ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் 92 ஆதரவு எம்எல்ஏக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் பதவி விலகல் கடிதம் கொடுத்த விவகாரம் இன்னும் முடிவுக்கு வராததால், அம்மாநில காங்கிரஸ் அரசுக்கு புதிய ஆபத்து ஏற்பட்டுள்ளதால் பரபரப்பாகி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்ற போது, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிட உள்ளதாக கூறப்பட்டது.
ஒருவேளை அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சித் தலைவராக தேர்வானால், அவர் தனது ராஜஸ்தான் முதல்வர் பதவியிலிருந்து விலகுவார் என்றும் கூறப்பட்டது. இதையடுத்து முதல்வர் பதவியை இளம் தலைவரான சச்சின் பைலட்டுக்கு வழங்க ராகுல் காந்தி விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில், சச்சின் பைலட்டுக்கு எதிராக அசோக் கெலாட் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியதால், சச்சின் பைலட்டின் முதல்வர் கனவு பலிக்கவில்லை. அதேநேரம் சச்சினை முதல்வராக்கும் திட்டத்தை கட்சித் தலைமை கைவிட வேண்டும் எனக்கோரி, கெலாட்டின் 92 ஆதரவு எம்எல்ஏக்கள் சபாநாயகரை சந்தித்து தங்களது பதவி விலகல் கடிதத்தை கொடுத்தனர்.
இவ்வாறாக ராஜஸ்தான் காங்கிரசில் குழப்பங்கள் ஏற்பட்டு வந்த நிலையில், அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை என்று அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நடந்த தலைவர் பதவிக்கான ேதர்தலில் மல்லிகார்ஜூன கார்கே கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். நிலைமை இவ்வாறு இருக்க, ஏற்கனவே சபாநாயகரிடம் பதவி விலகல் கடிதம் கொடுத்த 92 எம்எல்ஏக்களும், அந்த கடிதத்தை இன்னும் வாபஸ் பெறவில்லை. வரும் ஜனவரி 23ம் தேதி சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக, 92 எம்எல்ஏக்களும் தங்கள் ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் கெலாட் அரசுக்கு புதிய சிக்கல்கள் ஏற்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ராஜேந்திர சிங் ரத்தோர் கூறுகையில், ‘92 எம்எல்ஏக்களின் ராஜினாமாக்களை திரும்பப் பெற சட்டத்தில் இடமில்லை. ராஜினாமா செய்த எம்எல்ஏக்களை தொடர்ந்து எம்எல்ஏக்களாக தொடர சபாநாயகர் அனுமதிக்கக்கூடாது. ராஜினாமா கடிதம் கொடுத்த நாளில் இருந்து, இன்று வரை எம்எல்ஏக்களுக்கான சலுகைகளை முழுமையாக அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். சட்டவிரோதமான முறையில் கொள்கை முடிவுகளை அவர்கள் எடுத்துள்ளனர். இந்த எம்எல்ஏக்களின் பெயர்களை பொதுமக்கள் மத்தியில் வெளியிட வேண்டும்’ என்றார்.
இதுகுறித்து காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் கூறுகையில், ‘செப்டம்பரில் ஏற்பட்ட நெருக்கடி தொடர்பாக பதவி விலகல் கடிதம் கொடுத்த 92 எம்எல்ஏக்களும், தங்களது பதவி விலகல் கடிதத்தை திரும்ப பெற வேண்டும் என்று கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. அவர்கள் பதவி விலகல் கடிதம் கொடுத்து 90 நாட்கள் முடிந்ததால், புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 23ம் தேதி தொடங்க உள்ளதால், அதற்கு முன்னதாக அவர்கள் தங்களது பதவி விலகல் கடிதத்தை திரும்ப பெறுதல் வேண்டும்.
இவ்விஷயத்தில் எம்எல்ஏக்களின் ராஜினாமா தொடர்பான வழக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதுதொடர்பாக நீதிமன்றம் சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எப்படியாகிலும் 92 எம்எல்ஏக்களும் தங்களது பதவி விலகல் கடிதத்தை திரும்ப பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உத்தரவின்படி, ஜெய்ப்பூர் வந்துள்ள ராஜஸ்தானின் காங்கிரஸ் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா, கடந்த மூன்று நாட்களாக கட்சித் தலைவர்களுடன் இவ்விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்’ என்றனர்.