கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதித்து கடந்த மாதம் 30-ம் தேதியும், இந்த மாதத் தொடக்கத்திலும் 2 பேர் மரணம் அடைந்துள்ளனர். மேலும் 4 பேர் நிபா பாதிப்புடன் சிகிச்சையில் இருந்தனர். அதிலும் நிபா பாதித்து இறந்த ஒருவரின் 9 வயது மகனுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே திருவனந்தபுரம் உள்ளிட்ட வேறு இரண்டு இடங்களில் நிபா அறிகுறிகள் கண்டறியப்பட்டன.
இதையடுத்து கேரளாவை ஒட்டி உள்ள தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் சுகாதாரத்துறை உஷார்படுத்தப்பட்டது. கேரளாவில் இருந்து காய்ச்சல் பாதித்தவர்கள் வந்தால் எல்லைப் பகுதியில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டனர். அதே சமயம் கேரளாவில் நிபா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு தொற்று இல்லை என சாம்பிள் பரிசோதனையில் தெரியவந்தது.
மேலும், நிபா பாதித்த 4 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் நிபா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளனர். அவர்கள் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து கேரளாவில் நிபா பாதித்தவர்கள் எண்ணிக்கை பூஜ்ஜியமாக மாறியுள்ளது. வெளவால்கள் மூலம் நிபா வைரஸ் பரவியதாகக் கூறப்பட்ட நிலையில் வீட்டு விலங்குகளும், காட்டு விலங்குகளும் இறந்தால் உடனே ரிப்போர்ட் செய்ய கோழிக்கோட்டில் குழு அமைக்கப்பட்டுள்ளது.