கடந்த டி20 உலககோப்பைக்கு முன்னதாக, அந்த உலகக்கோப்பையோடு டி20 கேப்டன்ஷிப்பிலிருந்து விலகுவதாக தொடர் தொடங்குவதற்கு முன்னரே கோலி அறிவித்தார். அணியும் மோசமான தோல்வியோடு வெளியேறியது.
அடுத்த சில வாரங்களிலேயே, ஒருநாள் போட்டிகளுக்குரிய கேப்டன்ஷிப்பும் அவரிடமிருந்து எடுத்து ரோஹித்திடம் தரப்பட்டது. “வொய்ட் பால் கிரிக்கெட்டிற்கு ஒரே கேப்டன் தேவை, டி20 கேப்டன்ஷிப்பிலிருந்து விலக வேண்டாம் என கோலியிடம் கேட்டோம், அவர்தான் ஒத்துக் கொள்ளவில்லை”, என தங்களது பக்க நியாயமாக கங்குலி மீடியாவில் தெரிவித்திருந்தார்.
இதற்கு முற்றிலும் மாறுபட்டதாக, கோலி, “டி20 கேப்டன்ஷிப்பை விட்டு விலக வேண்டாமென என்னிடம் யாரும் கேட்கவில்லை”, எனப் பதிலடி கொடுத்தார். இதற்குப்பின் தென்னாப்பிரிக்கத் தொடருக்குப்பின், டெஸ்ட் கேப்டன்ஷிப்பிலிருந்தும் விலகினார். சின்ன தீப்பொறியாகக் கிளம்பி, காட்டுத் தீயாக பரவி, சோஷியல் மீடியாக்களில் தொடங்கி அனைத்து ஊடகங்களிலும் பற்றி எரிந்தது இந்த சர்ச்சை. கபில்தேவ், பேசித் தீர்க்காமல் விமர்சனங்களுக்கு வித்திட்டதற்காக இருவரையுமே சாடினார்.
கபில்தேவ் சொன்னது போல, தவறு யார் மீது இருந்தாலும் இப்பிரச்சினையை பொதுவெளியில் மைக்குகள் முன்னிலையில் பேசி, இன்னமும் அது கொழுந்துவிட்டு எரிய வழி செய்யாமல் பூட்டிய அறைக்குள் பேசித் தீர்த்திருக்கலாம். “விட்டுவிடுங்கள், பிசிசிஐ அதைப் பார்த்துக் கொள்ளும்” என இறுதியாக சொன்னதை முதலிலேயே கங்குலி சொல்லியிருந்தால் அது சர்ச்சைக்குத் தூபமிட்டிருக்காது. கிரேக் சேப்பலால் அவர் அனுபவித்த அதே மன உளைச்சலை கோலிக்கும் கொஞ்சம் பங்கிட்டுக் கொடுத்ததில்தான் கங்குலி அளவுக்கதிகமான வெறுப்பைச் சம்பாதித்தார்.