மும்பை: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான அணியில் ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். துணை கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பிப்ரவரி 20-ம் தேதி வங்கதேசத்துடன் மோதுகிறது. இந்தத் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி தேர்வுக்குழுவினர் இன்று மும்பையில் அறிவித்தனர். இதே அணியே இங்கிலாந்துக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி விவரம்: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, கே.எல்.ராகுல், ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா (இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு மட்டும்).
இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பிப்ரவரி 20-ம் தேதி வங்கதேசத்துடன் மோதுகிறது. தொடர்ந்து 23-ம் தேதி பாகிஸ்தானுடனும், மார்ச் 2-ல் நியூஸிலாந்துடனும் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்திய அணி பங்கேற்கும் இந்த ஆட்டங்கள் துபாயில் நடத்தப்படுகிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் மட்டும் ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டுள்ளார். இந்தத் தொடரில் வரும் பிப்ரவரி 6, 9 மற்றும் 12-ம் தேதிகளில் நடைபெறுகிறது. கேப்டனாக ரோஹித் சர்மா தொடர்கிறார். துணை கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். 2023-ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரின்போது ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்ட வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள போதிலும், முழு உடல் தகுதி இருக்கும் பட்சத்தில் மட்டுமே ஜஸ்பிரீத் பும்ரா விளையாடுவார் என கூறப்பட்டுள்ளது. மேலும் அவரை 5 வாரகாலம் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதால் இங்கிலாந்து அணிக்கு எதிரான இருதரப்பு தொடரின் முதல் இரு ஆட்டங்களிலும் பும்ரா விளையாடமாட்டார் என தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.
இளம் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அறிமுக வீரராக அணியில் இடம்பெற்றுள்ளார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களாக ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் அணியில் சேர்க்கப்படவில்லை. விஜய் ஹசாரே தொடரில் 750 ரன்களுக்கு மேல் குவித்துள்ள கருண் நாயருக்கும் இடம் வழங்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.