சிரியாவில் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் தலைமையிலான கிளர்ச்சிக் குழு டமாஸ்கஸை கைப்பற்றியுள்ளது. அதிபர் அசாத் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதிபர் அசாத்திற்கு ஆதரவளித்த ரஷ்யா அவர் நாட்டைவிட்டு வெளியேறியதாகக் கூறியுள்ளது.
இதற்கிடையே சிரியாவில் இப்போது என்ன நடக்கிறது? உள்நாட்டுப் போர் முதல் தற்போது வரை அங்கு என்ன நடந்தது? முழு விவரங்களையும் இங்கு தெரிந்துகொள்வோம்.
சிரியாவில் என்ன நடந்தது?
பஷார் அல் அசாத் குடும்பம் சிரியாவை இரும்புக்கரம் கொண்டு 53 ஆண்டுகள் ஆட்சி செய்தது. இப்போது அது முடிவுக்கு வந்துவிட்டது.
அதிபர் பஷார் அல்-அசாத் 2000ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தார். அதற்கு முன்னதாக அவரின் தந்தை ஏறக்குறைய 30 ஆண்டுகள் சிரியாவை ஆட்சி செய்தார்.
பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அவர் நாட்டின் அமைதியான, ஜனநாயக சார்பு எழுச்சியைக் குலைத்தார். அது பேரழிவு தரும் உள்நாட்டுப் போராக மாறியது.
இதில், ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 12 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஆனால் கடந்த புதன் கிழமை, ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் எனப்படும் இஸ்லாமியவாத அரசாங்க எதிர்ப்புக் குழு வடமேற்கில் ஒரு பெரிய தாக்குதலை வெற்றிகரமாக வழிநடத்தியது.
கிளர்ச்சியாளர்கள் சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவை கைப்பற்றினர். பின்னர் சிரிய ராணுவம் வீழ்ச்சி அடைந்ததால், தலைநகர் டமாஸ்கஸுக்கு கிளர்ச்சிப் படை முன்னேறியது.
பல சிரியர்கள் தாங்கள் ஒரு புதிய சுதந்திர உணர்வை உணர்வதாகக் கூறுகிறார்கள். சிலர் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள்.
சிரியா யார் கட்டுப்பாட்டில் இருந்தது?
ரஷ்யா, இரான் மற்றும் இரானிய ஆதரவு ஆயுதக்குழுவின் உதவியுடன் அதிபர் அசாத் தலைமையிலான அரசு நாட்டின் பெரும்பாலான நகரங்களின் மீதான கட்டுப்பாட்டை மீட்டெடுத்த பிறகு, சிரியாவில் நீண்டகாலமாக நடந்து வந்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக உணரப்பட்டது.
உள்நாட்டுப் போரின் மையமாக இருந்த பகுதிகள் பெரும்பாலும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தன.
ஆனால், அமெரிக்கா மற்றும் சிரிய ஜனநாயகப் படையின் ஆதரவு பெற்ற குர்திஷ் இனக்குழு தலைமையிலான கூட்டணியால் கட்டுப்படுத்தப்பட்ட வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகள் உள்பட நாட்டின் பல பகுதிகள் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை.
அலெப்போ, இட்லிப் ஆகியவையே, கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி பகுதிகளாக இருந்தன. இவை, துருக்கி எல்லையில் அமைந்துள்ளன. அங்கு வசித்து வந்த 40 லட்சம் மக்களில் பலரும் இடம்பெயர்ந்தனர்.
இந்தப் பகுதிகள் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) ஆயுதக்குழுவின் படைகளின் ஆதிக்கத்தில் இருந்தன. ஆனால் பிற கிளர்ச்சிப் பிரிவுகளும் ஜிஹாதி குழுக்களும் அங்கு செயல்பட்டன. சிரிய தேசிய ராணுவம் (SNA) என அறியப்படும் துருக்கிய ஆதரவு கிளர்ச்சிப் பிரிவுகளும், அங்குள்ள சில பகுதிகளை துருக்கிய படைகளின் ஆதரவுடன் கட்டுப்படுத்தியது.
ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் யார் ?
கடந்த 2011இல் அல் கொய்தாவின் நேரடி இணைப்பாக ‘ஜபத் அல்-நுஸ்ரா’ (Jabhat al-Nusra) என்ற வேறொரு பெயரில் ‘ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்’ அமைக்கப்பட்டது.
இஸ்லாமிய அரசு (IS) எனத் தன்னை அழைத்துக்கொள்ளும் குழுவின் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதியும் ஜபத் அல்-நுஸ்ரா குழுவின் உருவாக்கத்தில் ஈடுபட்டார்.
சிரியா அதிபர் அசாத்துக்கு எதிரான குழுக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய குழுவாக இது கருதப்பட்டது. ஆனால் அதன் புரட்சிகர கொள்கையைவிட, ‘ஜிஹாதி சித்தாந்தம்’ அக்குழுவின் உந்து சக்தியாகக் கருதப்படுகிறது.
மேலும் அந்த நேரத்தில், “சுதந்திர சிரியா” எனும் பெயரில் இயங்கும் முக்கிய கிளர்ச்சிக் கூட்டணியுடன் இந்தக் குழு முரண்படுவதாகவும் அறியப்பட்டது.
கடந்த 2016ஆம் ஆண்டில், இக்குழுவின் தலைவரான அபு முகமது அல்-ஜவ்லானி, அல் கொய்தாவுடன் உள்ள தொடர்பை பகிரங்கமாகப் பிரித்து, ஜபத் அல்-நுஸ்ராவை கலைத்தார். பின்னர் ஒரு புதிய அமைப்பை நிறுவினார்.
ஓராண்டு கழித்து, இதேபோன்ற பிற குழுக்களுடன் இணைந்தபோது ‘ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்’ என்ற பெயரை இந்தக் குழு பெற்றது.
இருப்பினும், ஐ.நா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பல நாடுகள் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் அமைப்பை அல்-கொய்தாவின் துணை அமைப்பாகக் கருதி, அல்-நுஸ்ரா முன்னணி என்று அடிக்கடி குறிப்பிடுகின்றன.
இதன் தலைவரான அபு முகமது அல்-ஜவ்லானியை, பிரத்யேகமாக நியமிக்கப்பட்ட உலகளாவிய பயங்கரவாதி என்று அமெரிக்கா அறிவித்தது. அதோடு அவரைப் பிடிக்க வழிவகுக்கும் தகவல்களுக்கு 10 மில்லியன் டாலர் பரிசு வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.
அல்-கொய்தா, ஐஎஸ் அமைப்பு உள்பட அதன் எதிராளிகளை நசுக்குவதன் மூலம் இட்லிப் மற்றும் அலெப்போ மாகாணங்களில் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் தனது அதிகாரத்தைப் பலப்படுத்தியது.
இது இஸ்லாமிய சட்டத்தின்படி பிரதேசத்தை நிர்வகிப்பதற்கு `சிரிய இரட்சிப்பு அரசாங்கத்தை’ அமைத்தது.
ஜவ்லானி வெள்ளிக்கிழமை சிஎன்என் நேர்காணலில், “புரட்சியின் இலக்கு அசாத் ஆட்சியை அகற்றுவதே” என்றும், “அரசு நிறுவனங்கள் மற்றும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட கவுன்சில்” அடிப்படையிலான ஓர் அரசாங்கத்தை உருவாக்கத் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறினார்.
கிளர்ச்சியாளர்கள் ஏன் தாக்குதல் நடத்தினர்?
பல ஆண்டுகளாக, சிரிய அரசாங்கப் படைகள் கட்டுப்பாட்டை மீட்டெடுக்க முயன்றதால், இட்லிப் போர்க்களமாகவே இருந்தது.
ஆனால் 2020இல், இட்லிப் நகரத்தை மீட்பதற்கான அரசின் உந்துதலை நிறுத்துவதற்காக துருக்கியும் ரஷ்யாவும் மத்தியஸ்தம் செய்து போர்நிறுத்தம் கொண்டு வந்தன. ஆங்காங்கே சண்டைகள் நடந்தாலும் போர்நிறுத்தம் பெரும்பாலும் நீடித்தது.
ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் மற்றும் அதன் ஆதரவுக் குழுக்கள் நவம்பர் 27ஆம் தேதியன்று “ஆக்கிரமிப்பைத் தடுக்க” ஒரு தாக்குதலைத் தொடங்கியதாகக் கூறினர். அரசாங்கமும், அதன் நட்பு நாடான இரான் ஆதரவு ஆயுதப் படைகளும் வடமேற்கில் பொதுமக்கள் மீதான தாக்குதல்களை அதிகரித்து வருவதாகக் குற்றம் சாட்டினர்.
ஆனால், பல வருடகால யுத்தம், பொருளாதாரத் தடைகள் மற்றும் ஊழலால் அரசாங்கம் பலவீனமடைந்து, அதன் ஆதரவாளர்கள் மற்ற மோதல்களில் ஈடுபட்டிருந்த நேரத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
இரான் ஆதரவு பெற்ற லெபனான் குழுவான ஹெஸ்பொலா, போரின் ஆரம்ப ஆண்டுகளில் கிளர்ச்சியாளர்களை பின்னுக்குத் தள்ளுவதில் முக்கியப் பங்கு வகித்தது. ஆனால், சமீபத்தில் லெபனானில் இஸ்ரேலின் தாக்குதலால் ஹெஸ்பொலா பாதிக்கப்பட்டது.
இஸ்ரேலிய தாக்குதல்கள் சிரியாவில் இரானிய ராணுவ தளபதிகளை அகற்றியது மட்டுமின்றி அங்குள்ள அரசாங்க சார்பு ஆயுதக்குழுவினரின் விநியோக வழிகளைச் சிதைத்தது. யுக்ரேனில் நடந்த போரால் ரஷ்யாவும் திசைதிருப்பப்பட்டது. அவர்கள் இல்லாமல், அசாத்தின் படைகள் பலவீனமடைந்தன.
கிளர்ச்சிக் குழுக்கள் அதிபர் அசாத்தை வீழ்த்தியது எப்படி?
சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவின் பெரும்பகுதியை ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் தலைமையிலான கிளர்ச்சியாளர்கள் நவம்பர் 30 அன்று கைப்பற்றினர். தங்களது முழு அளவிலான தாக்குதலைத் தொடங்கிய மூன்று நாட்களில் இது நடந்தது.
அரசாங்கம் தனது துருப்புகள் மற்றும் பாதுகாப்புப் படைகளை விரைவாகத் திரும்பப் பெற்ற பின்னர் அவர்கள் அங்கு சிறியளவிலான எதிர்ப்பை மட்டுமே எதிர்கொண்டதாக அவர்கள் கூறினர்.
அசாத் தனது ஆதரவாளர்களின் உதவியுடன் கிளர்ச்சியாளர்களை “நசுக்க” சபதம் செய்தார். ரஷ்ய போர் விமானங்கள் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தங்கள் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தின.
இரான் ஆதரவு ஆயுதக்குழுவினர் அலெப்போ-டமாஸ்கஸ் நெடுஞ்சாலையில் தெற்கே உள்ள அடுத்த நகரமான ஹமாவை சுற்றி ராணுவத்தின் தற்காப்புக் கோடுகளை வலுப்படுத்த படைகளை அனுப்பியது. இருப்பினும், ஹமா வியாழக்கிழமை அன்று கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் வந்தது.
சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸை கைப்பற்றுவதே தங்களது அடுத்த இலக்கு என்று கிளர்ச்சியாளர்கள் உடனடியாக அறிவித்தனர். மேலும் ஒருநாள் மோதலுக்குப் பிறகு சனிக்கிழமை இரவு அதைத் தங்கள் வசம் கொண்டு வந்தனர்.
அதேநேரத்தில், சிரியாவின் தென்மேற்கில், ஜோர்டான் எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் மற்ற கிளர்ச்சிப் பிரிவுகள், 24 மணிநேரத்திற்குள் டெரா, சுவைடா நகரங்களைக் கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து, டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதிகளை அவர்கள் அடைந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், கிளர்ச்சியாளர்கள் டமாஸ்கஸுக்குள் நுழைந்து, நாட்டின் மிகவும் மோசமான ராணுவ சிறை என்று கூறப்படும் சைட்னாயாவில் இருந்த கைதிகளை விடுவித்ததாக அறிவித்தனர்.
இரண்டு மணிநேரத்திற்குள், அவர்கள்: “கொடுங்கோல் ஆட்சியாளர் பஷார் அல்-அசாத் தப்பி ஓடிவிட்டார்” என்று அறிவித்தனர்.
“அவர் ஆட்சியின் கீழ் 50 வருட அடக்குமுறை, 13 வருட குற்றங்கள், கொடுங்கோன்மை மற்றும் கட்டாய இடப்பெயர்வுக்குப் பிறகு, இருண்ட காலத்தின் முடிவையும் சிரியாவின் புதிய சகாப்தத்தின் தொடக்கத்தையும் நாங்கள் இன்று அறிவிக்கிறோம்,” என்று அவர்கள் கூறினர்.
கிளர்ச்சியாளர்கள் வருவதற்கு சற்று முன்னர் அதிபர் தலைநகரில் இருந்து விமானம் மூலம் எங்கோ ரகசிய இடத்திற்குச் சென்றதாக மூத்த ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
அசாத்தின் பிரதமர் முகமது அல்-ஜலாலி, “சிரிய மக்களால் தேர்வு செய்யப்பட்ட “எந்தவொரு தலைமையுடனும் ஒத்துழைக்கத் தயார்” என்று ஒரு வீடியோவில் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து சிரியாவிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் இருக்கும் சிரிய குடிமக்கள், அதிபர் அசாத்தின் ஆட்சி முடிவுக்கு வந்ததைக் கொண்டாடி வருகின்றனர். சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள உமையாத் சதுக்கம் அப்பகுதி மக்களின் கொண்டாட்டத்திற்கான மையமாக இருக்கிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.