பட மூலாதாரம், Getty Images
“இனி வீட்டில் ஒரு வேளை வைக்கும் குழம்பை மூன்று வேளையும் சாப்பிட போகிறோம்,” என்கிறார் சென்னையைச் சேர்ந்த பாரதி.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் எண்ணெய் மற்றும் எரிபொருள் விநியோகச் சங்கிலி உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் வீட்டு பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் முன் பதிவு செய்யும் காலத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
அதே போல வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் உணவகங்கள், விடுதிகள் எனப் பல்வேறு தரப்பினரும் இதன் தாக்கத்தை உணர ஆரம்பித்துவிட்டனர்.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில் “எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் இடையூறுகள் மற்றும் திரவமயமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) விநியோகத்தில் நிலவும் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கவும், அந்த கூடுதல் உற்பத்தியை வீட்டு எல்பிஜி பயன்பாட்டிற்கு பயன்படுத்தவும்” உத்தரவு பிறப்பித்துள்ளது.
“உணவகங்கள் மற்றும் பிற தொழில்களுக்கு பயன்படுத்தப்படும் எல்பிஜி விநியோகத்தை மதிப்பாய்வு செய்ய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும்” என்றும் அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தது.
வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் முன்பதிவு செய்யும் காலமும் 21 நாளில் இருந்து 25 நாளாக மாற்றப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
‘உணவகங்கள் மூடினால் மக்களுக்குதான் நேரடி பாதிப்பு’
“திடீரென சிலிண்டர் நிறுத்தப்பட்டது உணவகங்களுக்கு மிகப்பெரிய அடி” என பெங்களூரு உணவகங்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், “70 நாட்களுக்கு சிலிண்டர் விநியோகத்தில் இடையூறு இருக்காது என மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில் திடீரென சிலிண்டர் நிறுத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக, “மார்ச் 10 முதல் உணகங்கள் மூடப்படும்” என்றும் அந்த அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பிரச்னை தமிழ்நாட்டிலும் எதிரொலித்தது. “அத்தியாவசிய துறைகள் போல உணவுத்துறையும் 24 மணி நேரமும் செயல்படுகிறது, வணிக சிலிண்டர் தடைபட்டால், கல்லூரி விடுதிகள், ரயில் பயணிகள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்படுவார்கள்.” என சென்னை ஓட்டல்கள் சங்கம் பிரதமருக்கும் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டனர்.
“அத்தியாவசிய துறைகளின் கீழ் உணவகங்களுக்கு சிலிண்டர்கள் வழங்கப்பட வேண்டும்,” என்று அந்த கடித்தத்தில் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
‘வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாட்டால் கொரோனா காலத்தில் ஏற்பட்ட பதற்றமான நிலையை மீண்டும் சந்திக்க வேண்டியிக்கும்’ என்று சென்னை ஓட்டல்கள் சங்கத்தின் தலைவர் ரவி தெரிவித்துள்ளார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “வணிக சிலிண்டர் இல்லையென்றால் உணவகங்கள் மட்டுமின்றி தேநீர் கடைகள் கூட இயங்க முடியாது, இது மக்களை நேரடியாகப் பாதிக்கும்.” என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், “உணவகங்கள் விறகு கட்டையில் இருந்து எரிவாயுக்கு ஏற்ற வகையில் சமையல் கூடங்களில் மாற்றம் செய்ததால் இப்போது எரிவாயு மட்டும்தான் ஒரே வழி.” என்றும் தெரிவித்தார்.
வணிக சிலிண்டர்களை முற்றிலும் நிறுத்தாமல் 50% அளவுக்காவது வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

சென்னையில் உள்ள பல்வேறு உணவகங்களில் உணவுகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவதாக உணவக வாயில்களில் எழுதப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
உணவு வகைகளை குறைப்பதோடு சில உணவு பொருட்கள் கிடைக்கும் நேரங்களிலும் மாற்றம் ஏற்படும் என கோவையில் உள்ள ஒரு பிரபல உணவகம் கூறியுள்ளது.
இந்த தட்டுப்பாடு பொதுமக்களை பாதிப்பதைப் போலவே ஓட்டல் தொழிலை நம்பியுள்ள 50 லட்சம் பேரையும் நேரடியாகப் பாதிக்கும் என்கிறார் தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் வெங்கடசுப்பு.
வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஓட்டல்கள் செயல்படுகின்றன, சிலிண்டர் தட்டுப்பாடு நீங்கவில்லை என்றால் இதனை நம்பியுள்ள லட்சகணக்கானோர் வேலை இழக்க நேரிடும்.” என்று தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
ஆடை தயாரிப்பு தொழில்களுக்கு என்ன பாதிப்பு?
வணிக சிலிண்டர் தட்டுப்பாடு உணவகங்களுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தாமல் உள்நாட்டு உற்பத்தியிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
“இந்த தாக்கம் தமிழ்நாட்டின் மேற்கு பகுதிகளான கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்படும் ஆயத்த ஆடை தயாரிக்கும் தொழில்களை கடுமையாகப் பாதிக்கும்” என்கிறார் அனைத்திந்திய வர்த்தக சிலிண்டர் விநியோகம் செய்யும் சங்கத்தின் தலைவர் மகேந்திரன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “ஆடை தொழிற்சாலைகளில் 425 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை ஆடைகளை டையிங்க் செய்து அதனை உலர வைக்க பயன்படுத்தப்படுகிறது. சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக இந்த தொழில்களுக்கு சிலிண்டர் விநியோகிக்க முடியாத நிலை உள்ளது. இதன் மூலம் பலர் வேலைகளை இழக்க நேரிடும்” என்று கூறினார்.
“குறுகிய கால இடைவெளியில் குறைந்த அளவிலான சிலிண்டர்களையாவது வழங்கினால் தான் ஆயத்த ஆடை தயாரிக்கும் தொழில்களையும் பாதுகாக்க முடியும்,” என்றும் அவர் தெரிவித்தார்.

எண்ணெய் நிறுவனங்கள் என்ன சொல்கின்றன?
“வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் வழங்குவதில் எந்தப் பிரச்னையும் இல்லை” என சென்னையில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ராஜசேகர் ராஜாராம் தெரிவித்தார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “பல வணிக நிறுவனங்கள் தனியாரிடம் சிலிண்டர் வாங்கி பயன்படுத்துகிறார்கள். இது போன்ற பிரச்னை காலங்களில் அவர்கள் கைவிரித்து விடுகிறார்கள். இது போன்ற காலங்களில் நாங்கள் அதனை ஈடு செய்ய வேண்டும் என்று சொல்வது சரியல்ல” என அவர் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “மக்கள் பயன்படுத்தும் வீட்டு சிலிண்டர்களின் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அறிவுறுத்தியதால் அதில் நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம்.” என்றும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் இணைந்து கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
“எல்பிஜி உற்பத்தியை மேம்படுத்தவும் வீட்டு பயன்பாடு மற்றும் மருத்துவமனை, கல்வி நிலையங்கள் போன்ற அத்தியாவசிய வீட்டுப் பயன்பாடு அற்ற துறைகளுக்கும் அதனை முன்னுரிமைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியமற்ற துறைகளிடமிருந்து வரும் கோரிக்கைகளை ஆராய எண்ணெய் நிறுவனங்களின் இணை இயக்குநர்கள் அடங்கிய குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தகுதி, தேவை மற்றும் சிலிண்டர் கையிருப்பை பொருத்து முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
வீட்டு சிலிண்டர் முன்பதிவு காலம் நீட்டிப்பு
இந்த நிலையில் இந்த கால நேரம் நீட்டிப்பு குடும்பத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து ஆவடியை சேர்ந்த பாரதி பிபிசி தமிழிடம் பேசுகையில், “காலையில் இது குறித்த செய்தியை பார்த்தவுடன் நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். இனி ஒரு வேளை வைக்கும் குழம்பை மூன்று வேளையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
“ஒரு சிலிண்டர் எத்தனை நாட்கள் வரும் என்பதை கணக்கு வைத்துக்கொண்டு அதற்கேற்றார் போல சமாளிப்போம், சிலிண்டர் வர காலதாமதம் ஆனால் மின்சார அடுப்பு பயன்படுத்தி அதனை சரி செய்வோம், ஆனால் தற்போது இந்த அறிவிப்பு எங்கள் வீட்டு மின் கட்டணத்தை அதிகரித்து விடுமோ என்ற அச்சத்தை தருகிறது” என்றார் அவர்.
பட மூலாதாரம், Getty Images
அத்தியாவசிய பொருட்கள் சட்டம் அமல்
சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை சீரமைக்க மத்திய அரசு அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை (ECA) அமல்படுத்தியுள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டரைப் பதுக்குதல், கள்ளச்சந்தையில் விற்பனை செய்தலை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இந்த தட்டுப்பாட்டை சமாளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் அவசர ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பிறகு எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்த முதலமைச்சர், “வணிக எரிவாயு தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள உணவகங்களுக்கு தேவையான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்,” என்று பிரதமர் மோதிக்கு வலியுறுத்தினார்.
பிபிசி தமிழுடன் பகிருங்கள்
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு