சமீபத்திய பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரின் கண்டுபிடிப்பாகிய நிதிஷ் குமார் ரெட்டி திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க மலையை முழந்தாளிட்டு ஏறிய வீடியோ வைரலாகி வருகிறது.
பெர்த் டெஸ்ட் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்ற போதிலும், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 1-3 என இழந்தனர். இந்த தோல்வியுடன், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பையும் இழந்தனர். தோல்வியுற்ற போதிலும் தனது முதல் சுற்றுப்பயணத்திலேயே சதம் அடித்த நிதிஷ் குமார் ரெட்டியை பாராட்டாதவர்கள் இல்லை என்றே கூறலாம். அந்த அளவுக்கு அவரது பங்களிப்பு அபரிமிதமாக அமைந்தது.
மெல்பர்னில் அவர் அடித்த சதம் மிக அருமை என்று உலக கிரிக்கெட் ஜாம்பவான்கள் விதந்தோதி வருகின்றனர். மைதானத்தில் இருந்த அவரது தந்தை உள்ளிட்ட உறவினர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.
இந்நிலையில், 21 வயது ஆல்ரவுண்டர் நிதிஷ் ரெட்டி திருப்பதி கோயிலுக்குச் சென்ற சில காட்சிகளை பகிர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதை ஸ்டோரியாக பகிர்ந்துள்ளார். அங்கு அவர் திருப்பதி கோயிலின் படிக்கட்டுகளில் முழங்காலில் ஏறி தனது பக்தியை உருக்கமாக வெளிப்படுத்தியது வைரலாகியுள்ளது.
முன்னதாக, தொடர் முடிந்து திரும்பிய நிதிஷ் ரெட்டிக்கு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் போது உற்சாகமான ரசிகர்கள், நிதிஷுக்கு ஒரு பெரிய மஞ்சள் மாலையைப் அணிவித்தனர். கேமராக்களின் ஷட்டர் கிளிக்குகளுக்கு இடையே நிதிஷ் குமார் மீது மஞ்சள் இதழ்கள் பொழிந்தன. பிறகு நிதிஷ் குமார் திறந்த ஜீப்பில் தன் தந்தையுடன் வலம் வந்தார். ரசிகர்கள் உற்சாகமாக அவரை வாழ்த்தினர்.
இதே வாழ்த்துகள் வரவேற்புகள் நமக்கு முதன் முதலில் டி.நடராஜன் ஆஸ்திரேலியா சென்று வெற்றி பெற்ற வீரராகத் திரும்பிய போது நிகழ்ந்ததை நினைவூட்டுகின்றன. ஆனால், அதன் பிறகு காயத்தைக் காரணம் காட்டி நடராஜனை இந்திய அணித்தேர்வுக்குழு புறக்கணித்து வருவதுதான் தொடர்கிறது. நடராஜனுக்கு நடந்தது நிதிஷ் குமார் ரெட்டிக்கும் நடக்காமல் தேர்வுக்குழுதான் பார்த்துக் கொள்ள வேண்டும்.
Nitish Kumar Reddy climbing stairs of Tirupati after scoring ton in his debut series. The peace is in the feet of Govinda pic.twitter.com/23xKmNOpaC