு அவர் அவர் தாய்மொழி பெரிது. முட்டையிலிருந்து கோழி வந்ததா, கோழியிலிருந்து முட்டை வந்ததா என்பது சர்ச்சைக்குரிய ஒன்று.

ஆதி மொழி, முதல் மொழி தமிழ். அவங்க அவங்க மாநிலத்திற்கு அவங்கவங்க தாய்மொழி பெரிது . அனைத்து மொழியும் கற்போம் என்பதுதான் தே.மு.தி.க நிலைப்பாடு. முதலில் தமிழ் மொழி தான் கற்க வேண்டும். அதுதான் தே.மு.தி.க நிலைப்பாடு. இந்த சர்ச்சை பேச்சு பட ப்ரமோசனுக்காக நடத்தப்பட்டதா என்பது குறித்து அவர்தான் விளக்க வேண்டும். அன்பு மன்னிப்பு கேட்காது என்று கமலஹாசன் கூறியுள்ளார். அன்பு என்பவர் யார் என்று கமல் விளக்க வேண்டும். இரண்டு நாட்களில் தே.மு.தி.க சார்பில் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். நாங்கள் எங்களுடைய வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.