ஏடிபி சாலஞ்சர் சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 6-வது நாளான நேற்று ஆடவர் இரட்டையர் பிரிவு அரை இறுதியில் போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சாகேத் மைனேனி, ராம்குமார் ராமநாதன் ஜோடி, முதலிடத்தில் உள்ள சீன தைபேவின் ரே ஹோ, ஆஸ்திரேலியாவின் மேத்யூ கிறிஸ்டோபர் ரோமியோஸ் ஜோடியை எதிர்த்து விளையாடியது.
ஒரு மணி நேரம் 38 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சாகேத் மைனேனி, ராம்குமார் ராமநாதன் ஜோடி 7-6(5), 7-6(8) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சாகேத் மைனேனி, ராம்குமார் ராமநாதன் ஜோடி, ஜப்பானின் ஷின்டாரோ மோச்சிசுகி, கைடோ உசுகி ஜோடியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. ஜப்பான் ஜோடி அரை இறுதி சுற்றில் 4-6, 6-4, 10-6 என்ற செட் கணக்கில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், விஜய் சுந்தர் பிரசாந்த் ஜோடியை வீழ்த்தியது.
ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டங்களில் கிரேட் பிரிட்டனின் பில்லி ஹாரிஸ் 6-3, 7-6(6) என்ற செட் கணக்கில் கஜகஸ்தானின் டிமோஃபி ஸ்கடோவையும், பிரான்ஸின் கைரியன் ஜாக்கெட் 6-4, 4-6, 7-6(6) என்ற செட் கணக்கில் ஜப்பானின் ஷின்டாரோ மோச்சிசுகியையும், செக்குடியரசின் டாலிபோர் ஸ்வர்சினா 6-3, 6-0 என்ற செட் கணக்கில் உக்ரைனின் ஒலெக்சாண்டர் ஓவ்சரென்கோவையும், சுவீடனின் இலியாஸ் யெமர் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் ஜப்பானின் ரியோ நோகுசியையும் வீழ்த்தி அரை இறுதி சுற்றில் கால்பதித்தனர்.