பட மூலாதாரம், Uttam Kumar Reddy @FB
தெலங்கானா மாநிலத்தில் உள்ள அம்ராபாத்தில் கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருந்த சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் பல தொழிலாளர்கள் காயமடைத்துள்ளனர். 8 பேர் சுரங்கத்திற்கு உள்ளே சிக்கிக் கொண்டனர்.
கட்டுமானப் பணியின்போது திடீரென்று ஏற்பட்ட நீர் கசிவின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டது என்று சம்பவ இடத்தில் இருந்தவர்கள் கூறுகின்றனர்.
8 தொழிலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளதாக அம்ராபாத் மண்டல தாசில்தார் மாருதி பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
“எட்டு பேர் உள்ளே சிக்கியுள்ளதாக தகவல்கள் உள்ளன. அவர்களை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உள்ளே சிக்கியவர்களைப் பற்றிய விவரங்கள் இன்னும் தெரியவரவில்லை”, என்றும் அவர் கூறினார்.
சுரங்கத்தின் 14வது கிலோமீட்டரில் அதன் மேற்பகுதி இடிந்து விழுந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சுரங்கத்தில் சிக்கியவர்கள் யார்?
இந்த சுரங்கத்தில் சிக்கிய எட்டு பேரின் விவரங்களை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அவர்களுள் இந்த திட்டத்தின் பொறியாளரும் (project engineer), கள பொறியாளர் (site engineer) ஆகியோர் அடங்குவர்.
உள்ளே சிக்கியவர்களின் விவரங்கள்:
1. மனோஜ் குமார், திட்ட பொறியாளர் (உத்தரபிரதேசம்)
2. ஸ்ரீநிவாஸ், கள பொறியாளர் (உத்தரப்பிரதேசம்)
3. சந்தீப் சாஹு, ஊழியர் (ஜார்க்கண்ட்)
4. ஜக்தா ஜெஸ், ஊழியர் (ஜார்க்கண்ட்)
5. சந்தோஷ் சாஹு, ஊழியர் (ஜார்க்கண்ட்)
6. அனுஜ் சாஹு, ஊழியர் (ஜார்க்கண்ட்)
7. சன்னி சிங், ஜெனரல் ஆபரேட்டர் (ஜம்மு-காஷ்மீர்)
8. குர்பிரீத் சிங், எரெக்டர் ஆப்ரேட்டர் (பஞ்சாப்)
மாநில முதல்வர் கூறுவதென்ன?
இந்த விபத்து குறித்து அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டியின் அலுவலகம் இன்று (பிப்ரவரி 22) எக்ஸ் தளத்தில் ஒரு பதிவிட்டுள்ளது.
“சுரங்கத்தின் மேற்ப்பகுதி விழுந்து பலர் காயமடைந்ததாக தகவல் கிடைத்ததும் மாவட்ட ஆட்சியர், காவல்துறை எஸ்.பி., தீயணைப்புத் துறை மற்றும் நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார் “, என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த உத்தரவைப் பெற்றபிறகு, நீர்ப்பாசனத் துறை அமைச்சர் மற்றும் பிற அதிகாரிகள் சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளதாகவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுரங்கத்தில் சிக்கியவர்களை பாதுகாப்பாக வெளியே கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அம்மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் உத்தம் குமார் ரெட்டி தெரிவித்தார்.
விபத்துக்கு முன்னர் பெரும் சத்தம் கேட்டதாக தொழிலாளர்கள் கூறியதாகவும் அமைச்சர் ஊடகங்களுக்கு கூறினார்.
சுரங்கத்திற்கு உள்ளே சிக்கி இருப்பவர்களுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், மீட்புப் பணிகள் தடைபட்டுள்ளதாக அம்ராபாத் காவல்துறை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
விபத்துக்கான காரணம் என்ன?
இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தெலங்கானா அமைச்சர் கோமதிரெட்டி வெங்கட் ரெட்டி விளக்கினார்.
“இந்த சுரங்கத்தின் 14வது கிலோமீட்டர் பகுதியில் (டோமலபெண்டா கிராமம் அருகே) தண்ணீரால் ஊறியிருந்த கான்கிரீட் இடித்து விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது,” என்று அவர் கூறினார்.
பட மூலாதாரம், PTI
இந்த விபத்தின் முழு தாக்கத்தைப் பற்றி தெரிந்துகொள்ள கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனத்தின் ஒரு குழு இந்த சுரங்கத்திற்குள் சென்றுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
இந்த SLBC சுரங்கம், ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் திட்டத்தின் ஒரு பகுதியாகும். நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள டோமலபெண்டா கிராமத்தில் சுரங்கம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த சுரங்கம் வழியாக, ஸ்ரீசைலம் திட்டத்திலிருந்து கிருஷ்ணா நதியின் நீர், நல்கொண்டா மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
30 டிரில்லியன் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இந்த சுரங்கம், நாள் ஒன்றுக்கு 4,000 கனஅடி நீரை நல்கொண்டா மாவட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்று தெலுங்கானா நீர்ப்பாசனத் துறை அமைச்சர் உத்தம் குமார் ரெட்டி கடந்த ஆண்டு கூறியிருந்தார்.
பட மூலாதாரம், Telangana CMO/X
“இந்த விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோதி தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இந்த சம்பவம் குறித்து முதல்வர் பிரதமருக்கு விளக்கினார்” என்று தெலங்கானா முதல்வர் அலுவலகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
மீட்பு பணிகளுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழு அனுப்பப்படும் என்று பிரதமர் உறுதியளித்துள்ளதாகவும், முழு ஒத்துழைப்பை வழங்க மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.