(இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை தரலாம்)
ஜூலை 29ம் தேதி முதல் கர்நாடகாவின் தக்ஷிண கன்னட மாவட்டத்தில், நேத்ராவதி ஆற்றங்கரையோரத்தில் எலும்பு கூடுகள் புதையுண்டு கிடக்கின்றவா என்று தேடும் பணி நடைபெறுகிறது. காவல்துறை மேற்பார்வையில் ஆற்றங்கரையோரத்தில் உள்ள நிலப் பகுதிகள் தோண்டப்பட்டு வருகின்றன.
அந்த இடத்தில் நூற்றுக்கணக்கான உடல்களை தான் புதைத்துள்ளதாக ஒருவர் கூறினார். அவர் தர்மஸ்தலா என்ற புனித தலத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றியதாகவும், ஒரு அதிகாரம் மிக்க குடும்பம் கூறியதன் அடிப்படையில் அதை செய்ததாக தெரிவிக்கிறார்.
1998 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் புதைக்கப்பட்ட அந்த உடல்களில் பலவும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் உடையது என்று ஜூலை 3ம் தேதி செய்தியை வெளிக்கொண்டு வந்த அந்த அடையாளம் தெரியாத தலித் நபர் தெரிவித்தார்.
சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணை
இந்த விவகாரத்தை விசாரிக்க, ஜூலை 19ம் தேதி கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. புகார் அளித்தவர் அடையாளம் கண்ட இடங்களில் தோண்டி ஆய்வு செய்யும் பணியை மேற்கொள்ள அந்த குழுவுக்கு உத்தரவிடப்பட்டது.
பணி முடிந்துள்ள எட்டு இடங்களில் ஒன்றில், எலும்பு கூடுகளின் மிச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் தடயவியல் பகுப்பாய்வுக்கு பிறகே, ஒரு முடிவுக்கு வர முடியும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
தர்மஸ்தலா கோயில் பொறுப்பாளரின் சகோதரர், மத தலத்தை நடத்தி வரும் குடும்பத்துக்கு எதிராக “அவதூறு” செய்திகளை வெளியிடுவதற்கு தடை உத்தரவு பெற்றிருந்தார். அந்த உத்தரவை கர்நாடக உயர்நீதிமன்றம் தற்போது நீக்கியுள்ளது.
ஜூலை 20ம் தேதி, கோயில் அதிகாரிகள் “வெளிப்படையான மற்றும் நியாயமான” விசாரணைக்கு ஆதரவு அளிப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
“ஒரு சமூகத்தின் ஒழுக்கம் மற்றும் விழுமியங்களுக்கு உண்மையும் நம்பிக்கையுமே ஆதாரமாக விளங்குகின்றன. சிறப்பு புலனாய்வுக் குழு முழுமையான பாரபட்சமற்ற விசாரணையை நடத்தி உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம், நம்புகிறோம்” என்று அந்த அறிக்கை கூறியது.
தர்மஸ்தலா மரணங்கள் குறித்த மர்மமும் கோபமும்
சமீபத்திய நிகழ்வுகள் தர்மஸ்தலா மீது கவனத்தை ஈர்த்திருந்தாலும், இவ்வாறு நடப்பது முதல் முறை அல்ல.
2001 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 452 சந்தேகத்துக்கு இடமான மரணங்கள் தர்மஸ்தலா மற்றும் அருகில் உள்ள உஜ்ரே கிராமத்தில் நடைபெற்றதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு காவல்துறையினர் பதில் அளித்திருந்தனர்.
இவை தற்கொலைகளாகவோ, விபத்துகளாகவோ இருக்கலாம். மேலும், இந்த 452 மரணங்கள் தற்போது புதையுண்டிருக்கலாம் என்று முன்னாள் துப்புரவு ஊழியர் கூறும் உடல்களுடன் சம்பந்தப்பட்டவை அல்ல, ஏனென்றால் இவை காவல்துறையால் விசாரிக்கப்படாத வழக்குகளாகும்.
எனினும், இரண்டு கிராமங்களில் நடைபெற்ற சந்தேகத்துக்கு இடமான மரணங்களின் எண்ணிக்கை வழக்கத்துக்கு மாறானது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பிய நாகரிக சேவா அறக்கட்டளை எனும் தன்னார்வ அமைப்பு பிபிசியிடம் கூறியது.
காவல்துறை பதிவு செய்த மரணங்களை விட மேலும் பல சந்தேகத்துக்கு இடமான மரணங்கள் குறித்த புகார்கள் கடந்த ஆண்டுகளில் எழுந்துள்ளன.
1979-ல் பள்ளி ஆசிரியர் உயிருடன் எரிக்கப்பட்டதாக வழக்கு
தர்மஸ்தலாவில் செல்வாக்கு மிக்கவர்களுக்கு எதிராக நீதிமன்றம் சென்றதற்காக 1979-ல் வேதவள்ளி என்ற பள்ளி ஆசிரியர் எரித்து கொல்லப்பட்டார் என்று அப்பகுதியில் உள்ள மகேஷ் ஷெட்டி திமரோடி மற்றும் கிரீஷ் மட்டேனவர் குற்றம் சாட்டுகின்றனர்.
தர்மஸ்தலா மற்றும் உஜ்ரேவில் உள்ள பலர் 1986-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற மற்றொரு சம்பவத்தை நினைவு கூர்கின்றனர்.
கல்லூரியிலிருந்து காணாமல் போன 17 வயது மாணவி, 56 நாட்கள் கழித்து நேத்ராவதி ஆற்றங்கரையோரத்தில் நிர்வாணமான நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் என்று கூறுகின்றனர். கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அந்த மாணவியின் தந்தை முடிவு செய்ததால் அவர் கொல்லப்பட்டார் என்று அவரது குடும்பமும் உள்ளூர் மக்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
காவல்துறையினர் முறையாக விசாரிக்கவில்லை என்று பிபிசியிடம் பேசும் போது அவர் புகார் தெரிவித்தனர்.
“எனது சகோதரியின் உடல் கைகள் மற்றும் கால்கள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. எதிர்காலத்தில் விசாரணைக்கு உதவியாக இருக்கும் என்பதால் எங்கள் வழக்கப்படி எரிக்காமல் அவரது உடலை புதைத்துவிட்டோம். அவரது முன் வரிசை பற்கள் காணவில்லை என்று உடலை பார்த்த எனது அத்தை கூறினார். கிராமத்தில் உள்ள அதிகாரம் மிக்கவர்கள் எங்கள் தந்தையின் மீது கோபம் கொண்டிருந்தனர்” என்று அவரது சகோதரி கூறினார்.
இதே போன்ற மற்றொரு சம்பவம் குறித்த புகார் 2003-ம் ஆண்டு எழுந்தது. முதலாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்த மாணவி, தனது நண்பர்களை காண வந்த போது தர்மஸ்தலாவிலிருந்து காணாமல் போய்விட்டார். இது குறித்தான புகாரை கூட காவல்துறை ஏற்க மறுத்துவிட்டனர் என்று அவரது தாய் குற்றம் சாட்டுகிறார். கிராமத்தின் பெரியர்வகளும் அவரை கடிந்துக் கொண்டதாக பிபிசியிடம் கூறுகிறார்.
“இது தான் எங்களுக்கு இருக்கும் ஒரே வேலையா? நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்” என்று அவரிடம் கூறப்பட்டதாக தெரிவிக்கிறார்.
“நான் கோயிலுக்கு வெளியில் அமர்ந்திருந்த போது என்னை யாரோ சிலர் கடத்தி சென்றனர். அவர்களிடம் எனது மகள் குறித்து கேட்ட போது, தலையின் பின் பக்கத்தில் அடித்து தாக்கினர். மூன்று மாதங்கள் கழித்து பெங்களூரூவில் ஒரு மருத்துவமனையில் நான் கண் விழித்தேன்” என்கிறார்.
மங்களூரூ திரும்பிய போது, அவரது வீடு எரிக்கப்பட்டது தெரிய வந்தது. “எனது துணி, ஆவணங்கள் மற்றும் எனது மகளின் துணி மற்றும் ஆவணங்கள் எரித்து சாம்பலாக்கப்பட்டிருந்தன” என்று கூறினார்.
தற்போது நடைபெற்று வரும் தோண்டும் பணிகளின் போது தனது மகளின் உடல் கிடைத்தால், அதை தன்னிடம் ஒப்படைக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பத்தை ஏற்படுத்திய 2012 சிறுமி வழக்கு
இந்த சம்பவங்களுக்கு இடையில் ஒரு சம்பவம் 2012-ம் ஆண்டு நடைபெற்றது.
2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் காயங்கள் நிறைந்த ஆடைகளற்ற ஒரு சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
“அவளது உடலை பார்த்தால், அவள் பல பேரால் பாலியல் துன்புறுத்துலுக்கு ஆளானவள் என்று யார் வேண்டுமானாலும் கூறிவிட முடியும்” என்கிறார் பிபிசியிடம் பேசிய அந்த சிறுமியின் தாய்.
சிறுமியின் குடும்பத்தினரும் உள்ளூர் மக்களும் காவல்துறை விசாரணை முறையாக நடத்தப்படவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர். உள்ளூர் மக்களும் உரிமை கோரும் அமைப்புகளும் நீதி கேட்க தொடங்கிய போது கர்நாடகா முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
சந்தோஷ் ராவ் என்பவரை குற்றம் சாட்டப்பட்டவர் என்று காவல்துறையினர் கொண்டு வந்து நிறுத்தினர். சிறுமியின் குடும்பத்தினர் புகாரில் குறிப்பிட்ட தர்மஸ்தலாவில் செல்வாக்கு மிக்க அந்த 4 பேரும் விடுவிக்கப்பட்டனர்
ஒன்பது ஆண்டு காலம் சிறையில் கழித்த சந்தோஷ் ராவை சிறப்பு சி பி ஐ நீதிமன்றம் விடுவித்தது. அவருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று நீதிமன்றம் கூறியது.
மேற்கூறிய வழக்குகளில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து காவல்துறையினரின் பதிலை கேட்க பிபிசி தொடர்ந்து முயன்றது. ஆனால் அவர்களை தொடர்பு கொள்ள இயலவில்லை.
தர்மஸ்தலாவின் “செல்வாக்கு மிக்கவர்கள்”
மேற்குறிப்பிட்டுள்ள வழக்குகள் மற்றும் தலித் நபர் எழுப்பிய குற்றச்சாட்டுகள்- இவை அனைத்திலும் பொதுவாக இருப்பது தர்மஸ்தலா கோயிலை நடத்தும் குடும்பத்தை நோக்கியே புகார் சொல்லும் கைகள் நீள்கின்றன.
“குற்றவாளி யார் என்று அனைவருக்கும் தெரியும்” என்று 2012-ம் ஆண்டு சடலமாக கண்டெடுக்கப்பட்ட சிறுமியின் தாத்தா கூறுகிறார்.
“அவர்கள் கொலை செய்து விட்டு, காவல்துறை குறித்த எந்த பயமும் இன்றி, உடல்களை சாலைக்கு அருகில் புதைத்துவிடுவர். கழிவறை வசதி இல்லாததால் அந்த காலத்தில் நாங்கள் காடுகளுக்கு செல்வோம். அப்போது காட்டுப் பன்றிகளால் தோண்டி எடுக்கப்பட்டிருக்கும் உடல்களை பார்ப்போம்” என்றார்.
இதே கருத்தை நாகரிக சேவா அறக்கட்டளையின் நிர்வாகி சோமநாதாவும் தெரிவிக்கிறார். “இங்கு ஒரு கும்பல் உள்ளது. அவர்கள் ‘டி’ (D) கும்பல் என்றழைக்கப்படுகின்றனர், அவர்களுக்கு தர்மஸ்தலாவில் உள்ள செல்வாக்குமிக்கவர்களின் ஆதரவு உள்ளது” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
உயிருடன் ஒருவர் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்து வழக்கை நடத்தி வரும் மகேஷ் ஷெட்டி திமரொடி, கடந்த 13 ஆண்டுகளில் தனக்கு எதிராக 25 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று கூறுகிறார்.
தர்மஸ்தலாவில் நடைபெற்றதாக புகார் எழுப்பப்படும் குற்றங்கள் குறித்து, ” நான் எனது சிறு வயதிலிருந்து இதை பார்த்து வருகிறேன். காடுகளில் அழுகிய உடல்கள் எத்தனை என்று தெரியுமா? சாலைகளில் புதைக்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கை தெரியுமா?” என்கிறார் அவர்.
இந்த சட்டப் போராட்டத்தில் அவருக்கு துணை நிற்கும் முன்னாள் காவல் அதிகாரியும் முன்னாள் பாஜக தலைவருமான கிரிஷ் மட்டேனவர், நூற்றுக்கணக்கான பாலியல் துன்புறுத்தல் மற்றும் கொலை வழக்குகள் பதிவு செய்யப்படவே இல்லை என்று குற்றம் சாட்டுகிறார்.
“குற்றவாளிகள் மதம் மற்றும் கடவுள் என்ற போர்வையை பயன்படுத்தி வருகின்றனர்” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
சமீப காலங்களில் எழுப்பப்படும் புகார்கள்
சமீப காலங்களிலும் செயற்பாட்டாளர்களும், பத்திரிகையாளர்களும் கோயிலை நடத்தி வரும் குடும்பம் பழி வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
மாணவர் தலைவர் தனுஷ் ஷெட்டி, தனது சமூக ஊடகப் பக்கத்தில் தர்மஸ்தலா குடும்பம் குறித்து தான் எழுத ஆரம்பித்த பிறகு, தன்னை செல்போனில், ” உனக்கு விரைவில் ஒரு விபத்து நிகழப் போகிறது” என்று குறுஞ்செய்தி வந்ததாக தெரிவித்தார்.
சுமார் இரண்டு மாதங்கள் முன்பு, அவர் ஆட்டோ ஒன்றினால் மோதப்பட்டதாக கூறுகிறார். அதன் பின், “நான் உனது விபத்தை நேரில் பார்த்தேன். அது கடவுளின் ஆசை” என்று மற்றொரு குறுஞ்செய்தி வந்ததாகவும் கூறுகிறார்.
காவல்துறை முதலில் புகாரை பெற மறுத்ததாகவும், காவல் கண்காணிப்பாளரை அணுகிய பிறகே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது என்று ஷெட்டி மேலும் கூறுகிறார். “எனினும் விசாரணைக்கு எதிராக நீதிமன்றத்தில் தடையாணை பெறப்பட்டது. தர்மஸ்தலாவில் செல்வாக்கு மிக்கவர்களை எதிர்த்து யார் போராடினாலும் அவர்கள் குறிவைக்கப்படுவார்கள்” என்று அவர் கூறினார்.
கர்நாடகாவில் உள்ள பிரபல யூடியூபர் எம் டி சமீர், தர்மஸ்தலாவில் உள்ள செல்வாக்குமிக்கவர்களுக்கு எதிராக பேசியதற்காக தானும் குறிவைக்கப்பட்டதாக கூறுகிறார். 2012ம் ஆண்டு சிறுமியின் மரணத்துக்கு பிறகு இந்த விவகாரம் குறித்த கவனத்தை ஈர்ப்பதற்கு சமீர் போன்ற உள்ளூர் சமூக ஊடகவியலாளர்கள் காரணமாக இருந்தனர்.
தற்போது மூன்று வழக்குகளை எதிர்கொண்டு வருவதாகவும் யூ டியூப் சேனலிலிருந்து உள்ளடகத்தை நீக்குமாறு பல சட்ட உத்தரவுகள் வந்துள்ளதாகவும் சமீர் பிபிசியிடம் தெரிவித்தார்
புகார் கொடுத்த முன்னாள் துப்புரவு ஊழியர் தனது வாக்குமூலத்தில், “பெயர்களை சொல்லும் முன் மாயமாவது அல்லது கொல்லப்படுவது” குறித்த கவலைகளை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கான பதிலை பெற தர்மஸ்தலா கோயில் பிரதிநிதிகளை பிபிசி அவர்களை தொடர்பு கொண்ட முயன்றது. ஆனால் அவர்களை தொடர்பு கொண்டு பதில் பெற இயலவில்லை.
கர்நாடக அரசியல் கட்சிகளின் நிலைபாடு
கர்நாடகாவில் செல்வாக்குள்ள அரசியல் கட்சிகள் – பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்றும் கோயிலை நடத்தும் குடும்பத்தினரை பாதுகாப்பதே அவர்கள் தைரியமாக செயல்பட காரணம் என்று மகேஷ் ஷெட்டி திமரொடி கூறுகிறார்.
“மாநில மற்றும் தேசிய அளவிலான தலைவர்கள் அவர்களை வந்து பார்க்கின்றனர்” என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
ஆனால் மூன்று கட்சிகளும் இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கின்றன.
தனது பெயரை குறிப்பிட விரும்பாத பாஜக செய்தித் தொடர்பாளர் ஒருவர், “சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை முடிந்து, விசாரணை அறிக்கை பொது வெளிக்கு வரட்டும்” என்றார்.
கர்நாடக காங்கிரஸ் ஊடக கமிட்டியின் துணைத் தலைவர் சத்ய பிரகாஷ், காங்கிரஸ் தலைமையிலான அரசே சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது என்று சுட்டிக்காட்டினார்.
“குற்றவாளிகள் எவ்வளவு செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தவர்கள் அவர்களை கண்டறிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டியது காங்கிரஸ் கட்சியின் பொறுப்பு. அதோடு, உண்மையை பேசுபவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதும் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பு” என்றார்.
அதே நேரம் மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த அறிவழகன் தங்கள் கட்சிக்கும் கோயிலை நடத்தும் குடும்பத்தினருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று கூறினார். “சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணை முடியும் வரை காத்திருப்போம்” என்றார்.
முன்னாள் துப்புரவு ஊழியரின் புகாரை எடுத்து வாதாடி வரும் வழக்கறிஞர் கே வி தனுஞ்சயா இந்த விவகாரத்தின் சமீபத்திய நிகழ்வுகளை தொகுத்து பேசினார். “தனது கட்சிக்காரரின் புகார்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்வது காவல்துறையினரின் வேலை” என்று பிபிசியிடம் கூறினார்.
“அவரது குற்றச்சாட்டுகள் கடந்த கால புகார்கள் அல்லது நிலுவையில் உள்ள விசாரணைகளுடன் எந்த விதத்திலும் சம்பந்தப்படவில்லை. இது முற்றிலும் புதிய புகார். எனக்கு தெரிந்த வரையில் இது இந்திய நீதித்துறையில் ஒரு அரிய வழக்காகும்” என்று அவர் கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு