பட மூலாதாரம், Getty Images
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களுக்கு நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை காலையில் தொடங்குகிறது.
இதையொட்டி இரு மாநிலங்களிலும் ஆளும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அவற்றில் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் காங்கிரஸ் கட்சி தேர்தல் முடிவுகளை மிகுந்த எதிர்பார்ப்புடன் உற்று நோக்கி வருகின்றன.
குஜராத் மாநிலத்துக்கு டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவுக்கான எண்ணிக்கை வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
குஜராத்தில் ஆளும் பாஜக, சட்டப்பேரவை தேர்தலில் ஏழாவது வெற்றியை இலக்காகக் கொண்டுள்ளது. அங்கு தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும், குஜராத்தில் ஆளும் பாஜகவுக்கே பெரும்பான்மை கிடைக்கும் என்று கணித்துள்ளன.
அது உண்மையாகுமானால், அந்த மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து ஏழாவது முறையாக மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைத்து வரலாறு படைக்கும்.
இதற்கு முன்பு இத்தகைய தொடர் வெற்றியை சந்தித்த மாநிலமாக மேற்கு வங்கம் இருந்தது. அங்கு இடதுசாரி முன்னணி மட்டுமே ஏழு முறை தொடர் ஆட்சியில் இருந்திருக்கிறது.
குஜராத்தில் மும்முனைப்போட்டி
குஜராத்தில் பாரம்பரியமாக பாஜக மற்றும் காங்கிரஸுக்கு இடையே போட்டி நிலவி வந்த நிலையில், இம்முறை நடந்த தேர்தல் களத்தில் டெல்லியில் ஆளும் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி (ஆம் ஆத்மி) இறங்கியதால் மும்முனை போட்டி நிலவியது.
பட மூலாதாரம், Getty Images
வாக்கு எண்ணிக்கை மையம் (கோப்புப்படம்)
பிரதமர் நரேந்திர மோதி பாஜக தேர்தல் பிரசாரத்தை முன்னின்று நடத்தி சுமார் 30 பேரணிகள் மற்றும் சாலை வழியாக பயணம் செய்து வாக்கு சேகரித்தார். பாஜகவை சேர்ந்த இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் அம்மாநிலத்தில் முகாமிட்டு பரப்புரை நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
இவர் மட்டுமின்றி பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களான யோகி ஆதித்யநாத், சிவராஜ் சிங் செளஹான், ஹிமந்தா பிஸ்வா சர்மா, பிரமோத் சாவந்த் உள்ளிட்டோரும் குஜராத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு தேர்தல் பொதுக்கூட்டங்களில் உரையாற்றினர்.
பாஜகவைச் சேர்ந்த அனைத்து மத்திய அமைச்சர்களும் குஜராத்தில் தேர்தல் பிரசாரம் செய்தனர்.
பட மூலாதாரம், Getty Images
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ யாத்திரையில் இருந்தபோது, குஜராத்தில் இரண்டு தேர்தல் பேரணிகளில் உரையாற்றுவதற்காக வந்து சென்றார்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், குஜராத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரசாரத்தை வழிநடத்தினார். காங்கிரஸ் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 5 மாதங்களாகவே ஆம் ஆத்மி கட்சிக்காக குஜராத்தில் அவ்வப்போது முகாமிட்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
182 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 37 வாக்கு எண்ணும் மையங்களில் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.
பட மூலாதாரம், Getty Images
ஆமதாபாதில் மூன்று மையங்களும், சூரத் மற்றும் ஆனந்தில் இரண்டு மையங்களும், மீதமுள்ள 30 மாவட்டங்களில் தலா ஒன்றும் இருக்கும். இதையொட்டி மொத்தம் 182 வாக்கு எண்ணும் பார்வையாளர்கள் மற்றும் 494 உதவி தேர்தல் அலுவலர்களுடன் ஏராளமான தேர்தல் அலுவலர்கள் முழு வாக்கு எண்ணும் பணியிலும் அவற்றை ஒருங்கிணைக்கவும் தயார்நிலையில் உள்ளனர்.
அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் உள்ளூர் போலீசார் மற்றும் மாநில ரிசர்வ் போலீஸ் படை (எஸ்ஆர்பிஎஃப்), மத்திய ஆயுத போலீஸ் படை (சிஏபிஎஃப்) காவலர்களின் மூன்றடுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
குஜராத்தில் 2017ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பதிவான 71.28 சதவீதத்தை விட 66.31 சதவீத வாக்குகள் இம்முறை குறைவாக பதிவாகின.
முதல்வர் பூபேந்திர படேல், ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் இசுதன் காத்வி, இளைய தலைவர்களாக கருதப்படும் ஹர்திக் படேல், ஜிக்னேஷ் மேவானி, அல்பேஷ் தாக்கூர் உட்பட மொத்தம் 1,621 வேட்பாளர்களின் தலைவிதியை வியாழக்கிழமை வாக்கு எண்ணிக்கை முடிவு செய்யும்.
மொத்தம் 70 அரசியல் கட்சிகளும், 624 சுயேச்சைகளும் இந்த மாநிலத்தில் தேர்தல் களத்தில் இருந்தனர்.
முக்கிய போட்டியாளர்களான பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளைத் தவிர, பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) சார்பில் 101 வேட்பாளர்களும், பாரதிய பழங்குடியினர் கட்சியிலிருந்து (பிடிபி) 26 பேரும் போட்டியிட்டனர்.
2017 சட்டமன்றத் தேர்தலில், பாஜக 99 இடங்களிலும், காங்கிரஸ் 77 இடங்களிலும், பிடிபிக்கு இரண்டு இடங்களும், தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) ஒரு இடமும், சுயேச்சைகளுக்கு மூன்று இடங்களும் கிடைத்தன.
இமாச்சல பிரதேசத்தில் கடும் போட்டி
பட மூலாதாரம், Getty Images
இமாச்சல பிரதேச சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 68 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
இங்கு நவம்பர் 12ஆம் தேதி மாநிலத்தில் உள்ள 68 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இமாச்சல பிரதேசத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வர முயற்சிக்கிறது.
அங்கு ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ்அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது.
1985ஆம் ஆண்டு முதல் இந்த மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அந்த கட்சி அடுத்த தேர்தலில் எதிர்க்கட்சி வரிசைக்கு செல்லும் போக்கே காணப்படுகிறது.
இந்த மாநிலத்தில் மூன்றாவது பெரிய அரசியல் சக்தியாக ஆம் ஆத்மி கட்சி உருவாகி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன.
2017ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 44 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. அப்போது ஆட்சியை பறிகொடுத்த காங்கிரஸ் 21 இடங்களில் வென்றிருந்தது.
இங்கு தேர்தலுக்குப்பிந்தைய கருத்துக் கணிப்புகள் பலவும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு மீண்டும் பாஜகவுக்கே அமையும் என கூறியிருந்தாலும் அந்த வெற்றி சொற்ப வித்தியாசத்திலேயே இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளன. இதனால் இங்கு வெளிவரும் தேர்தல் முடிவுகள் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: