
பௌர்ணமி நாள் வந்துவிட்டாலே தமிழ்நாடு மட்டுமன்றி ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருகின்றனர்.
கடந்த நவம்பர் 4-ஆம் தேதி பௌர்ணமி தினத்தில் கிரிவலப் பாதையில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வலம் வந்ததாக, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கூறுகிறது.
நெருங்கி வரும் கார்த்திகை தீப தினத்தன்று சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று கோவில் நிர்வாகம் கணித்துள்ளது.
ஆனால், திருவண்ணாமலை கோவிலில் அதற்கேற்ற உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளதா? கூட்ட நெரிசலை எதிர்கொள்வதற்கு மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பிபிசி தமிழ் கள ஆய்வில் தெரியவந்தது என்ன?
கிரிவலப் பாதையில் என்ன நிலவரம்?

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோவிலை சூழ்ந்துள்ள மலை சுமார் 2,600 அடி உயரமும் 14 கி.மீ சுற்றளவும் உடையது. இங்கு பௌர்ணமி தினத்தில் பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்வது முக்கிய நிகழ்வாக உள்ளது.
கடந்த நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கிய பௌர்ணமி கிரிவலத்தை மறுநாள் இரவு வரை ஏராளமான பக்தர்கள் வலம் வந்தனர். கிரிவலப் பாதைகளில் தொண்டு நிறுவனங்களும் சில ஆசிரமங்களின் நிர்வாகிகளும் பக்தர்களுக்கு உணவு வழங்கிய காட்சிகளைப் பார்க்க முடிந்தது.
ஆனால், பக்தர்கள் சாப்பிட்ட பிறகு எஞ்சிய உணவுக் கழிவுகள் உரிய முறையில் அகற்றப்படவில்லை. கிரிவலப் பாதையைச் சுற்றிலும் பல இடங்களில் குப்பைகள் தேங்கிக் கிடந்ததைப் பார்க்க முடிந்தது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் சில இடங்களில் குடிநீர், தற்காலிக கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டிருந்தன. ஆனால், இவை போதுமானதாக இல்லை என்று சென்னை கொளத்தூரைச் சேர்ந்த நரசிம்மராவ் கூறினார். .
சென்னையில் அரிசி வியாபாரம் செய்து வரும் இவர், பௌர்ணமி கிரிவலத்திற்காக திருவண்ணாமலை வந்திருந்தார். “பெண்களுக்கு கழிப்பிட வசதிகள் போதுமான அளவுக்கு இல்லை. கழிப்பறை மற்றும் தண்ணீர் வசதி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்” என்றார்.
“போதிய கழிப்பறை வசதிகள் இல்லை. கிரிவலப் பாதைகளில் சிறிய கற்கள் அதிகளவில் உள்ளதால் நடக்க சிரமமாக இருக்கிறது” என்று பெங்களூருவை சேர்ந்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் கூறினார். கோவில் மற்றும் கிரிவலப் பாதைகளில் ஏற்படும் கூட்ட நெருக்கடியால் சிரமம் ஏற்படுவதாக அவர் தெரிவித்தார்.
‘பல கி.மீ நடந்தே வரவேண்டிய நிலை’

கூட்ட நெருக்கடியை கட்டுப்படுத்த, கோவிலுக்கு சுமார் 2 கி.மீட்டருக்கு முன்பே பக்தர்கள் வரும் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. அங்கிருந்து அவர்கள் ஆட்டோ அல்லது நடந்தே வரும் நிலை ஏற்படுகிறது. இதனால் காவல்துறையுடன் பொதுமக்கள் வாக்குவாதம் செய்வதைப் பார்க்க முடிந்தது.
இதைக் குறிப்பிட்டுப் பேசிய நரசிம்மராவ், “முக்கிய நாட்களில் கோவிலுக்கு வருவதற்கு போதிய பேருந்து வசதிகள் இல்லை. பல கிலோ மீட்டர் நடந்தே வரவேண்டியுள்ளது. தவிர, தரிசனம் செய்வதில் அதிக காலதாமதம் ஏற்படுகிறது” என்றார்.
பிபிசி தமிழிடம் பேசிய விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஷியாமளா, “கோவிலுக்குள் குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. ஆனால், வழிபாடு நடத்துவதில் அதிக தாமதம் ஏற்படுகிறது. அதைக் கோவில் நிர்வாகம் சரிசெய்ய வேண்டும்” என்றார்.
‘உணவு, பால் கிடைப்பதில் சிரமம்’

“கிரிவல நாட்களில் கோவிலுக்கு அதிகளவில் பெண் பக்தர்கள் வருகின்றனர். ஆனால், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு போதிய வசதிகள் இல்லை” என்று ஆந்திராவை சேர்ந்த திரிவேணி கூறினார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “தொடர்ந்து மூன்றாவது முறையாக கிரிவலம் வந்துள்ளேன். என்னுடைய குழந்தைக்கு ஒரு வயது தான் ஆகிறது. ஆனால், குழந்தைக்குத் தேவையான உணவு மற்றும் பால் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது” என்றார்.
“வழிபாடு நடத்துவதில் கர்ப்பிணிகளுக்கும் குழந்தைகளுடன் வருகிறவர்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். ” எனவும் அவர் தெரிவித்தார்.
கோவிலில் ராஜகோபுரம் அமைந்துள்ள பகுதிக்கு முன்புறம் உள்ள சாலையில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது முக்கிய நிகழ்வாக உள்ளது. இதற்காக சாலையின் ஒருபகுதியில் அதிகளவில் தீபம் ஏற்றப்படுகிறது. இதனால் புகை மண்டலமாக அப்பகுதி காட்சியளித்தது.
இதனைத் தண்ணீர் ஊற்றி அணைக்கும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்ட வண்ணம் இருந்தனர்.
ஆந்திர பக்தர்கள் கூறுவது என்ன?

கோவிலுக்குள் பிபிசி தமிழ் சென்றபோது வழிபாடு நடத்துவதற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். “கோவிலுக்குள் வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஆனால், அதற்கான வரிசையில் குளறுபடிகள் நடக்கின்றன” என்ற குற்றச்சாட்டை சில பக்தர்கள் முன்வைத்தனர்.
“அன்னதானத்துக்கும் தரிசனத்துக்கும் வெவ்வேறு வரிசைகள் இருந்தாலும் அவை முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை. இதனால் ஏற்படும் குழப்பத்தால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.” என்று ஆந்திராவில் இருந்து வந்திருந்த சுரேந்திர பாபு கூறினார்.
இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பதில்
ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுக்கிறார், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் உதவி ஆணையர் ராமசுப்ரமணியம். கோவில் வளாகத்தில் உள்ள அறநிலையத்துறை அலுவலகத்தில் அவரை பிபிசி தமிழ் சந்தித்துப் பேசியது.
“பக்தர்களின் வசதிக்காக உணவு, குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் போதிய அளவில் செய்து தரப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்துவதற்கு காவல்துறை, போக்குவரத்துத் துறை ஆகியவற்றுடன் இணைந்து ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்” என்று அவர் தெரிவித்தார்.
“கடந்த சில ஆண்டுகளாக திருவண்ணாமலை கோவிலுக்கு ஆந்திராவில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர். ஆனால், கிரிவலத்தில் தமிழர்களே அதிகம் பங்கேற்கின்றனர். வரும் நாட்களில் ஆந்திர பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன” என்று அவர் தெரிவித்தார்.

கார்த்திகை தீபம் – அறநிலையத்துறையின் கணக்கு என்ன?
தொடர்ந்து பேசிய உதவி ஆணையர் ராமசுப்ரமணியம், “கிரிவலம் உள்பட முக்கிய நாட்களில் அறநிலையத்துறையால் மட்டுமே பணிகளை மேற்கொள்ள முடியாது என்பதால் காவல்துறை, போக்குவரத்துத்துறை உள்பட இதர துறைகளையும் மாவட்ட நிர்வாகம் கலந்து ஆலோசனை செய்கிறது” எனக் கூறினார்.
பக்தர்களின் பாதுகாப்புக்காக கோவில் வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் உள்ளதாகக் கூறிய அவர், “வரும் நாட்களில் 700க்கும் அதிகமான சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட விருக்கிறது.” என்றார்.
“கிரிவல நேரங்களில் சுமார் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடுகின்றனர். வரும் கார்த்திகை தீப தினத்தன்று சுமார் 40 லட்சம் பேர் கூடலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்.
‘பக்தர்களுக்கு இடையூறு’ – உயர் நீதிமன்றத்தில் வழக்கு

திருவண்ணாமலையில் உள்ள மலை மற்றும் கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகள் பெருகிவிட்டதால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த அந்த வழக்கில், “மலையைச் சுற்றிலும் எழுப்பப்பட்டுள்ள கட்டடங்களுக்கு மின் இணைப்பும் குடிநீர் இணைப்புகளும் சட்டவிரோதமாக வழங்கப்பட்டுள்ளன. வணிக நிறுவனங்களின் பெருக்கத்தால் கிரிவலப் பாதை அசுத்தமடைந்துள்ளது’ என அவர் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கண்காணிப்புக் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டது.
கடந்த ஜூன் 25-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவிந்தராஜன் குழு சமர்ப்பித்த அறிக்கையில், மலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 3,430 வீடுகளும் 154 வணிக கட்டடங்களும் ஆக்கிரமிப்பில் உள்ளதாகத் தெரிவித்தது.
அதன்படி, மலையைச் சுற்றியுள்ள சுமார் 554 ஏக்கர் பரப்பளவை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்க வேண்டும் என கண்காணிப்புக் குழு கூறியுள்ளது.
குழுவின் அறிக்கையை வாசித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அரசுத் தரப்பில் அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு கூறிவிட்டு வழக்கை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைத்தனர்.
இதையடுத்து, மலை மற்றும் கிரிவலப் பாதைகளில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள் மற்றும் வணிகக் கட்டங்களுக்கு மின்வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
‘துறை ரீதியான ஒருங்கிணைப்பு அவசியம்’
“ஆனால், அந்த இடங்களில் இருந்து வெளியேற மாட்டோம் என மலையில் வசிக்கும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலையில் உள்ள மலை மற்றும் அங்குள்ள குளங்களையும் ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் கிரிவலத்துக்கு வரும் பக்தர்கள் சிரமப்படுகின்றனர்” எனக் கூறுகிறார், வழக்கறிஞர் யானை ராஜேந்திரன்.
வனத்துறை, பொதுப்பணித்துறை, அறநிலையத்துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியும் எனக் கூறும் யானை ராஜேந்திரன், ” இதனை அரசுத் துறைகள் முறையாக செய்தால் மட்டுமே லட்சக்கணக்கான பக்தர்களுக்கு நிம்மதியான தரிசனம் கிடைக்கும்” என்கிறார்.

‘உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணி தீவிரம்’ – மாநகராட்சி மேயர்
இதுதொடர்பாக திருவண்ணாமலை மாநகராட்சி மேயர் நிர்மலா வேல்மாறனிடம் பிபிசி தமிழ் பேசியது.
“ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கிரிவலப் பாதையைச் சுற்றிலும் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பில் கழிப்பறைகளைக் கட்டும் பணி முடிவுக்கு வரவுள்ளது” என அவர் கூறினார்.
தற்காலிக பேருந்து நிறுத்தம், கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட வசதிகள் பக்தர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு செய்து தரப்படுவதாகக் கூறும் மேயர் நிர்மலா வேல்மாறன், “முக்கிய நாட்களில் நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கு அனைத்து துறைகளின் ஒத்துழைப்புடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று மட்டும் பதில் அளித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு