புதுடெல்லி: நடப்பு ஐபிஎல் சீசனில் ஆட்டத்தில் முடிவை எட்ட முதல் முறையாக சூப்பர் ஓவர் வரை டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் சென்றது. இதில் டெல்லி அணி சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.
டெல்லியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் அக்சர் படேல், 14 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். ஸ்டப்ஸ் 34, ராகுல் 38, அபிஷேக் போரெல் 49 ரன்கள் எடுத்தனர்.
189 ரன்கள் எடுத்தா வெற்றி என்ற இலக்கை ராஜஸ்தான் அணி விரட்டியது. அந்த அணியின் கேப்டன் 19 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். ஜெய்ஸ்வால் மற்றும் நித்திஷ் ராணா தலா 51 ரன்கள் எடுத்தனர். துருவ் ஜுரேல் 26, ஹெட்மயர் 15 ரன்கள் எடுத்தனர்.
ராஜஸ்தான் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய டெல்லி பவுலர் ஸ்டார்க் 8 ரன்கள் கொடுத்தார். இதன் மூலம் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. இரண்டு அணிகளின் ரன்களும் சமனான காரணத்தால் சூப்பர் ஓவர் வீசப்பட்டது.
சூப்பர் ஓவரில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 5 பந்துகளில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்தது. அந்த ஓவரில் டெல்லி தரப்பில் ஸ்டார்க் வீசி இருந்தார். 0, 4, 1, 4 (நோ-பால்), ரன் அவுட், ரன் அவுட் என அமைந்தது.
12 ரன்கள் எடுத்தால் வெற்றி என சூப்பர் ஓவரில் விளையாடியது டெல்லி. கே.எல்.ராகுல் மற்றும் ஸ்டப்ஸ் அந்த ஓவரில் விளையாடினர். சந்தீப் சர்மா ஓவரை வீசினார். 2, 4, 1, 6 என விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளது டெல்லி அணி.
கடந்த 2022-ம் ஆண்டு சீசனுக்கு பிறகு ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடிய முதல் சூப்பர் ஓவராக இது அமைந்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மொத்தமாக 15 சூப்பர் ஓவர்கள் விளையாடப்பட்டு, ஆட்டத்தின் முடிவு எட்டப்பட்டுள்ளது.