பட மூலாதாரம், Getty Images
க்யோன் பெர்ரே சிண்ட்ரோம் என்ற நோய் பாதிப்பால், சென்னையில் ஒரு சிறுவன் உயிரிழந்ததாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், “மகாராஷ்டிரம், மேற்கு வங்கத்தை தொடா்ந்து ஜிபிஎஸ் நோய் தொற்றால் சென்னை எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.
திருவள்ளூா் அருகே திருவூா் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த பிரேம்குமாரின் மகன் பி.மைத்தீஸ்வரன் (9). சிறுவனுக்கு கடந்த ஜன. 22-ஆம் தேதி பள்ளிக்கு செல்ல முயன்ற போது அவருக்கு 2 கால்களும் நடக்க முடியாமல் அவதிக்குள்ளானாா். இதையடுத்து, அவரது பெற்றோா் வீட்டின் அருகே உள்ள விளையாட்டு மைதானத்துக்கு நடைப்பயிற்சி செல்ல அறிவுறுத்தினா். அங்கு நடை பயிற்சி சென்ற சிறுவன் நடக்க முடியாமல் 2 கால்களும் செயலிழந்து கீழே விழுந்தாராம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் பின் திருவள்ளூரில் உள்ள மருத்துவர்களிடம் சிறுவனை அழைத்து சென்ற பிறகு, எழும்பூர் குழந்தைகள் அரசு நல மருத்துவமனைக்கு அழைத்து வந்ததாககவும், அவருக்கு நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ஜிபிஎஸ் நோய் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் அந்த செய்தி மேலும் கூறுகிறது.
“நாளுக்கு நாள் அவா் கை, கால்கள், நரம்புகள் முழுவதும் செயலிழந்துள்ளன. இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 3 நாளுக்கு முன் உயிரிழந்தாா்” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றத்தில் ஊரடங்கு உத்தரவு
திருப்பரங்குன்றம் மலையில் அசைவ உணவு சாப்பிடலாமா கூடாதா என்ற சர்ச்சை நீடித்த வந்த நிலையில், அங்கு இரண்டு நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருப்பதாக, தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். சங்கீதா, பிஎன்எஸ்எஸ் பிரிவு 163 (ஐபிசி பிரிவு 144)-ன் கீழ் பிப்ரவரி 3ம் தேதி காலை 6 மணி முதல் பிப்ரவரி 5ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என அந்த செய்தி கூறுகிறது.
பட மூலாதாரம், Getty Images
சட்ட ஒழுங்கு நிலைமையை கருத்தில் கொண்டு போராட்டங்களை நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 4ம் தேதி போராட்டம் நடத்த இந்து முன்னணியிருக்கு காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர் என்றும் கூறுகிறது.
மேலும் “திருப்பரங்குன்றம் மலையில் சுப்பிரமணிய சுவாமி கோவிலும் சிக்கந்தர் தர்காவும் இருக்கின்றன. அந்த மலையில் ஆடுகளை பலியிடக் கூடாது என்றும் அசைவ உணவு சாப்பிடக் கூடாது என்றும் இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் இந்த விவகாரம் குறித்து சமூக ஊடகங்களில் மாறி மாறி கருத்து தெரிவித்து வருவதால், இது சட்ட ஒழுங்கு பிரச்னையாக மாறலாம் என்று கருதி, ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் நான்கு லட்சம் கள்ள சிகரெட் பறிமுதல்
சென்னையில் நான்கு லட்சம் கள்ள சிகரெட்டுகளை வருவாய் உளவுத்துறை இயக்ககம் சென்னை துறைமுகத்திலிருந்து பறிமுதல் செய்துள்ளதாக, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
“தாய்லாந்திலிருந்து கள்ள சிகரெட்டுகள் கடத்தப்படுவதாக கிடைத்தத் தகவலை அடுத்து, வருவாய் உளவுத்துறையினர் சென்னை துறைமுகத்துக்கு கப்பல் மூலம் வந்தடைந்த ஒரு கண்டெய்னரில் சோதனை நடத்தினர். அப்போது, வெளிநாட்டு பிராண்டு சிகரெட்டுகள் அந்த கண்டெய்னரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது” என்று அந்த செய்தி தெரிவிக்கிறது.
பட மூலாதாரம், Getty Images
மேலும், “இந்த கண்டெய்னரை பெறுவதற்கு யாரும் முன்வராததால், வருவாய் உளவுத்துறையினர் யாரையும் கைது செய்ய இயலவில்லை. கடத்தலில் ஈடுபட்ட நபரை தேடும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சுங்கத்துறையினர் 3.5 கோடி ரூபாய் மதிப்பிலான 20 லட்சம் கள்ள சிகரெட்டு குச்சிகளை பறிமுதல் செய்தனர். அவை துபாயிலிருந்து சென்னை துறைமுகத்துக்குக் கொண்டு வரப்பட்டன. அதேபோன்று, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், தாய்லாந்து மற்றும் துபாயிலிருந்து சென்னை கொண்டுவரப்பட்ட 15 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு கோடி கள்ள சிகரெட்டு குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது” என்று அந்த செய்தி தெரிவிக்கிறது.
சோனியா காந்திக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்
குடியரசுத் தலைவரை விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக கூறி, பாஜக எம்.பி.க்கள் நேற்று (பிப். 03) நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் சோனியா காந்தி்க்கு எதிராக உரிமை மீறல் தீர்மானத்தைக் கொண்டுவந்தனர் என்று இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், “நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்நாளான ஜனவரி 31-ம் தேதி நடைபெற்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். அப்போது, மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் இலக்குகள் குறித்து அவர் எடுத்துரைத்தார். நாடாளுமன்றத்துக்கு வெளியே அவரின் உரை குறித்து சோனியா காந்தியிடம் கருத்து கேட்டபோது” உரையின் இறுதியில் குடியரசுத் தலைவர் மிகவும் சோர்வடைந்து விட்டார். அவரால் பேச முடியவில்லை. பாவம்” என்று கூறினார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
மேலும், “அவரின் இந்த கருத்து குடியரசுத் தலைவரின் கண்ணியத்தை களங்கப்படுத்தும் வகையில் இருந்ததாக குடியரசுத் தலைவர் மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. மேலும், குடியரசுத் தலைவரை அவமானப்படுத்தும் வகையில் பேசிய சோனியா, ராகுல், பிரியங்கா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, முசாஃபர்பூர் நகரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு பிப்ரவரி 10-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சோனியா காந்திக்கு எதிராக நேற்று நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி.க்கள் உரிமை மீறல் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர்” என்று அந்த செய்தி கூறுகிறது.
இலங்கையில் ஒரு மாதத்தில் 11 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள், 7 பேர் பலி
இலங்கையில் இந்த ஆண்டின் தொடக்கம் முதல் 11 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றதாகவும், அதில் 7 பேர் உயிரிழந்து, இரண்டு பேருக்கு படுகாயம் ஏற்பட்டதாகவும் இலங்கை செய்தி ஊடகமான வீரகேசரி செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், “இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் திட்டமிட்டக் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 5 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன்போது, 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். அதேபோன்று, இதர காரணங்களால் மேலும் 6 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
பட மூலாதாரம், Getty Images
எவ்வாறாயினும் இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்ய காவல்துறையினர் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
இதனிடையே, வெளிநாட்டில் தலைமறைவாகி நாட்டில் திட்டமிட்ட குற்றச் செயல்களை ஒழுங்குபடுத்தும் 68 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.” என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு