சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனின் 8-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றனர். இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 196 ரன்கள் எடுத்தது.
சென்னை – சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்து வீச முடிவு செய்தார். இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணியில் பதிரனா மற்றும் ஆர்சிபி அணியில் புவனேஸ்வர் குமார் ஆகியோர் இந்த சீசனில் தங்களது முதல் போட்டியில் விளையாடுகின்றனர்.
ஆர்சிபி அணிக்காக பில் சால்ட் மற்றும் விராட் கோலி இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். 16 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் சால்ட். 5 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸரை அவர் விளாசி இருந்தார். நூர் அகமது வீசிய 5-வது ஓவரில் சால்ட்டை அபாரமாக ஸ்டம்பிங் செய்து சிஎஸ்கே விக்கெட் கீப்பர் தோனி வெளியேற்றினார். கடந்த ஆட்டத்திலும் இதே போல நூர் அகமது பந்து வீச்சில் மும்பை வீரர் சூர்யகுமார் யாதவை ஸ்டம்பிங் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து வந்த தேவ்தத் படிக்கல், 14 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 2 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகளை அவர் ஸ்கோர் செய்தார். தொடர்ந்து அந்த அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் பெட் செய்ய வந்தார். 30 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார் கோலி. லிவிங்ஸ்டன் 10 ரன்களில் போல்ட் ஆனார்.
கேட்ச்களை மிஸ் செய்த சிஎஸ்கே வீரர்கள்: ரஜத் பட்டிதார் கொடுத்த 3 கேட்ச் வாய்ப்பை சிஎஸ்கே வீரர்கள் வீணடித்தனர். அதை பயன்படுத்திக் கொண்ட அவர், அரை சதம் கடந்தார். அதுவும் சிறந்த ஃபீல்டர்களான தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி ஆகியோர் இரண்டு கேட்ச் வாய்ப்புகளை மிஸ் செய்திருந்தனர். 18 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்களை எட்டி இருந்தது ஆர்சிபி. லிவிங்ஸ்டன் 10 ரன்களில் போல்ட் ஆனார். ஜிதேஷ் சர்மா 12 ரன்களில் அவுட் ஆனார்.
19-வது ஓவரில் பதிரனா வீசினார். முதல் பந்தில் பெரிய ஷாட் ஆட முயன்ற பட்டிதார் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 32 பந்துகளில் 51 ரன்களை அவர் எடுத்திருந்தார். அதே ஓவரின் 4-வது பந்தில் க்ருணல் பாண்டியாவும் ஆட்டமிழந்தார். அந்த ஓவரில் 1 ரன் மட்டுமே சிஎஸ்கே கொடுத்தது. அதுவும் அது வொய்டு டெலிவரி.
கடைசி ஓவரை சாம் கரண் வீசினார். முதல் இரண்டு பந்துகளில் ரன் ஏதும் எடுக்கவில்லை. அடுத்த மூன்று பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸர் விளாசினார் டிம் டேவிட். 8 பந்துகளில் 22 ரன்களை அவர் எடுத்தார். 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது ஆர்சிபி.
சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் நூர் அகமது 4 ஓவர்கள் வீசி 36 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். பதிரனா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அஸ்வின், கலீல் அகமது ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே வெற்றி பெற 197 ரன்கள் தேவை.