பட மூலாதாரம், Getty Images
(தமிழகம், இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் தொடர்பாக, 17/02/2025 அன்று வெளியான நாளிதழ் மற்றும் இணைய செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்)
சென்னையில் வாடகைப் பணம் தர மறுத்த இளைஞரை கொலை செய்த வழக்கில் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர் என தினமணி நாளிதழின் செய்தி தெரிவிக்கிறது.
அச்செய்தியில், “சென்னை, கொடுங்கையூர் ரிக்ஷா காலனி பகுதியைச் சேர்ந்தவர் கிரி (48). இவரது தாயார் சமீபத்தில் உயிரிழந்தார். இதற்கான இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்காக ஷாமியானா பந்தல் மற்றும் ஒலிபெருக்கி உள்ளிட்டவற்றை கிரியின் மகனான அஜித்குமார் (18) வாடகைக்கு எடுத்துள்ளார்.
ஆனால், அதற்கான வாடகைப் பணம் ரூ.8,000-ஐ கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாகத் தெரிகிறது. வாடகைப் பணத்தை கேட்டு ஷாமியானா பந்தல் உரிமையாளர்களான ஜனார்த்தனன், பார்த்திபன் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை அஜித்குமாருக்கு பல முறை கைப்பேசியில் தொடர்புகொண்டுள்ளனர்.
ஆனால், அழைப்பை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த ஜனார்த்தனன், பார்த்திபன் ஆகியோர் அஜித்குமாரின் வீட்டுக்குச் சென்று, கொலை செய்ததாக” அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து ஜனார்த்தனன், பார்த்திபன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என தினமணி நாளிதழின் செய்தி தெரிவிக்கிறது.
ராஜஸ்தான்: பள்ளி ஆசிரியர்களுக்கும் சீருடை, மாநில அரசு திட்டம்
மகாராஷ்டிரா, அசாம் மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்திலும் பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு ஒரே மாதிரியான சீருடை அணியும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என, இந்து தமிழ் திசை நாளிதழின் செய்தி கூறுகிறது.
இதுகுறித்து, அம்மாநில கல்வி அமைச்சக துறையின் மூத்த அதிகாரி கூறியுள்ளதாவது, “கல்வி துறை அமைச்சர் மதன் திலவர், வகுப்பறையில் மாணவர்கள் மத்தியில் நேர்மறையான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதில் மிக தீவிரமாக உள்ளார். இதன் மூலமாகத்தான் அவர்கள் வாழ்க்கையில் சரியான மதிப்பு மற்றும் கலாசாரங்களை கற்று உணர முடியும். இதனை உணர்ந்தே கல்வித் துறை அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் ஒரே மாதிரியான சீருடை அணியும் திட்டத்தை செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
இதனால், ஆசிரியர்கள் விருப்பம்போல் உடையணிந்து பள்ளிக்கு வரமுடியாது. ஆசிரியர்களின் உடை மாணவர்களிடத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனை மாற்றவே இந்த சீருடை திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
இவ்வாறு இந்து தமிழ் திசை நாளிதழின் செய்தி கூறுகிறது.
மணலி பயோகேஸ் தொழிற்சாலை விபத்தில் பொறியாளர் உயிரிழப்பு
மணலியில் உள்ள சென்னை மாநகராட்சியின் உயிரி எரிவாயு தொழிற்சாலையில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட விபத்தில் சரவணகுமார் (25) எனும் பொறியாளர் கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார் என தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மணலி பல்ஜிபாளையம் சின்னசேக்காடு பகுதியில், சென்னை மாநகராட்சி திடக் கல்வி மேலாண்மை துறையின் பயோகேஸ் உற்பத்தி மையம் செயல்பட்டு வருகிறது. இதனை ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனம் ஒன்று இயக்கி பராமரித்து வருகிறது.
“இந்நிலையில், சனிக்கிழமை பயோ கேஸ் சேமிப்பு பகுதிக்குச் செல்லும் குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக திடீரென அழுத்தம் ஏற்பட்டு வெடித்ததாகக் கூறப்படுகிறது. இதில் அங்கிருந்த கட்டடம் அடியோடு சரிந்து விழுந்ததில், அங்கு தங்கியிருந்த பொறியாளர் சரவணகுமார் மற்றும் லாரி ஓட்டுநர் பாஸ்கரன் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் கட்டட இடிபாடுகளை அகற்றி இருவரையும் மீட்டனர். இதில், படுகாயமடைந்த பொறியாளர் சரவணகுமார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படும் வழியில் உயிரிழந்தார். லாரி ஓட்டுநர் பாஸ்கரனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து காரணமாக மணலி, திருவொற்றியூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை துர்நாற்றம் வீசியது என்றும் இதுகுறித்து மணலி காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் தினமணி செய்தி தெரிவிக்கிறது.
‘கும்பமேளாவே அர்த்தமற்றது’- லாலு பிரசாத் யாதவ்
பட மூலாதாரம், @laluprasadrjd
டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழந்த சம்பவத்துக்காக ரயில்வே துறையை சாடியுள்ள பிகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ், ‘கும்பமேளாவே அர்த்தமற்றது’ என்று கூறியுள்ளார் என இந்து தமிழ் திசை நாளிதழின் செய்தி கூறுகிறது.
டெல்லி சம்பவத்துக்காக மத்திய பாஜகவை குற்றம்சாட்டியுள்ள லாலு, ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் கோரியுள்ளார் என அந்தச் செய்தி குறிப்பிடுகிறது.
டெல்லி சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ரயில்வே முன்னாள் அமைச்சரும், ராஷ்டிரிய ஜனதா தளம் நிறுவனருமான லாலு பிரசாத், “கூட்ட நெரிசல் சம்பவம் மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு போதிய ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்பதையே இந்தச் சம்பவம் காட்டுகிறது. இந்தக் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும். இது ரயில்வே துறையின் முழு தோல்வியாகும்.” என்று தெரிவித்துள்ளார்.
பிரயாக்ராஜில் நடைபெறும் மத விழாவுக்கு மக்கள் அதிக அளவில் செல்வது குறித்த கேள்விக்கு பதிலளித்த லாலு, “கும்பமேளாவே அர்த்தமற்றது.” என்று தெரிவித்ததாக அச்செய்தி கூறுகிறது.
லாலுவின் கருத்துக்கு எதிர்வினையாற்றியுள்ள பிகார் பாஜக செய்தித் தொடர்பாளர் மனோஜ் ஷர்மா, “தனது அரசியலுக்காக லாலு பிரசாத் இவ்வாறு பேசி வருகிறார். ஆர்ஜேடி தலைவர்கள் எப்போதும் இந்துமத உணர்வுகளை அவமதித்தே வருகின்றனர்.
மகா கும்பமேளாவை அர்த்தமற்றது எனச் சொல்லும் லாலு பிரசாத்தின் சமீபத்திய இந்தப் பேச்சு, இந்து மதத்தினைப் பற்றிய கட்சியின் மனநிலையை வெளிப்படுத்துகிறது.” என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு இந்து தமிழ் திசை நாளிதழின் செய்தி தெரிவிக்கிறது.
இலங்கை: 79வது வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்கவுள்ள அநுரகுமார
பட மூலாதாரம், Getty Images
இலங்கையின் 79 ஆவது வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற அடிப்படையில் இலங்கை அதிபர் அநுர குமார திஸாநாயக்க இன்று திங்கட்கிழமை (17) காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார் என்று ‘வீரகேசரி’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டின் அடுத்தக்கட்ட அபிவிருத்தி இலக்கை நிறைவேற்றும் வகையிலான முன்மொழிவுகள் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், அனைத்துத் தரப்பினரையும் பொருளாதார நடவடிக்கையில் இணைத்துக்கொள்ளும் திட்டங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. அத்துடன் வரி வருமானத்தை அதிகரித்துக்கொள்ளும் வகையில் இம்முறை விசேட அவதானம் செலுத்தப்படவில்லை என்கிறது அந்தச் செய்தி.
அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள், ஆசிரியர்கள், வைத்தியர்கள், விவசாயிகள், கடற்றொழிலாளர்கள், கைத்தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்துறைகளை சார்ந்தவர்கள் வரவு செலவுத் திட்டத்தில் கூடிய அவதானம் செலுத்தியுள்ளனர்.
2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்ட மூலம் முதலாம் வாசிப்புக்காக 2025.01.09 ஆம் திகதியன்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவினால் நாடாளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்டது.
நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அதாவது வரவு செலவுத் திட்ட உரையை அதிபர் அநுரகுமார திசாநாயக்க நிதி, திட்டமிட்டல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற அடிப்படையில் இன்று காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தில் 2025.01.01 ஆம் தேதி முதல் 2025.12.31 ஆம் தேதி வரையான காலப்பகுதிக்கு அரச செலவினமாக 4,218 பில்லியன் ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு அரச செலவினமாக 6,978 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு அரச செலவினம் 2760 பில்லியனாக குறைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், கல்வி, சுகாதாரம் மற்றும் நலன்புரி ஆகிய துறைகளுக்குக் கடந்த காலங்களை காட்டிலும் கணிசமான அளவு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அரச சேவையாளர்களின் சம்பளம் கணிசமான அளவு அதிகரிக்கப்படுவதுடன், தனியார் துறையினரின் சம்பளத்தை நிறுவன கட்டமைப்பின் ஊடாக அதிகரித்துக்கொள்ளும் மூலோபாய திட்டங்கள் முன்வைக்கப்படவுள்ளன.
இதற்கமைய 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) வரை 7 நாட்கள் நடைபெறும். இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 25 ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு