தலிபான் தடையை தகர்த்த ஆப்கன் கிரிக்கெட் வீராங்கனைகள்: 3 ஆண்டுக்கு பின் இணைந்த அணி! | Afghan women cricketers reunites after 3 years amid taliban ban

Share

மெல்பர்ன்: தலிபான் தடைக்கு மத்தியில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று கூடியுள்ளது ஆப்கானிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி. இந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெறும் தொழில்முறை கிரிக்கெட் போட்டியில் அவர்கள் களம் காண உள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் ஆட்சி அமைந்ததும் பெண்களுக்கு பல்வேறு தடைகள் பிறப்பிக்கப்பட்டன. இதில் விளையாட்டும் அடங்கும். விளையாட்டை உயிர் மூச்சாக கருதிய வீராங்கனைகள் நாட்டை விட்டு வெளியேறினர். தற்போது அவர்கள் பல்வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதில் ஆப்கன் கிரிக்கெட் வீராங்கனைகள் சிலர் ஆஸ்திரேலியாவில் உள்ளனர். அங்கு அவர்கள் பல்வேறு கிளப் அணிகளுக்காக விளையாடி வருகின்றனர்.

இந்தச் சூழலில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி இப்போது அங்கு ஒன்று கூடி உள்ளது. அங்கு நாளை (ஜன.30) நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் மகளிர் லெவன் அணி, கிரிக்கெட் வித் அவுட் பார்டர்ஸ் லெவன் அணியுடன் விளையாடுகிறது.

“ஆப்கானிஸ்தானில் உரிமைகள் மறுக்கப்பட்ட லட்சக்கணக்கான பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக எங்கள் அணி இந்தப் போட்டியில் களம் காண்கிறது. சொந்த நாட்டில் அனைத்தையும் இழந்த நாங்கள் இங்கு ஒன்று கூடியுள்ளது எங்களுக்கு ஆறுதல் கொடுக்கிறது. எங்களது இந்த முயற்சியில் எங்களோடு துணை நிற்பவர்கள் மற்றும் ஆதரிப்பவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இது வெறும் அணி அல்ல. இது ஒரு இயக்கம். மாற்றத்தை முன்னோக்கியுள்ள இயக்கம்.

இந்தப் போட்டி ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு முக்கியமானது. கல்வி, வேலை, விளையாட்டு என மறுக்கப்பட்ட பல்வேறு அடிப்படை உரிமைகள் அனைத்தும் கிடைப்பதற்கான தொடக்கப்புள்ளியாக இது இருக்கும். எங்களில் பலர் தலிபான் ஆட்சியாளர்களால் அச்சுறுத்தப்பட்டவர்கள்” என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீராங்கனைகள் ஃபிரூசா அமிரி மற்றும் நஹிதா சபான் தெரிவித்தனர். இந்த போட்டிக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஆதரவு அளித்துள்ளது.

தலிபான் ஆட்சி: ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதே நேரத்தில் கடந்த முறையை போல் தங்கள் ஆட்சி இருக்காது என்று அப்போது அவர்களே சொல்லி இருந்தனர். பெண் கல்வி, பெண் சுதந்திரம் பேணப்படும் என்றும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர். ஆனால், அந்த அறிவிப்புக்கு மாறாகவே அவர்களது செயல்பாடு இதுவரை இருந்து வருகிறது. பெண்கள் விளையாட கூட தடை பிறப்பித்துள்ளது. வீடுகளில் பெண்கள் புழங்கும் இடங்களில் ஜன்னல் வைக்க தலிபான் தடை விதித்தது.

இந்தச் சூழலில் தலிபான் ஆட்சியில் பெண்கள் மற்றும் சிறுமிகளை மனசாட்சியின்றி அடக்குமுறைக்கு ஆளாகி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆப்கானிஸ்தான் உடனான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியை இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் புறக்கணிக்க வேண்டும் என்று கண்டன குரல் எழுந்தது. இருப்பினும் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிகிறது.

அதேநேரத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் ஆப்கானிஸ்தான் ஆடவர் அணியுடன் நேரடி கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவது இல்லை. மகளிர் உரிமைகளை மறுக்கும் தலிபான் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இதை அந்த அணியின் நிர்வாகிகள் முன்னெடுத்துள்ளனர்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com