சென்னை: திமுக பொருளாளரும், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு நேற்று வெளியிட்ட அறிக்கை: ஆம் ஆத்மி கட்சியின் தலைமையிலான டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில், அம்மாநிலத்தின் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவை சி.பி.ஐ கைது செய்திருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாஜவின் அதிகார அச்சுறுத்தலுக்கான ஆக்டோபஸ் கரங்கள் 2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிற நிலையில், தற்போது எதிர்க்கட்சிகளை நோக்கி மிக வேகமாக-அராஜகமாக நீண்டு வருகிறது. “சிபிஐ கைது செய்ய விரும்பவில்லை. ஆனால் அரசியல் அழுத்தம் காரணமாகவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது” என டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் முன்வைத்துள்ள குற்றச்சாட்டினையும் எளிதில் புறந்தள்ளிவிடமுடியாது.
அதிகாரத்தில் இருக்கும்போது அதன் அமைப்புகளை, எதிர்க்கட்சிகளை பழிவாங்கப் பயன்படுத்தியவர்கள், பின்னாளில் வரலாற்றின் குப்பைத் தொட்டிகளில் தூக்கி வீசப்பட்ட உதாரணங்கள் நிறையவே உண்டு என்பதை ஒன்றிய பாஜ அரசில்-சி.பி.ஐ அமைப்பை ஏவி விடுவோர் உணர வேண்டும்.எத்தனை ஊடகங்களை வளைத்து உண்மைகளை மறைக்கப் பார்த்தாலும், மக்கள் மன்றத்தில் அது அம்பலமாகி விடும். எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கி, ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் தனது மூர்க்கப் போக்கை ஒன்றிய பாஜ அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். இல்லாவிட்டால், இவற்றை கவனித்துக் கொண்டிருக்கும் மக்கள், வெறும் பார்வையாளர்களாக மட்டும் இருக்க மாட்டார்கள். பாடம் புகட்டும் நீதிபதிகளாக மாறி, 2024 நாடாளுமன்ற தேர்தலில் வட்டியும் முதலுமாகத் திருப்பி வழங்குவார்கள் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.