பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், ஓம்கார் கரம்பெல்கர்
- பதவி, பிபிசி
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
காலை எழுந்த பிறகும் போதுமான தூக்கம் கிடைக்காதது போன்ற உணர்வு உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். பின்னர் பகலில் சிறிது ஓய்வு நேரம் கிடைத்தாலே தூக்கம் வருவது போலத் தோன்றலாம் அல்லது கண்கள் தானாக மூடத் தொடங்கலாம். ஆனால், பகல் நேரத்தில் தொடர்ந்து தூக்கம் வருவது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல.
அடிக்கடி கண் சொருகுதல், வேலை செய்யும்போதோ அல்லது வாகனம் ஓட்டும்போதோ தூக்கம் வருதல் போன்ற அறிகுறிகள் இருந்தால், அதற்குப் பின்னால் தீவிரமான உடல்நலக் காரணங்கள் இருக்கக்கூடும்.
அதிகப்படியான பகல் நேர தூக்கம் (EDS) என்பது வெறும் சோம்பேறித்தனத்தின் அறிகுறி மட்டுமல்ல. உடலில் உள்ள பல்வேறு கோளாறுகளின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
வாழ்க்கைமுறை மாற்றங்கள், அதிக திரைப் பயன்பாடு, மனஅழுத்தம், போதிய தூக்கமின்மை மற்றும் மாறி மாறி வேலை செய்யும் ஷிப்ட் முறைகள் போன்ற காரணங்களால் இந்தப் பிரச்னை அதிகரித்து வருகிறது.
இது வேலைத்திறனை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், விபத்துகளின் அபாயத்தை அதிகரிக்கலாம். மனநலத்தையும் பாதித்து, நீண்டகால நோய்கள் ஏற்படும் அபாயத்தையும் உயர்த்தக்கூடும். பலர் இதை “நான் சோர்வாக இருக்கிறேன்” என்று கூறி அலட்சியப்படுத்திவிடுகின்றனர். ஆனால், தொடர்ந்து தூக்கம் வருவது ஒரு முக்கியமான உடல்நல எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம்.
அப்படியானால், பகலில் ஏன் தூக்கம் வருகிறது? இது சாதாரண சோர்வா அல்லது தூக்கக் கோளாறின் அறிகுறியா? இதைத் தவிர்க்க என்ன செய்யலாம்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை அறிந்துகொள்வது முக்கியம்.
பகலில் அதிக தூக்கம் வருவதற்கான காரணங்கள் என்ன?
பகலில் அதிக தூக்கம் வருவதற்கு ஒரே ஒரு காரணம் இல்லை. பல உடல் மற்றும் மனநலக் காரணிகள் இணைந்து இதை ஏற்படுத்தலாம்.
இரவில் போதுமான மற்றும் தரமான தூக்கம் கிடைக்காதது முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. தாமதமாக உறங்குவது, நீண்ட நேரம் மொபைல் அல்லது கணினித் திரையைப் பார்ப்பது, இரவில் அடிக்கடி விழித்துக்கொள்வது போன்றவை உடலின் இயற்கையான தூக்கச் சுழற்சியை பாதிக்கின்றன.
தூக்கத்தின் போது சுவாசம் தடைபடும் ஸ்லீப் அப்னியா போன்ற தூக்கக் கோளாறுகளும் பகல் நேர தூக்கத்தை அதிகரிக்கக்கூடும்.
மனச்சோர்வு, அதிக மனஅழுத்தம், சில மருந்துகளின் பக்கவிளைவுகள், மது அருந்துதல், அதிக கஃபைன் உட்கொள்ளுதல் ஆகியவையும் தூக்கத் தரத்தை பாதிக்கக்கூடும்.
தைராய்டு கோளாறு, நீரிழிவு நோய், உடல் பருமன் போன்ற உடல்நலப் பிரச்னைகளும் பகல் நேர தூக்கத்தை அதிகரிக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, பகலில் தொடர்ந்து தூக்கம் வருவதை வெறும் பழக்கவழக்கங்களின் விளைவு என்று கருதாமல், அதற்குப் பின்னால் உள்ள காரணங்களைப் புரிந்துகொள்வது முக்கியம்.
பட மூலாதாரம், Getty Images
சாதாரண சோர்வுக்கும் அதிக தூக்கத்திற்கும் என்ன வித்தியாசம்?
கடுமையான உடல் உழைப்பு அல்லது வேலை காரணமாக ஏற்படும் சோர்வு இயல்பானது. ஓய்வு, நல்ல உணவு மற்றும் தூக்கம் மூலம் அதிலிருந்து மீள முடியும்.
சோர்வு என்பது உடல் அல்லது மன ரீதியான களைப்பு உணர்வாகும். சோர்வாக இருக்கும் ஒருவருக்கு ஆற்றல் குறைவாக உணரப்படலாம். ஆனால் பொதுவாக அவர்கள் விழித்திருக்க முடியும்.
பட மூலாதாரம், Getty Images
ஆனால் அதிகப்படியான பகல் நேர தூக்கத்தில், ஒருவர் விழித்திருக்க வேண்டிய நேரத்திலும் தூங்கிவிடும் நிலை ஏற்படலாம். கூட்டங்கள், உரையாடல்கள் அல்லது வாகனம் ஓட்டும்போது கூட கண் விழித்திருக்க சிரமமாக இருக்கலாம்.
இரவில் போதுமான தூக்கம் இல்லாத நிலை நீண்ட காலம் தொடரும்போதுதான் பிரச்னைகள் தீவிரமடைகின்றன.
மூளைக்கு போதுமான அளவில் புத்துணர்ச்சி அளிக்கும் தூக்கம் கிடைக்காவிட்டால், விழிப்புணர்வு, கவனம் செலுத்தும் திறன், நினைவாற்றல் மற்றும் உடனடியாகச் செயல்படும் திறன் ஆகியவை குறையத் தொடங்கும். இதன் விளைவாக, பகல் முழுவதும் தொடர்ந்து தூக்கம் வருவது போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.
கவனிக்க வேண்டிய அறிகுறிகள்
- அடிக்கடி கொட்டாவி விடுதல்
- கவனம் செலுத்துவதில் சிரமம்
- காலை நேர தலைவலி
- எரிச்சல் மற்றும் மறதி
- தெரியாமல் தூங்கிவிடுதல்
- அன்றாட செயல்பாடுகளின் போது தூக்கம் வருதல்.
என்னென்ன பிரச்னைகளை ஏற்படுத்தும்?
அதிகப்படியான பகல் நேர தூக்கம் முடிவெடுக்கும் திறனைப் பாதிக்கலாம், வேலைத்திறனைக் குறைக்கலாம், தவறுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். சாலை விபத்துகள் ஏற்படும் அபாயத்தையும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கக்கூடும்.
போதுமான தூக்கம் இல்லாத நிலை லேசானதாக இருந்தால்கூட, ஒருவரின் எதிர்வினையாற்றும் திறனை பாதிக்கக்கூடும்.
ஆபத்து யாருக்கு அதிகம்?
இரவு நேரத்தில் மொபைல் போன் பயன்படுத்துதல், கணினி அல்லது பிற திரைகளை நீண்ட நேரம் பார்ப்பது, அதிக மனஅழுத்தம், அதிக அளவில் கஃபைன் உட்கொள்வது மற்றும் ஒழுங்கற்ற தூக்க நேரம் போன்றவை உடலின் உயிரியல் கடிகாரத்தை பாதிக்கின்றன.
இதனால் தூக்கத்தின் தரம் குறைவதோடு, பகல் நேரத்தில் தூக்கம் வருவதும் அதிகரிக்கிறது. இத்தகைய பழக்கவழக்கங்கள் உள்ளவர்களுக்கு, பகலில் தொடர்ந்து அதிக தூக்கம் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும்.
அதனால், ஒழுங்கற்ற வேலை நேரத்தைக் கொண்ட ஷிப்ட் பணியாளர்கள், மருத்துவத் துறையினர், ஓட்டுநர்கள், விமானிகள், தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் அதிகப்படியான பகல் நேர தூக்கம் பாதிப்புக்கு அதிக ஆபத்தில் உள்ளவர்களாகக் கருதப்படுகின்றனர்.
வயது அதிகரிப்பால் தூக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பிற உடல்நலக் கோளாறுகள் காரணமாக, முதியவர்களிடம் இந்த பாதிப்பு காணப்படலாம்.
பட மூலாதாரம், Getty Images
மருத்துவரை எப்போது அணுக வேண்டும்?
பகலில் தொடர்ந்து ஏற்படும் இந்தக் கட்டுப்படுத்த முடியாத தூக்கம் ஒரு உடல்நலப் பிரச்னையா என்பதை மருத்துவர் மட்டுமே துல்லியமாகக் கண்டறிய முடியும். அதற்காக, அதனுடன் தொடர்புடைய அறிகுறிகளைக் கவனிப்பது அவசியம்.
இந்தப் பிரச்னைக்காக எப்போது மருத்துவ உதவியை நாட வேண்டும் என்பது குறித்து தானேவில் உள்ள ஜூபிடர் மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் டாக்டர் அனிருத் மோரிடம் பிபிசி மராத்தி கேட்டது.
“போதுமான அளவு தூங்கிய பிறகும் பகலில் தொடர்ந்து தூக்கம் வந்தால், அது உங்கள் வேலை அல்லது அன்றாட வாழ்க்கையைப் பாதித்தால், அல்லது திடீரென தூக்கம் வருவது போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டால், மருத்துவரை அணுகுவது அவசியம். தொடர்ந்து நீடிக்கும் அதிகப்படியான பகல் நேர தூக்கம் தூக்கக் கோளாறு அல்லது நரம்பியல் நோயின் அறிகுறியாக இருக்கலாம்,” என்றார் அவர்.
மேலும் அவர், “நவீன வாழ்க்கைமுறை தூக்கத்திற்கு எதிரானதாக மாறி வருகிறது. அதிகரித்து வரும் வேலை நேரம், டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாடு, மனஅழுத்தம், ஷிப்ட் வேலை முறை, ஸ்லீப் அப்னியா ஆகியவை இந்த பாதிப்பை அதிகரித்து வருகின்றன. பலர் ‘நான் மிகவும் பிஸியாக இருக்கிறேன்’ என்று நினைத்து இந்தப் பிரச்னையை அலட்சியப்படுத்துகிறார்கள். ஆனால் உண்மையில், இது சரியான நேரத்தில் கவனிக்கப்பட வேண்டிய தூக்கக் கோளாறின் அறிகுறியாக இருக்கலாம்,” என்று தெரிவித்தார்.
இரவில் தூக்கம் ஏன் அவசியம்? தூங்கும்போது உடலில் என்ன நடக்கிறது?
மனிதர்கள் உயிரியல் ரீதியாக பகலில் சுறுசுறுப்பாக இயங்குகின்றனர். இரவில் தூங்கி உடலைப் புத்துணர்வடையச் செய்கின்றனர். இந்தச் செயல்முறை முக்கியமாக இரண்டு காரணிகளால் கட்டுப்படுத்தப்படுகிறது.
முதலாவது, அடினோசின் என்ற வேதிப்பொருள் நாள் முழுவதும் மூளையில் படிப்படியாகச் சேர்கிறது. ஒருவர் எவ்வளவு நேரம் விழித்திருக்கிறாரோ, அவ்வளவு அதிகமாக தூக்கத் தேவை உருவாகிறது.
இரண்டாவது, சூரியன் மறைந்த பிறகு வெளிச்சம் குறையும்போது, மூளையில் உள்ள பீனியல் சுரப்பி , மெலட்டோனின் என்ற ஹார்மோனை அதிகமாகச் சுரக்கத் தொடங்குகிறது. இந்த ஹார்மோன் உடலுக்கு தூக்கத்திற்குத் தயாராகும் சமிக்ஞையை வழங்கி, விழிப்பு நிலையிலிருந்து தூக்க நிலைக்குச் செல்லும் செயல்முறையைத் தொடங்குகிறது.
பட மூலாதாரம், Getty Images
தூக்கம் ஏன் அவசியம் என்பது குறித்து மும்பையில் உள்ள ஜஸ்லோக் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நரம்பியல் துறை இயக்குநரான டாக்டர் ஜாய் தேசாய் தகவல் பகிர்ந்தார்.
அவர் பேசுகையில், “தூக்கம் உடலைச் சரியாகப் புத்துணர்வடையச் செய்ய வேண்டுமெனில் சில அடிப்படை நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஒரு நாளைக்கு 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும். சூரியன் மறைந்த நான்கு மணி நேரத்திற்குள் உறங்கச் செல்ல வேண்டும். ஸ்லீப் அப்னியா அல்லது ரெஸ்ட்லெஸ் லெக்ஸ் சிண்ட்ரோம் போன்ற தூக்கக் கோளாறுகள் இல்லாமல் இருக்க வேண்டும்.” என்றார்.
”இந்தப் பழக்கவழக்கங்கள் எவ்வளவு ஒழுங்காக இருக்கிறதோ, அவ்வளவு சிறப்பாக உடலின் மீளுருவாக்கம் மற்றும் புத்துணர்ச்சி செயல்முறைகள் நடைபெறும். போதுமான தூக்கம் பெறும் ஒருவர், ஒரு நாளில் சுமார் 16 மணி நேரம் விழிப்புடன் இருந்து, சுறுசுறுப்பாக செயல்பட முடியும்,” என்றார் அவர்.
தூக்கத்தின் போது உடலிலும் மூளையிலும் மிகவும் முக்கியமான செயல்பாடுகள் நடைபெறுகின்றன என்று டாக்டர் ஜாய் தேசாய் விளக்கினார்.
“ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல், ரத்தச் சர்க்கரை அளவைச் சீராக வைத்தல், கொழுப்பு சேமிப்பை ஒழுங்குபடுத்துதல், உணர்ச்சிகளை நிலைப்படுத்துதல் மற்றும் தூக்கத்தின் போது செயல்படும் கிளிம்பாட்டிக் அமைப்பு மூலம் மூளையில் தேங்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய புரதங்களை அகற்றுதல் போன்ற பணிகளில் தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, தூக்கக் கோளாறுகள் உள்ளவர்களுக்கும், பகல் நேரத்தில் அதிகமாகத் தூங்குபவர்களுக்கும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற வாழ்க்கைமுறை நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம்,” என்று அவர் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
நல்ல தூக்கத்திற்கான முக்கிய பழக்கவழக்கங்கள்
- தினமும் இரவில் ஒரே நேரத்தில் படுக்கைக்குச் செல்வதையும், காலையில் ஒரே நேரத்தில் எழுவதையும் வழக்கமாக்குங்கள்.
- உடலின் இயற்கையான பகல்-இரவு சுழற்சியுடன் ஒத்துப்போகும் வகையில் தூக்க நேரத்தைப் பராமரிக்கவும்.
- முடிந்தவரை காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்யுங்கள்.
- காலை எழுந்த பிறகு சில நிமிடங்கள் சூரிய ஒளியில் இருப்பது தூக்கச் சுழற்சியை ஒழுங்குபடுத்த உதவும்.
- பிற்பகல் 3 மணிக்குப் பிறகு காபி மற்றும் மதுபானங்களைத் தவிர்ப்பது நல்லது.
- தூங்கச் செல்லும் முன் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது விரைவாகத் தூங்க உதவக்கூடும்.
- சூரியன் மறைந்த ஒரு மணி நேரத்திற்குள் இரவு உணவை முடிப்பது உடலின் மீளுருவாக்க செயல்முறைக்கு உதவலாம்.
- படுக்கைக்குச் செல்லும் முன் மனதை அமைதிப்படுத்தும் ஒரு நிலையான நடைமுறையை உருவாக்கிக் கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.
- தூங்குவதற்கு முன் மொபைல், கணினி உள்ளிட்ட திரைகளை அணைத்துவிடுதல், அறையின் வெளிச்சத்தைக் குறைத்தல் மற்றும் அறையை குளிர்ச்சியாக வைத்திருத்தல் ஆகியவை நல்ல தூக்கத்திற்கு உதவும்.
பட மூலாதாரம், Getty Images
வாழ்க்கைமுறையில் பெரிய மாற்றங்களைச் செய்ய விரும்பினாலோ, உணவுப் பழக்கத்தை மாற்ற நினைத்தாலோ, மருந்துகளைத் தொடங்கவோ அல்லது புதிய உடற்பயிற்சி திட்டத்தை ஆரம்பிக்கவோ நினைத்தால் முன்பாக மருத்துவர் மற்றும் தகுதியான பயிற்சியாளரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.
உடல்நிலை குறித்து மருத்துவரிடம் முறையாகப் பரிசோதித்துக் கொண்டு, அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் மட்டுமே வாழ்க்கைமுறை மாற்றங்களை மேற்கொள்வது பாதுகாப்பானது. மருத்துவரின் ஆலோசனையின்றி சுயமாக சிகிச்சை மேற்கொள்வது ஆபத்தானதாக இருக்கலாம்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு