திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயில் : 5 ம் படை வீடு… ஆங்கிலப் புத்தாண்டு அன்று களைகட்டும் படிபூஜை! | thiruthani murugan temple

Share

ஆண்டின் முதல் நாளில் படிபூஜை

வள்ளிமலை சுவாமிகள் திருத்தணி முருகனின் தீவிர பக்தர். திருப்புகழை பரப்புவதையே தன் வாழ்வாகக் கொண்டு செயல்பட்ட அவர் ஒருமுறை ஆங்கிலப்புத்தாண்டு தினத்தன்று திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்தபோது அங்கே பக்தர் யாரும் இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தது.

அப்போது அங்குள்ளவர்களிடம் வள்ளிமலை சுவாமிகள் காரணம் கேட்டார். அதற்கு, “இன்று ஆங்கிலப் புத்தாண்டு தினம். எனவே மக்கள் எல்லோரும் துரைமார்களுக்கு சலாம் வைத்து அவர்களின் காலில் விழுந்து ஆசி பெறுவார்கள். அதனால் புத்தாண்டு அன்று தமிழர்கள் யாரும் இங்கு வருவது இல்லை’ என்று கூறியிருக்கிறார்கள்.

இதைக் கேட்ட வள்ளிமலை சுவாமிகள் வருத்தமடைந்தார். ‘துரைகளுக்கெல்லாம் பெரிய துரையான முருகன் இருக்கும் இடத்துக்கு வராமல் யாரோ ஒரு மனிதரைத் துதித்து வழிபடுவதா’ என்று வருந்தினார். மக்களை முருகனிடம் வரவேற்க ஒரு திருவிழா நடத்தலாம் என்று முடிவு செய்தார். அதுவும் ஆங்கிலப் புத்தாண்டு அன்று அதை நிகழ்த்த முடிவு செய்தார்.

சுவாமி மலையில் அமைந்துள்ள 60 படிகளுக்கும் ஆண்டுதோறும் தமிழ் வருடப்பிறப்பன்று படிபூஜை நடைபெறுகிறது. 60 தமிழ் வருடங்களின் பெயர்களாக இந்தப் படிகள் விளங்குவதாய் ஐதிகம். எனவே, அவற்றுக்கு ஆண்டுதோறும் சித்திரை முதல் நாளில் பூஜைகள் நடைபெறுகின்றன. அதைப்போலவே 365 படிகளைக் கொண்டிருக்கிற திருத்தணிகை முருகன் கோயில் படிபூஜை செய்தால் என்ன என்று யோசித்து அதையே விழாவாகக் கொண்டாட முடிவு செய்தார். மக்களிடம் முருகனே துரைகளுக்கெல்லாம் துரை. எனவே துரை முருகனைக் கொண்டாடுவோம் என்று அழைப்பு விடுத்தார். அவரின் அழைப்பை ஏற்ற மக்கள் திருத்தணியில் குவிந்தனர்.

முதல் படிபூஜை 1917-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி அன்று ஆரம்பமானது. அன்று முதல் இன்றுவரை இந்த உற்சவம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு படிக்கும் வெற்றிலை, பழம், சூடம் வைத்து இரண்டு நாள்களும் பூஜை செய்யப்படும். டிசம்பர் 31-ம் தேதி காலையில் தொடங்கி மறுநாள் விடிய விடிய நடைபெறுகின்ற இந்தப் படிபூஜை புத்தாண்டு தினமான ஜனவரி 1-ம் தேதியன்று இரவு 10 மணிவரையிலும் நடைபெறும். பக்தர்களும் இதில் திரளாகக் கலந்துகொள்வார்கள். இந்த நாளில் திருத்தணியில் அன்னதானங்களும் பக்தர்களின் கூட்டமும் களைகட்டும். திருத்தணி தலத்தின் மகிமையும் பழைமையும் பெரியது. வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை சென்று சினம் தணிந்த அந்த சுப்ரமணிய சுவாமியை தரிசித்து வாருங்கள். வாழ்வில் சுகங்கள் அனைத்தும் தேடிவரும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com