தேவை:
மைதா மாவு – 50 கிராம்
கோகோ பவுடர் – ஒரு டேபிள்ஸ்பூன்
பேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன்
சமையல் சோடா – ஒரு சிட்டிகை
உப்பு சேர்க்காத வெண்ணெய் – 75 கிராம்
கிராம்பு, முட்டை – 2
சர்க்கரை – 100 கிராம்
சர்க்கரை 20 கிராம் (கேரமல் செய்ய)
காய்ச்சி ஆறவைத்த பால் – தேவையான அளவு
பேரீச்சை – 30 கிராம்
(கொட்டை நீக்கி, பொடியாக நறுக்கவும்)
டூட்டி ஃப்ரூட்டி- 30 கிராம்
(பொடியாக நறுக்கவும்)
உலர்திராட்சை, முந்திரி – 30 கிராம்
(பொடியாக நறுக்கவும்)
பாதாம், வால்நட் – தலா 20 கிராம்
(பொடியாக நறுக்கவும்)
ஆரஞ்சு (அ) எலுமிச்சை தோல்
துருவல் – கால் டீஸ்பூன்
வெனிலா எசென்ஸ் – 5 சொட்டுகள்
பட்டை – ஒரு சிறிய துண்டு
ஜாதிக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – கால் டீஸ்பூன் (விரும்பினால்).
செய்முறை:
வெண்ணெயை ஃப்ரிட்ஜிலிருந்து வெளியே எடுத்துக் கொஞ்ச நேரம் அப்படியே வைக்கவும். மைதா மாவுடன் பேக்கிங் பவுடர், சமையல் சோடா, உப்பு, கோகோ பவுடர் சேர்த்துச் சலிக்கவும். ஒரு டீஸ்பூன் மைதாமாவுடன் பாதாம், முந்திரி, வால்நட், பேரீச்சை, டூட்டி ஃப்ரூட்டி, ஆரஞ்சு (அ) எலுமிச்சைத் தோல் துருவல், உலர்திராட்சை சேர்த்துக் கலக்கவும். கிராம்புடன் பட்டை, ஜாதிக்காய்த்தூள் சேர்த்து மிக்ஸியில் பவுடராக அரைத்து எடுக்கவும் (சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் சுலபமாகப் பொடிக்கலாம்).
வாணலியில் கேரமல் செய்யக் கொடுத்துள்ள சர்க்கரையைச் சேர்த்து லேசாகக் கருகும் வரை சிறு தீயில் வைத்துக் கிளறவும். சர்க்கரை பிரவுன் நிறமாக மாறும்போது கவனமாகக் கால் கப் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கவும் (மேலே தெறிக்கும் என்பதால் கவனமாகச் செய்ய வேண்டும்). நன்றாகக் கரைந்ததும் இறக்கி ஆறவிடவும். இதுவே கேரமல் சிரப். பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றவும். அதனுடன் வெண்ணெய், சர்க்கரை சேர்த்து நன்றாக நுரை வரும்வரை பிளெண்டரால் அடிக்கவும். பிறகு, மைதாக் கலவையைச் சிறிது சிறிதாகச் சேர்த்து கரண்டியால் மெதுவாகக் கலக்கவும் (முட்டை அடிக்கும் கரண்டியால் கலக்கவும். பிளெண்டர் உபயோகிக்க வேண்டாம். கேக் எழும்பாது. தேவைப்பட்டால் சிறிதளவு பால் சேர்த்துக்கொள்ளலாம்).
பிறகு கேரமல் சிரப், வெனிலா எசென்ஸ், நட்ஸ் கலவை, பொடித்த கிராம்புக் கலவைச் சேர்த்து மெதுவாகக் கலக்கவும். குக்கரில் ஒரு கப் தூள் உப்பைப் பரப்பவும். உப்பின் மீது தட்டு வைத்து குக்கரை மூடி மூன்று நிமிடங்கள் வரை சூடாக்கவும் (குக்கர் விசில் பயன்படுத்த வேண்டாம். குக்கர் வெடித்துவிடும்). பிறகு ஆறு இஞ்ச் அளவு கேக் பானில் சிறிதளவு வெண்ணெய் தடவி, மைதா மாவைத் தூவவும். (கேக் ஒட்டாமல் வர உதவும்). இதனுள் கேக் மாவை முக்கால் பாகம் வரை ஊற்றவும்.
பிறகு லேசாகத் தட்டி குக்கர் மூடியைத் திறந்து பாத்திரத்தை உள்ளே வைத்து மீண்டும் மூடி, சிறு தீயில் முப்பது நிமிடங்கள் வரை வேகவிட்டு எடுக்கவும். தேவையானால் மீண்டும் பத்து நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். பிறகு கேக் பாத்திரத்தை வெளியே எடுத்து ஆறவிடவும். பானில் இருந்து கேக்கை வெளியே எடுத்து துண்டுகளாக்கிப் பரிமாறவும்.