பட மூலாதாரம், Getty Images
சி.பி.எஸ்.இ. பள்ளியாக அங்கீகாரம் பெற மாநில அரசுகளின் தடையில்லா சான்று (No Objection Certificate) இல்லாமலும் மத்திய அரசிடம் விண்ணப்பிக்கலாம் என மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) தெரிவித்துள்ளது.
இந்த திருத்தம் குறித்த அறிவிப்பு வெளியான பிறகு பலதரப்பட்ட கருத்துகளை கல்வியாளர்கள் முன்வைக்கின்றனர்.
மாற்றப்பட்ட விதி என்ன?
சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் பள்ளிகளை இணைத்துக் கொள்ள உருவாக்கப்பட்டிருக்கும் இணைப்பு துணை விதிகள் 2018-ல் பிரிவு 2.1.5, 2.1.6, 2.1.7 மற்றும் 2.1.8-ல் குறிப்பிடப்பட்டுள்ள பள்ளிகளை சி.பி.எஸ்.இ. பள்ளிகளாக மாற்றுவதற்கு மாநில அரசுகளின் தடையில்லா சான்று தேவை.
அதன்படி, பள்ளிகளை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இணைத்துக் கொள்ள சரஸ் (SARAS) பேனலில், மாநில அரசுகளின் தடையில்லா சான்று கொண்டோ அல்லது அந்த சான்று இல்லாமலோ விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த கல்வி ஆண்டு இல்லாமல், வருகின்ற 2026-27 கல்வி ஆண்டில் இது நடைமுறைபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தடையில்லா சான்று இல்லாமல் ஒரு பள்ளி விண்ணப்பிக்கும் பட்சத்தில், அது தொடர்பாக மாநில அரசின் கருத்துகளைக் கேட்டு கடிதம் ஒன்று அனுப்பப்படும். ஏதேனும் கருத்துகள் இருந்தால் மாநில அரசுகள் அதனை சி.பி.எஸ்.இ-யிடம் 30 நாட்களில் கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். அந்த 30 நாட்களில் சம்பந்தப்பட்ட மாநில கல்வித்துறையிடம் இருந்து பதில் வராத பட்சத்தில் மீண்டும் ஒருமுறை சம்பந்தப்பட்ட மாநிலத்திற்கு நினைவூட்டல் வழங்கப்படும். 15 நாட்களுக்குள் அதற்கான பதில் ஏதும் வரவில்லை என்றால், மாநில அரசு அந்த பள்ளிக்கு சி.பி.எஸ்.இ. அந்தஸ்து வழங்க எந்தவிதமான ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்று கருதி சி.பி.எஸ்.இ. அங்கீகாரம் அளிக்கப்படுவது தொடர்பாக பரிசீலிக்கப்படும்,” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், saras.cbse.gov.in
கல்வியாளர்கள் கூறுவது என்ன?
பட மூலாதாரம், Getty Images
“மத்திய அரசு கல்விக்கான சித்தாந்தத்துடன் செயல்படுவதற்கு பதிலாக தனக்கான சித்தந்தத்தை பள்ளிகள் மூலம் விதைக்க நினைக்கும் இன்றைய சூழலில் கல்வித்துறையில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் ஒவ்வொன்றும் சிக்கல்களைதான் உருவாக்கும் என்று கூறுகிறார்,” அனைத்திந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி மாநில செயலாளர் கே. யோகராஜன்.
”தங்களது பாடத்திட்டத்துக்கான ‘டிமாண்ட்’ ஒன்று இருப்பதை சி.பி.எஸ்.இ. உணர்ந்துள்ளதால் தற்போது, மேலும் பல பள்ளிகளை தங்களின் பக்கம் ஈர்த்துக் கொள்ள இத்தகைய அறிவிப்பை வெளியிட்டிருக்கலாம். மாணவர்கள் சி.பி.எஸ்.இ.யின் கீழ் படிக்கும்போது, மாணவர்கள் எதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை மாநில அரசால் தீர்மானிக்க இயலாது. மாநிலங்கள் தங்களின் சுய நிர்ணயத்தை இத்தகைய செயல்பாடுகளால் இழக்க நேரிடும்,” என்று குறிப்பிட்டார் அவர்.
பட மூலாதாரம், Getty Images
எழும் எதிர்ப்பு
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பிப்ரவரி 23 அன்று வெளியிட்ட அறிக்கையில், “பொதுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள கல்வித்துறையில் மத்திய அரசு எதேச்சதிகாரமாக ஆதிக்கம் செலுத்துவது கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கு ஆபத்தை உண்டாக்கும் நடவடிக்கை. மத்திய இடைநிலை கல்வி வாரியம், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமலே சி.பி.எஸ்.இ பள்ளிகளை தொடங்குவதற்கு நேரடியாக அனுமதி வழங்கும் வகையில் விதிமுறைகளை திருத்தியிருப்பது கண்டனத்திற்குரியது,” என்று தெரிவித்தார்.
”தேசிய கல்விக் கொள்கையையும், மும்மொழி திட்டத்தையும் தமிழ்நாடு கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், சி.பி.எஸ்.இ. பள்ளிகளை தொடங்குவதற்கு மாநில அரசின் அனுமதி தேவையில்லை என்று கூறுவது பாஜக அரசின் இந்தி திணிப்பிற்கான மற்றொரு செயல்திட்டம்” என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் வைகோ.
தமிழ்நாட்டில் பி.எம்.ஶ்ரீ பள்ளிகளுக்கு அனுமதி வழங்காவிட்டால், தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ நடைமுறைப்படுத்தாவிட்டால், தமிழ்நாட்டின் கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதி ரூ. 2,152 கோடியை வழங்க இயலாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசினார்.
இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், புது அறிவிப்பு பல சந்தேகங்களை எழுப்புவதாக தெரிவித்தார் யோகராஜன்.
சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்குமா?
தமிழ்நாடு அனைத்து தனியார் பள்ளிகளின் சங்கமான ‘ஸ்கூல் வாய்ஸின்’ மாநிலத் தலைவர் மார்ட்டின் கென்னடி பிபிசி தமிழிடம் பேசிய போது, “தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 12 ஆயிரம் தனியார்ப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் அனைத்துமே சி.பி.எஸ்.இ. பள்ளிகளாக தங்களை அறிவித்துக் கொள்ளும் என்று நினைக்கக்கூடாது,” என்றார்.
“சில பள்ளி தாளாளர்கள், நிர்வாகம், நிர்வாகத்தோடு தொடர்பில் இருக்கும் அரசியல் பிரமுகர்கள் என்று ஒரு பள்ளி சி.பி.எஸ்.இ. திட்டத்தில் இணைத்துக் கொள்ள பல காரணங்கள் இருக்கின்றன. தடையில்லா சான்று தேவையில்லை எனும் அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்படும் போது, சில தனியார் பள்ளிகள் தங்களை அதில் இணைத்துக் கொள்ள வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் எவ்வளவு பள்ளிகள் இணையக் கூடும் என்பது திட்டம் முறையாக செயல்பாட்டுக்கு வந்த பிறகே தெரியும். அதுகுறித்து முன் அனுமானம் தேவையற்றது,” என்று கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
‘வரவேற்கத்தக்க மாற்றமே’
தனியார் பள்ளிகள் சங்கத்தின் மாநில பொருளாளர் ஶ்ரீதர்,” ஒரு பள்ளிக் கட்டடம் கட்ட அனுமதி வழங்குவது முதல் அதற்கு தேவையான மின்சாரம், குடிநீர் வழங்குவது வரை அனைத்தும் மாநில அரசின் பொறுப்பு. மத்திய அரசு, மாநில அரசுகளின் கருத்தை கேட்கும் என்றுதான் சுற்றறிக்கையும் கூறுகிறது. எளிமையாக கூற வேண்டும் என்றால் மாநில அரசுகளிடம் தடையில்லா சான்று வாங்கும் பணியை இனி மத்திய அரசே பார்த்துக் கொள்ளும் என்பதுதான். இதனால் ஒரு பள்ளிக்கு சி.பி.எஸ்.இ. அங்கீகாரம் வழங்குவதில் ஏற்படும் கால தாமதம் குறையும்” என்று கூறினார் அவர்.
மேற்கொண்டு பேசிய அவர், “உலகமயமாக்கல் உலகத்தை சுருக்கிவிட்டது. காலத்தின் தேவைக்கு ஏற்ப இங்கே பள்ளி பாடத்திட்டங்களும் மாற்றம் அடைகின்றன. இந்த திருத்தம் வரவேற்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். கிராமப்புற மாணவர்கள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டங்களைப் படிக்க இது உதவும்,” என்று அவர் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு