”ஓய்வு பெற்ற நான் கண்புரை அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனை வந்தேன். கண்புரை அறுவை சிகிச்சை முடிந்தது, அன்றிரவு நோயாளிகள் அனைவரும் கண்களில் மருந்து வைத்து கொண்டு தூங்க சென்றோம். ஒரு சகோதரர் வந்து எங்களை எழுப்பி எங்கள் தொலைபேசிகளை எடுத்து அதில் வந்த ஒடிபி (OTP) எண்களை பதிவிட்டு கொண்டார். அவர்கள் எங்கள் மொபைலை பயன்படுத்தி எங்களை பாஜக உறுப்பினர்கள் ஆக்கியது பின்னர்தான் எங்களுக்கு தெரிய வந்தது” என்றார் கமலேஷ்.
கமலேஷ் தும்மர், ஜுனாகத்தில் இருக்கும் கலீல்பூரில் வசிக்கிறார். அவர் கண்புரை அறுவை சிகிச்சைக்காக ராஜ்கோட்டில் உள்ள ராஞ்சோட்தாஸ்பாபு அறக்கட்டளை கண் மருத்துவமனைக்கு வந்திருந்தார்.
அதே மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட மனுபாய் படேலுக்கும் இதே அனுபவம் ஏற்பட்டது.
மனுபாய் படேல் பிபிசி குஜராத்தியிடம் பேசுகையில், “ஒரு சகோதரர் எங்களிடம் வந்தார். என் மொபைலை கேட்டு வாங்கி ஏதோ செய்தார். அந்த நேரத்தில் நான் சற்று மயக்கத்தில் இருந்ததால் என்ன நடக்கிறது என்பது புரியவில்லை. கமலேஷ் என் பக்கத்துப் படுக்கையில் இருந்தார். அதை அவரிடம் காண்பித்தபோது, நான் பாஜக உறுப்பினரானதற்கான மெசேஜ் வந்திருப்பதாகக் கூறினார்.” என்று விவரித்தார்.
கமலேஷ் தும்மர் கூற்றுபடி, அவர் உட்பட பலர் பாஜக உறுப்பினர்களால் பாஜகவில் சேர்க்கப்பட்டதாக கூறுகிறார்.
முன்னதாக, குஜராத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை பிரசாரம் பற்றிய சர்ச்சைகள் வெளிவந்தன.
மக்கள் பாஜகவை விரும்பவில்லை. எனவே மக்களை தவறாக வழிநடத்தி உறுப்பினர்களாக சேர்க்கின்றனர் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது.
ஆனால், இந்த குற்றச்சாட்டை பாஜக தரப்பு மறுக்கிறது. இவ்வாறு வலுக்கட்டாயமாக யாரையும் உறுப்பினராக சேர்ப்பதில்லை என்று பாஜக கூறுகிறது. இது கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சி என்றும் கூறுகிறது.
சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் பாஜக உறுப்பினர்களானது எப்படி?
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற நபர் ஒருவர் மருத்துவமனையில் நடந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அந்த காணொளி வைரலானது.
அந்த வீடியோவில் ஒரு நபர் நோயாளி ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கிறார். அந்த நபர் பாஜக பிரமுகர் என்று கூறப்படுகிறது.
கமலேஷ்பாய் தும்மர் பிபிசியுடன் தொலைபேசியில் பேசுகையில், “எனக்கு கண்புரை இருந்ததால் கண்களில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. அந்த சமயத்தில் , ஜூனாகத்தில் உள்ள திரிமூர்த்தி மருத்துவமனையில் ஒரு கண் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது.”
“அந்த முகாமுக்கு வந்திருந்த பலர், ராஜ்கோட்டில் உள்ள ராஞ்சோட்தாஸ்பாபு அறக்கட்டளை கண் மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை நன்றாக செய்யப்படுகிறது, நோயாளிகளை அங்கு நன்றாக கவனிக்கிறார்கள் என்றனர். அதனால் நானும் அங்கு செல்ல முடிவெடுத்தேன்” என்றார்.
கமலேஷ்பாய் மேலும் கூறுகையில், ”அறுவை சிகிச்சைக்கு பிறகு நாங்கள் எங்கள் கண்களில் சொட்டு மருந்து போட்டுக் கொண்டுத் தூங்கினோம். எனக்கு தேதி நினைவில் இல்லை, ஆனால் இரவு பதினோரு மணியளவில் ஒரு இளைஞர் வந்தார். அனைவரையும் எழுப்பி ஃபோன் வேண்டும் என்று கேட்டார், எங்கள் போன்களில் எதையோ செய்து ஒடிபி வரவைத்தார். பின்னர் நான் பாஜக உறுப்பினரானதாக மெசேஜ் வந்தது” என்றார்.
“நானே பா.ஜ.க-வை சேர்ந்தவன்தான். ஆனால் ஒருவருக்குத் தெரியாமல் உறுப்பினராக்குவது ஏற்புடையதல்ல. ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டேன். ‘மேலே செய்யச் சொன்னார்கள். அதனால் செய்தேன்’ என்றார். அவர் பேசியதை வீடியோ எடுத்தேன்” என்று கமலேஷ் கூறினார்.
கமலேஷ்பாய் மேலும், “அங்கு சுமார் 200 நோயாளிகளிடம் தொலைபேசி இருந்தன, அதனால் அவர் எத்தனை பேரை உறுப்பினராக்கினார் என்பது தெரியாது.” என்றார்.
இதேபோல், பாஜக உறுப்பினராக்கப்பட்ட மனுபாய் படேல் பிபிசி குஜராத்தியிடம் பேசுகையில், “எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை, எனவே எனது தொலைபேசியிலிருந்து மெசேஜை நீக்கிவிட்டேன்.” என்றார்.
மருத்துவமனை நிர்வாகம் என்ன சொல்கிறது?
கண்புரை அறுவை சிகிச்சை செய்த ராஞ்சோட்தாஸ்பாபு அறக்கட்டளை கண் மருத்துவமனையின் அறங்காவலர் சாந்திபாய் வடோலியா பிபிசியுடன் பேசுகையில், ”இந்த அறக்கட்டளை பல ஆண்டுகளாக மக்களுக்கு சேவை செய்து வருகிறது. இங்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சை செய்கிறோம்.
கூடுதலாக, குஜராத்தின் பல்வேறு கிராமங்களில் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. மேலும் அறக்கட்டளையின் செலவில் நோயாளிகள் ராஜ்கோட்டுக்கு அழைத்து வரப்படுகின்றனர். அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன. எங்கள் அறக்கட்டளை ஒருபோதும் சர்ச்சையில் சிக்கியதில்லை” என்றார்.
சமீபத்திய சர்ச்சை குறித்து அவர் கூறுகையில், ”உறுப்பினர் சேர்க்கை வீடியோ வைரலானதை அடுத்து இது குறித்து எங்களுக்குத் தெரிய வந்தது. மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டுள்ளோம். மருத்துவமனை பற்றி வைரலான வீடியோவில் இருக்கும் நபர் நோயாளியின் உறவினராக மருத்துவமனைக்கு வந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
நாங்கள் மருத்துவமனையின் அனைத்து சிசிடிவி காட்சிகளையும் சரிபார்த்து வருகிறோம். எங்கள் மருத்துவமனை அல்லது அறக்கட்டளையில் யாரேனும் சம்பந்தப்பட்டிருந்தால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
பாஜக சொல்வது என்ன ?
நோயாளிகளை பாஜகவில் உறுப்பினர்களாக்கியது பற்றி பிபிசியிடம் பேசிய பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் யமல் வியாஸ் , “பாஜகவை சேர்ந்த பிரமுகர் அதிக ஆர்வத்தில் இதுபோன்ற செயலைச் செய்திருந்தால், அதை விசாரித்து அவர் மீது உள்கட்சி ரீதியில் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம். இந்த முறையில் யாரையும் உறுப்பினராக்கக் கூடாது என்று கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளோம்” என்றார்.
“கடந்த காலங்களில், பாவ்நகரில் பணம் கொடுத்து உறுப்பினர்களை சேர்ப்பதாக ஒரு புகார் எழுந்தது. ஆனால் அதை விசாரித்த போது, அது பொய் என தெரிந்தது. எனவே இந்த விஷயத்தையும் நாங்கள் விசாரிப்போம்.” என அவர் கூறினார்.
ராஜ்கோட் பிபிசி நிருபர் பிபின் தங்கரியாவின் உதவியுடன், ராஜ்கோட் நகர பாஜக தலைவர் முகேஷ் தோஷியிடம் பேசினோம்.
“ராஜ்கோட்டில் பாஜக உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை நிறைவு செய்துள்ளது. தானாக முன்வந்து உறுப்பினர் சேர்க்கை செய்யும் ஆர்வலர்கள் யாராவது இப்படி செய்தார்களா என்று விசாரித்து வருகிறோம்” என்றார்.
”இதுவரை உறுப்பினர் சேர்க்கையை பாஜகவினர் கண்ணியமான முறையில் நடத்தியதாக நாங்கள் நம்புகிறோம். இது பாஜகவை அவதூறு செய்யும் முயற்சியாகத் தெரிகிறது.” என்றும் கூறினார்.
பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை பற்றி காங்கிரஸ் என்ன சொல்கிறது?
ராஜ்கோட் காங்கிரஸ் தலைவர் டாக்டர் ஹேமங் வஸவாடா பிபிசியுடன் பேசுகையில், “குஜராத்தில் மக்கள் தற்போது பாஜகவை நிராகரித்து வருகின்றனர். எனவே மக்களை இருட்டில் வைத்து அவர்களுக்கே தெரியாமல் பாஜக உறுப்பினர்களாக சேர்கிறார்கள்” என்றார்.
“மூத்த குடிமக்கள் கோயில்களுக்கு செல்கையில் அவர்களில் தொலைபேசிகளை வலுக்கட்டாயமாக எடுத்து உறுப்பினராக சேர்கின்றனர். பள்ளிகளில் குழந்தைகளிடமிருந்து பெற்றோரின் எண்ணைப் பெற்று உறுப்பினர்களாக்குகிறார்கள். அரசு மற்றும் அறக்கட்டளை மருத்துவமனைகளில், நோயாளிகளை உறுப்பினர்களாக சேர்கின்றனர்.”
“நாங்கள் இந்த விவகாரத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்ட நோயாளிகளைத் தொடர்புகொள்வோம். ஒருவேளை அவர்கள் புகார் அளிக்கத் தயாராக இருந்தால், அவர்களுக்கு முழு ஆதரவளித்து இந்த உறுப்பினர் பிரசாரத்தின் பின்னால் நடக்கும் மோசடியை வெளிச்சத்துக்கு கொண்டு வருவோம்” என்றார்.
பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை சர்ச்சை
1980-களில் இருந்தே பாஜகவில் உறுப்பினர் சேர்க்கை பிரசாரம் நடைபெற்று வருகிறது.
முன்னதாக, சுரேந்திரநகரின் வாட்வானில் உள்ள ஒரு பள்ளியில் மொபைல் போன்களை கொண்டு வருமாறு கூறி குழந்தைகளை ஆசிரியர்கள் பாஜக உறுப்பினர்கள் ஆக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் சுரேந்திரன் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.
மெஹ்சானாவில் உள்ள அரசு மருத்துவமனையில் தனது மனைவிக்கு ரேபிஸ் ஊசி போடச் சென்ற விரம்பஹா தர்பார், வார்டுபாய் மூலம் பாஜக உறுப்பினராக்கப்பட்டது தெரிய வந்தது. இந்த வழக்கில், புகாரின் பேரில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அகமதாபாத்தில் காங்கிரஸ் பிரமுகர் பாஜக உறுப்பினராக்கப்பட்டது தெரிய வந்தது.
இதுதவிர பாவ்நகரிலும், 100 உறுப்பினர்களை சேர்த்தால் 500 ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என பா.ஜ.வினர் கூறிய வீடியோவும் வைரலானது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.