பட மூலாதாரம், TN ASSEMBLY
தமிழ்நாடு அரசின் 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
திருக்குறள் மொழிபெயர்ப்புக்கு ரூ.133 கோடி ஒதுக்கீடு முதல் சென்னை அருகே புதிய நகரம் உருவாக்கப்படுவது வரை பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திருக்குறளை மொழிபெயர்க்க ரூ.133 லட்சம் ஒதுக்கீடு
திருக்குறளை 45 புதிய மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.133 லட்சம் ஒதுக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
தமிழ்மொழி வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்துப் பேசிய அவர் “வருங்காலங்களில் தமிழ் புத்தகக் கண்காட்சிகளை தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய பெருநகரங்களான புதுடெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, திருவனந்தபுரம் உள்ளிட்ட இந்திய நகரங்களிலும் சிங்கப்பூர், மலேசியா, துபாய் ஆகிய வெளிநாடுகளிலும் புத்தகக் கண்காட்சி நடத்த ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” என்று அறிவித்தார்.
ஆண்டுக்கு நூறு புத்தகங்கள் வீதம் வருகின்ற ஐந்து ஆண்டுகளில் 500 தமிழ்ப் புத்தகங்களை மற்ற மொழிகளில் மொழிபெயர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் நிதி அமைச்சர் அறிவித்தார்.
பட மூலாதாரம், Thangam Thennarasu/X
வெளிநாடு வாழ் இளம் தமிழர்களுக்கு தமிழ் மரபை அறிமுகம் செய்ய ரூ.10 கோடி ஒதுக்கீடு
வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் இளைய தலைமுறையினருக்கு தமிழ் மரபை முறையாக அறிமுகம் செய்திடும் வகையில், அயலக தமிழர் நல வாரியம் மூலம் அவர்களுக்கு தமிழ் மொழி மற்றும் நாட்டுப்புறக் கலையைப் பயிற்றுவிக்கும் 100 தமிழ் ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்களை வைத்து நேரடி வகுப்புகளை நடத்திட ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உலக தமிழ் ஒலிம்பியாட் போட்டி குறித்து அறிவிப்பு
“தமிழின் பெருமை மற்றும் சிறப்பை உலகத் தமிழ் இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்ல, தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பிற நகரங்களில் உள்ள பள்ளிகளிலும், உலகத் தமிழ் மையங்களிலும் பயிலும் மாணவர்களுக்கு கணினி வழி உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூ. 1 கோடி வழங்கப்படும்” என்று தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
தொல்லியல் துறைக்கான நிதி அறிவிப்பு
வரும் நிதி ஆண்டில் தொல்லியல் ஆராய்ச்சி மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ரூ. 7 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
மேலும், “தென்கிழக்கு ஆசியா, மத்தியத் தரைக்கடல், அரேபிய தீபகற்பம், ரோமப் பேரரசு பகுதிகளுடன் வைத்துக்கொண்ட கடல் வழி வணிகம் தொடர்பாக ஆழ்கடல் அகழ்வாய்வுகளை தமிழ்நாடு கடற்கரைப் பகுதிகளில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் முதல்கட்டமாக இந்த ஆண்டு தொல்லியல் ஆய்வாளர்களின் அறிவுரைப்படி காவிரிப் பூம்பட்டினம் முதல் நாகப்பட்டினம் வரை ஆழ்கடல் அகழ்வாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது” என்று அறிவித்தார்.
ஐம்பொன்னால் ஆன இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட செப்புத் திருமேனிகள் எழும்பூர் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன. அதன் சிறப்பை வெளிநாட்டினரும் ரசிக்கும் வகையில், மரபுசார் கட்டட அமைப்பில் தனியாக காட்சி அரங்கம் ஒன்று எழும்பூர் அருங்காட்சியகத்தில் அமைக்க ரு. 40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், @CMOTamilnadu
ஊரக வளர்ச்சி திட்டத்திற்கான அறிவிப்புகள்
2025-26 ஆண்டில் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்ட ரூ. 3500 கோடி ஒதுக்கீடு
முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 6100 கி.மீ கிராமப்புற சாலைகளை மேம்படுத்த ரூ. 2100 கோடி ஒதுக்கீடு
கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய சாலைகளின் பராமரிப்பு பணிகளுக்காக ரூ. 120 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாட்டின் அனைத்து குக்கிராமங்களும் தன்னிறைவு அடையும் வகையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உருவாக்கப்பட்ட அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி -2-ன் கீழ் 2329 கிராம ஊராட்சிகளில் ரூ.1087 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்படும்.
நகராட்சி நிர்வாகம்
- கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ள பணிகளுக்காக ரூ. 2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 6483 கி.மீ. நீளமுள்ள சாலைகளை ரூ. 3750 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை மாநகராட்சியில் கடும் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் ஒரு பகுதியாக வேளச்சேரி மற்றும் கிண்டியில் வசிக்கும் 7 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் வேளச்சேரி பிரதான சாலை துவங்கி, குருநானக் கல்லூரி சந்திப்பு வரை 3 கி.மீ. நீளத்திற்கு ரூ. 310 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டப்படும்.
- ரயில்வேதுறையுடன் இணைந்து கொருக்குப்பேட்டை ரயில்வே மேம்பாலம் ரூ. 70 கோடி மதிப்பில் கட்டப்படும்.
கொடுங்கையூர் குப்பைக் கொட்டும் வளாகத்தில் உயிரி எரிவாயு நிலையம் – ரூ. 3450 கோடி
- சென்னை பெருநகர மாநகராட்சியின் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் உயிரி எரிவாயு நிலையம், இயற்கை உரம் தயாரிக்கும் நிலையம், தானியங்கி பொருள் மீட்பு மையம் மற்றும் 21 மெகாவாட் திறன் கொண்ட திடக் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் பணிக்காக ரூ. 3450 கோடி திட்டக் காலத்திற்கான மதிப்பீட்டில் தொடங்கப்படும்.
சமச்சீர் வளர்ச்சி
சென்னை மாநகரத்தின் சமச்சீர் வளர்ச்சியை உறுதிசெய்திட வடசென்னை வளர்ச்சித் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நிதியாண்டில் அதற்காக ரூ. 6858 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்திடும் வகையில் ஒருங்கிணைந்த புதிய நகரங்களை உருவாக்குவதின் முதல்கட்டமாக சென்னைக்கு அருகே ஒரு புதிய நகரம் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும்.
மகளிர் நலன்
விடியல் பயணம் என்பது கீழ் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய அறிமுகம் செய்யப்பட்ட திட்டமாகும். அந்த ஆண்டு அத்திட்டத்திற்கான மானியத் தொகை ரூ. 3600 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நிதியாண்டில் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 37 ஆயிரம் கோடி அளவுக்கு வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், ஈரோடு, கரூர் மற்றும் இராணிப்பேட்டை உள்ளிட்ட 10 இடங்களில் புதிதாக தோழி மகளிர் விடுதிகள் கட்ட ரூ. 77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
‘ரூ’ தொடர்பாக எழுந்த சர்ச்சை
காணொளியில் நிதிநிலை அறிக்கை குறித்த இலச்சினையில் ரூபாயை குறிக்கும் ‘₹’ என்ற தேசிய சின்னத்திற்குப் பதிலாக தமிழில் ‘ரூ’ என்று தமிழ்நாடு அரசு பயன்படுத்தி இருந்தது.
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே பள்ளி கல்வித்துறைக்குத் தேவையான நிதியை வழங்க இயலும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்திருந்தார்.
பட மூலாதாரம், MK Stalin
இந்த நிலையில், மத்திய மாநில அரசுகளுக்கு இடையே மும்மொழிக் கொள்கை, ஹிந்தி திணிப்பு போன்ற விவகாரங்களில் நீடித்த வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது.
இத்தகைய சூழலில் தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையில் ‘ரூ’வை பயன்படுத்தியது தற்போது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு