டெவால்ட் பிரேவிஸ் அதிரடி சதம்: 2-வது டி20 போட்டியில் ஆஸி.யை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா! | Dewald Brevis century south africa beats Australia in second T20I

Share

டார்வின்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 53 ரன்களில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்காவின் இளம் வீரர் டெவால்ட் பிரேவிஸ் அதிரடி சதம் விளாசி தனது அணியின் வெற்றிக்கு உதவினார்.

தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இரு அணிகளும் விளையாடுகின்றன. கடந்த 10-ம் தேதி தொடங்கிய டி20 தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த தொடரின் இரண்டாவது போட்டி இன்று (ஆக.12) நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. தென் ஆப்பிரிக்க அணி 6.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்தது தடுமாறியது. அதன் பின்னர் ஸ்டப்ஸ் உடன் இணைந்து ஆஸ்திரேலிய பந்து வீச்சை துவம்சம் செய்தார் டெவால்ட் பிரேவிஸ். ஸ்டப்ஸ் 22 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார்.

மறுமுனையில் ஆடிய டெவால்ட் பிரேவிஸ், 56 பந்துகளில் 125 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தனது இன்னங்ஸில் 12 ஃபோர்கள் மற்றும் 8 சிக்ஸர்களை டெவால்ட் பிரேவிஸ் விளாசி இருந்தார். 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்தது தென் ஆப்பிரிக்கா அணி. ஆஸ்திரேலியா தரப்பில் பந்து வீசிய ஹேசில்வுட், மேக்ஸ்வெல், ஸாம்பா, அபாட் ஆகியோர் தலா 4 ஓவர்கள் வீசி 40 ரன்களுக்கு மேல் கொடுத்திருந்தனர்.

219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆஸ்திரேலிய அணி விரட்டியது. அந்த அணி சார்பில் டிம் டேவிட் 24 பந்துகளில் 50 ரன்கள் விளாசினார். கேப்டன் மார்ஷ் 22, மேக்ஸ்வெல் 16 மற்றும் அலெக்ஸ் கேரி 26 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 17.4 ஓவர்களில் 165 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஆஸி. இதன் மூலம் 53 ரன்களில் வெற்றி பெற்றது தென் ஆப்பிரிக்கா. தற்போது இந்த தொடர் 1-1 என சமனில் உள்ளது. ஆட்ட நாயகன் விருதை டெவால்ட் பிரேவிஸ் வென்றார். தென் ஆப்பிரிக்காவின் மஃபாகா மற்றும் கார்பின் போஷ் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

டெவால்ட் பிரேவிஸ் சாதனை: இந்தப் போட்டியில் சதம் விளாசியதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணிக்காக டி20 கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை டெவால்ட் பிரேவிஸ் படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் சர்வதேச டி20 போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் ஆகியுள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் 5 பவுலர்களுக்கு எதிராக 20+ ரன்கள் கடந்த இரண்டாவது பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணி சார்பில் இளம் வயதில் டி20 கிரிக்கெட்டில் சதம் விளாசிய வீரர் என்ற சாதனையையும் டெவால்ட் பிரேவிஸ் படைத்துள்ளார். அதோடு மிக குறைந்த பந்துகளில் டி20 சதம் எட்டிய தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களில் இப்போது பிரேவிஸ் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவர் இந்தப் போட்டியில் 41 பந்துகளில் சதம் விளாசினார். இந்தப் பட்டியலில் 35 பந்துகளில் சதம் விளாசி டேவிட் மில்லர் முதல் இடத்தில் உள்ளார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com