சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஸ்வின் ஓய்வு! | team india player Ravichandran Ashwin retires from international cricket

Share

பிரிஸ்பன்: இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான சென்னையை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடிய பிரிஸ்பன் டெஸ்ட் போட்டி சமனில் முடிந்த நிலையில் அவர் ஓய்வை அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் அஸ்வின் இடம்பிடித்தார். இந்த பயணத்தில் அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற பகலிரவு போட்டியில் அவர் விளையாடி இருந்தார். இந்த நிலையில் தற்போது ஓய்வை அறிவித்துள்ளார்.

இந்தியாவின் அபார சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் 537 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இந்தியாவில் கும்ப்ளேவுக்கு அடுத்ததாக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய சுழற்பந்து வீச்சாளராக அஸ்வின் அறியப்படுகிறார்.

கடந்த 2010 முதல் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அஸ்வின் விளையாடி வந்தார். 38 வயதான அவர், 105 டெஸ்ட், 116 ஒருநாள் மற்றும் 63 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். 2011-ல் ஒருநாள் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்தவர். அனைத்து பார்மெட் கிரிக்கெட்டிலும் மொத்தமாக 4,394 ரன்கள் மற்றும் 765 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

“டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். இது ஆழ்ந்த யோசனைக்கு பிறகு எடுத்த முடிவு. இந்தியாவுக்காக நான் விளையாடியது மறக்க முடியாத உன்னத பயணம். அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், பிசிசிஐ மற்றும் ரசிகர்கள் என அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என் நெஞ்சில் எப்போதுமே ஸ்பெஷலானதாக இருக்கும்” என அஸ்வின் தெரிவித்துள்ளார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com