கல்லே: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் இந்த மைல்கல் சாதனையை எட்டியுள்ள நான்காவது ஆஸ்திரேலிய வீரர் ஆகியுள்ளார்.
இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆலன் பார்டர், ஸ்டீவ் வாஹ் மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர். 115 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை ஸ்மித் எட்டியுள்ளார். தற்போது டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி வரும் வீரர்களில் ஜோ ரூட்டுக்கு (12,972 ரன்கள்) அடுத்ததாக அதிக ரன்கள் எடுத்துள்ள வீரராக ஸ்மித் அறியப்படுகிறார்.
இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் சிட்னி டெஸ்ட் போட்டியில் 9,999 ரன்கள் எடுத்து ஸ்மித் ஆட்டமிழந்தார். இந்த நிலையில் இன்று (ஜன.29) இலங்கை அணிக்கு எதிராக கல்லே கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் அவர் இந்த சாதனையை எட்டினார்.
இலங்கை vs ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடரில் கம்மின்ஸ் விளையாடாத நிலையில் அணியை கேப்டனாக ஸ்மித் வழிநடத்துகிறார். இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை கல்லே மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
முதல் நாளில் 81.1 ஓவர்கள் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 330 ரன்கள் எடுத்தது. உஸ்மான் க்வாஜா மற்றும் டிராவிஸ் ஹெட் இணைந்து முதல் இன்னிங்ஸை தொடங்கினர். ஹெட் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது ஆஸி. தொடர்ந்து பேட் செய்ய வந்த லபுஷேன் 20 ரன்களில் வெளியேறினார்.
பின்னர் கேப்டன் ஸ்மித் மற்றும் கவாஜா இணைந்து அபார கூட்டணி அமைத்தனர். கவாஜா, 210 பந்துகளில் 147 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்மித், 188 பந்துகளில் 104 ரன்கள் எடுத்துள்ளார். ஆஸ்திரேலியா 330 ரன்கள் எடுத்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிந்தது. மோசமான வானிலை காரணமாக முதல் நாள் ஆட்டம் முன்கூட்டியே முடிந்தது.