இந்த நிலையில்தான் சில கோரிக்கைளை மாட்டு உரிமையாளர்களும், மாடுபிடி வீரர்களும் வைக்கிறார்கள். நம்மிடம் பேசிய ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், “தற்போதைய தமிழக முதல்வர், தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போருக்கு ஒரு காளைக்கு மாதம்தோறும் ரூ. 1000 உதவித்தொகையை வழங்க வேண்டும். பாரம்பரியத்தை பாதுகாக்கும் நோக்கில் காளைகளை வளர்ப்பவர்களுக்கு அதிகம் செலவாகிறது, அதற்கு உதவித்தொகை உதவும்.
அதுபோல் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ காப்பீடு செய்ய வேண்டும், அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்திலேயே காயம் ஏற்பட்டால் முதலுதவி மட்டும் செய்யாமல் அதிநவீன வசதிகளுடன் மருத்துவ மையத்தை அமைத்திருக்க வேண்டும், கார், பைக் என்று பரிசு அறிவிப்பதால் வசதிபடைத்த மாட்டுக்காரர்கள் தங்கள் மாடுகளை வீரர்கள் பிடிக்காமல் இருக்க மைதானத்துக்குள் இடையூறு செய்கிறார்கள், இதை தடுக்க வேண்டும், ஜல்லிக்கட்டில் மாடுகள் மற்றும் வீரர்கள் பங்கேற்பதில் பாரபட்சம் பார்க்க கூடாது” என்றனர்.

பாலமேடு பகுதியைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு பேரவை உறுப்பினர் ராமர் என்ற சேதுராமன், “நாங்கள் மூன்று தலைமுறையாக ஜல்லிக்கட்டு மாடுகளை வளர்த்து வருகிறோம். நான்கு நாட்டின மாடுகளை வளர்க்கிறோம். கார்த்திகை பிறந்து விட்டாலே உற்சாகமாகி விடுவோம். எங்கள் மாடுகளை ஜல்லிக்கட்டுக்கு தயார்படுத்தும் பணிகளில் ஈடுபடுவோம். தினமும் 2 கிலோ மீட்டர் நடை பயிற்சி, நீச்சல் பயிற்சி, மண் குத்துதல் பயிற்சி என அனைத்தும் வழங்குவோம். இரவு 8 மணிக்கு ஒரு கிலோ பருத்தி விதை, மக்காச்சோளம், குச்சி புண்ணாக்கு, உளுந்து அரிசியை கலந்து தீவனமாக வழங்குவோம். சக்திக்காக கூடுதலாக தினமும் பேரிச்சம்பழமும் கொடுக்கிறோம். இதனால் ஒரு மாட்டிற்கு ஒரு நாளைக்கு ரூ 300 வீதம் நான்கு மாடுகளுக்கும் தினசரி 1200 ரூபாய் செலவாகிறது. சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்த நாங்கள் சிரமத்திற்கு இடையில் நாட்டு மாட்டு இனங்கள் அழிந்து விடக்கூடாது என்ற நோக்கத்தோடு மாடுகளை வழிவழியாக வளர்த்து வருகிறோம்.