கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பயணித்த கார் சாலை விபத்தில் சிக்கிய நிலையில் அவர் காயமின்றி தப்பினார்.
நேற்று (பிப்.20) இரவு மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியில் துர்காபூர் விரைவுச் சாலையில் அவரது கான்வாயில் இருந்த கார்கள் அணிவகுத்துச் சென்றுள்ளன. ரேஞ்ரோவர் ரக காரில் மிதமான வேகத்தில் கங்குலி பயணித்துள்ளார்.
அப்போது திடீரென லாரி ஒன்று வேகமாக அவர்களது கான்வாயை முந்திச் சென்றுள்ளது. அதன் மீது மோதாமல் இருக்க கங்குலி பயணித்த காரின் ஓட்டுநர் பிரேக் பிடித்துள்ளார். அதனால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும் கங்குலியின் கான்வாயில் அவரது காரை பின் தொடர்ந்து வந்த கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி உள்ளன. மேலும், கங்குலி பயணித்த கார் மீதும் மோதின. இதில் கங்குலி உட்பட யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
விபத்து காரணமாக 10 நிமிடங்கள் வரை கங்குலி காத்திருந்துள்ளார். அதன் பின்னர் தனது பயணத்தை அவர் தொடர்ந்துள்ளார். ஏற்கெனவே திட்டமிட்டபடி பர்த்வான் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அதில் தனது சர்வதேச கிரிக்கெட் அனுபவம் மற்றும் இந்திய கிரிக்கெட்டின் வருங்காலம் குறித்தும் பேசினார்.
கங்குலி பயோபிக்: பாலிவுட் சினிமா நடிகர் ராஜ்குமார் ராவ் தனது பயோபிக் படத்தில் தனது பாத்திரத்தில் நடிப்பதை கங்குலி உறுதி செய்துள்ளார்.
இந்திய அணிக்காக 113 டெஸ்ட் மற்றும் 311 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ள கங்குலி, சர்வதேச கிரிக்கெட்டில் 18,575 ரன்களை எடுத்துள்ளார். அவரது தலைமையிலான அணி 2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தது.
2008-ல் ஓய்வுக்கு பிறகு பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் மற்றும் பிசிசிஐ தலைவராகவும் செயல்பட்டார். தற்போது ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் கிரிக்கெட் இயக்குநராக பணியாற்றி வருகிறார். ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடும் டெல்லி கேபிடல்ஸ், மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் விளையாடும் டெல்லி அணி மற்றும் எஸ்ஏ20 லீக்கில் விளையாடும் கேபிடல்ஸ் அணியை ஜேஎஸ்டபிள்யூ தன்வசம் கொண்டுள்ளது.