பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பீட்டர் ஹார்ம்சன்
- பதவி, பிபிசி செய்திகள்
-
நூக் பேராலயத்துக்கு மேலே உள்ள ஒரு மலையில், புராட்டஸ்டன்ட் (கிறிஸ்தவத்தில் உள்ள ஒரு பிரிவு) மறைப்பணியாளரான ஹான்ஸ் எகெடேவின் 2 மீட்டர் உயர சிலை உள்ளது.
1700களின் முற்பகுதியில், கிறிஸ்துவ மதத்தை பரப்புவதற்காக கிரீன்லாந்திற்கு வந்த அவர், கிரீன்லாந்து தீவை வடக்கு ஐரோப்பாவுடன் மீண்டும் இணைக்க உதவினார்.
அவரது பணியால், கிரீன்லாந்தை டென்மார்க் கட்டுப்படுத்தும் முறை எளிதானது. அதனைத் தொடர்ந்து, கிரீன்லாந்து டென்மார்க்கின் முக்கிய காலனி ஆனது.
வரலாற்றில் ஹான்ஸ் எகெடேவின் பங்கை, அவரது சிலை இன்றும் மக்களுக்கு நினைவூட்டுகிறது.
ஆனால் அவரது பாரம்பரியம் விவாதத்திற்கு உரிய பொருளாக உள்ளது. சிலர் அவரை ஒரு நல்ல தலைவராக பார்க்கிறார்கள்.
ஆனால், கிரீன்லாந்தில் டென்மார்க்கின் காலனித்துவ ஆட்சி நடைபெற ஹான்ஸ் எகெடே உதவினார் என மற்றவர்கள் நினைக்கிறார்கள்.
1970களின் பிற்பகுதியில் ஒரு நாள், அவரது வெண்கல சிலை திடீரென்று சிவப்பு வண்ணம் பூசப்பட்டு காணப்பட்டது.
நான் பள்ளிக்குச் செல்லும் வழியில், அந்தச் சிலையை தினமும் கடந்து செல்வேன். அதனால் அந்த நாள் எனக்கு தெளிவாக நினைவிருக்கிறது.
என் தந்தை நூக் நகரத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் புவியியல் கற்பித்து வந்த போது, நான் இரண்டு ஆண்டுகள் கிரீன்லாந்தில் வாழ்ந்தேன்.
அப்போது, வட அமெரிக்காவின் ஆர்க்டிக் பகுதிகளை பூர்வீகமாகக் கொண்ட பல பூர்வகுடி மக்கள், 250 ஆண்டுகளுக்கு முன்பு கிரீன்லாந்தில் எகேட் செய்த மாற்றங்களால் மகிழ்ச்சியடையவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது .
பெரும்பாலும், டென்மார்க் மக்களை விட மிகச் சிறிய அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வந்த பூர்வகுடி மக்கள், அவர்களது வீட்டிற்கு பிளாஸ்டிக் பைகளை எடுத்துச் செல்வர்.
அதிலிருந்து கேட்கும் பீர் பாட்டில்களின் சத்தம், அங்கு இருந்த பரவலான குடிப்பழக்கத்தின் சான்றாக இருந்தது. டென்மார்க் கிரீன்லாந்திற்கு கொண்டு வந்த தீங்கு விளைவிக்கும் விஷயங்களில் இதுவும் ஒன்று.
ஆனால் அதே சமயம், நவீன சுகாதாரம் மற்றும் நல்ல கல்வி போன்ற மறுக்க முடியாத பல நல்ல விஷயங்களையும் டென்மார்க் கிரீன்லாந்து மக்களுக்கு அளித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிலை மீது சிவப்பு வண்ணம் பூசப்பட்டது எதிர்ப்பின் அடையாளத்தைக் குறித்தது.
ஆனால் கிரீன்லாந்தின் சுதந்திர இயக்கம், அப்போது ஆரம்ப கட்டத்தில்தான் இருந்தது.
என் பள்ளிக்கு அடுத்ததாக இருந்த ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில், கிரீன்லாந்தில் தீவிர மாணவர் இயக்கம் ஒன்று வளர்ந்து வருவதைக் கண்டேன்.
சில இளம் மாணவர்கள் டேனிஷ் மொழிக்குப் பதிலாக தங்கள் சொந்த மொழியான கிரீன்லாண்டிக்கில் கற்பிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அதனையடுத்து, இரண்டு நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்த அதிகாரப்பூர்வ பெயரான கோதாப்பைக் கைவிட்டு, 1970 களின் பிற்பகுதியில், கிரீன்லாந்தின் தலைநகரின் பெயர் நூக் என மாற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, பல ஆண்டுகளுக்குப் பிறகு, உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற டொனால்ட் டிரம்ப் ஆர்வம் காட்டுவதால், தற்போது மீண்டும் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் கிரீன்லாந்து (டென்மார்க் தன்னாட்சிப் பகுதி) அல்லது பனாமா கால்வாயின் கட்டுப்பாட்டைப் பெற ராணுவ அல்லது பொருளாதார சக்தியைப் பயன்படுத்துவீர்களா என்ற கேள்விக்கு,
“இல்லை, இரண்டு விஷயங்களைப் பற்றியும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் பொருளாதாரப் பாதுகாப்பிற்கு அவை தேவை என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்” என டிரம்ப் பதிலளித்தார்.
பின்னர், ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் அளித்த பேட்டியில், “நாங்கள் அதைப் (கிரீன்லாந்தை) பெறப் போகிறோம் என்று நினைக்கிறேன்,” என செய்தியாளர்களிடம் டிரம்ப் தெரிவித்தார்.
கிரீன்லாந்து தீவின் 57,000 குடியிருப்பாளர்கள் “எங்களுடன் இருக்க விரும்புகிறார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார். கேள்வி என்னவென்றால், அந்த மக்கள் விரும்புகிறார்களா? என்பது தான்.
இதற்கிடையில், டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெடெரிக்சன், கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை என்ற கருத்தை வலியுறுத்தினார்.
“கிரீன்லாந்து மக்களுக்கு சொந்தமானது தான் கிரீன்லாந்து” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அது மட்டுமின்றி, “கிரீன்லாந்து மக்களே தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும்”என்றும் மெட்டே பிரெடெரிக்சன் கூறினார் .
எனவே, கிரீன்லாந்து மக்கள் எப்படிப்பட்ட எதிர்காலத்தை விரும்புகிறார்கள்? அவர்கள் டென்மார்க்கின் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை என்றால், அவர்களுக்கு வேறு என்ன வாய்ப்புகள் உள்ளன? என்பதை விளக்குகிறது இத்தொகுப்பு.
பட மூலாதாரம், Getty Images
டென்மார்க் மக்களுடன் உள்ள பதற்றமான உறவு
கிரீன்லாந்து மக்களின் கருத்துக் கணிப்பில், 6 சதவீத மக்கள் மட்டுமே தங்கள் நாடு அமெரிக்காவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று விரும்புவதாகவும், 9 சதவீத மக்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், 85 சதவீத மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அறியப்பட்டுள்ளது.
ஆனாலும், கிரீன்லாந்து மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பது ஒரு நுட்பமான கேள்வி என்பதை ஃபிரடெரிக்சன் அறிவார்.
1720 களில் கிரீன்லாந்தில் தனது காலனித்துவத்தைத் தொடங்கியதிலிருந்து, டென்மார்க் தன்னை உலகின் கருணை மிகுந்த ஏகாதிபத்தியவாதியாக பல காலமாக வெளிக்காட்டி வருகின்றது.
இருப்பினும், கடந்த காலங்களில் கிரீன்லாந்து மக்களிடம் சர்வாதிகார முறையில் அவர்கள் நடந்துகொண்ட விதம் வெளிப்பட்டதால், இந்த பிம்பம் சமீபத்திய ஆண்டுகளில் பலவீனமடைந்துள்ளது.
குறிப்பாக, கிரீன்லாந்து மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கடுமையான அநீதிகள் வெளிவந்துள்ளன.
இந்த அநீதிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்தவை அல்ல, தற்போதும் உயிருடன் உள்ள மக்களின் காலத்தில் நடந்தவை தான். பெரிய அளவில் நடந்த, சர்ச்சைக்குரிய கருத்தடை நடவடிக்கையும் இவற்றுள் அடங்கும்.
கிரீன்லாந்தைச் சேர்ந்த பெண்களின் ஒப்புதல் இல்லாமல் அல்லது அவர்களுக்குத் தெரியாமல் அவர்களின் உடலில் IUD கள் (ஒரு வகையான குழந்தை பிறப்பு கட்டுப்பாட்டுக் கருவி) வைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை, டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து அதிகாரிகள் இணைந்து விசாரித்து வருகின்றனர்.
1966 மற்றும் 1970க்கு இடையில், கிரீன்லாந்தில் உள்ள பருவமடைந்த பெண்களில் கிட்டத்தட்ட பாதி பேருக்கு அவர்களின் அனுமதியின்றி குழந்தை பிறப்பு கட்டுப்பாடுக் கருவிகள் ( IUD ) வைக்கப்பட்டதாக ஆதாரங்கள் கூறுகின்றன.
கடந்த டிசம்பரில், கிரீன்லாந்து பிரதமர் முட் எகெட் இதனை “கிரீன்லாந்து மக்களுக்கு எதிராக டென்மார்க் அரசால் நடத்தப்பட்ட நேரடி இனப்படுகொலை” என்று விவரித்தார்.
கிரீன்லாந்துக்கும் டென்மார்க்கிற்கும் இடையிலான உறவுகளைப் பற்றி பொதுவாக விவாதித்த டென்மார்க் தொலைக்காட்சி நிறுவனத்திடம் பேசிய போது அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
கூடுதலாக, 1960கள் மற்றும் 1970களில், கிரீன்லாந்து நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான குழந்தைகள், அவர்களின் சொந்த தாய்மார்களிடமிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர்.
அதாவது வளர்ப்பு பெற்றோரால் டென்மார்க்கில் வளர்க்கப்படுவதற்காக கொண்டுசெல்லப்படுகிறார்கள் என்பது போன்ற சந்தேகம் எழுந்தது.
ஒருபுறம், சில குழந்தைகளுடைய சொந்த தாய்மார்களின் சம்மதமின்றி இவ்வாறு நடந்துள்ளது.
மறுபுறம், இத்துடன் தங்கள் குழந்தைகளுடனான அனைத்து தொடர்புகளையும் நிரந்தரமாக இழக்க நேரிடும் என்று மற்ற தாய்மார்களிடம் கூறப்படவில்லை.
இதுபோன்ற நடவடிக்கைகள், பல ஆண்டுகள் கழித்தும் ஆறாத ஒரு ஆழமான காயத்தை விட்டுச் சென்றுள்ளது.
தத்தெடுக்கப்பட்ட கிரீன்லாந்து குழந்தைகள் சிலரால் பின்னாளில் தங்களது சொந்த பெற்றோரைக் கண்டுபிடிக்க முடிந்தது. ஆனால் இன்னும் பலரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது தொடர்பாக, ஒரு சிறிய குழு 2024 ஆம் ஆண்டில் டென்மார்க் அரசிடமிருந்து இழப்பீடு கோரியுள்ளது.
இது வெற்றி பெற்றால், தத்தெடுக்கப்பட்டவர்கள் பலராலும் இதேபோன்று ஏராளமான கோரிக்கைகளை முன் வைக்கமுடியும்.
கிரீன்லாந்தில் வளர்ந்த டென்மார்க் நாட்டைச் சேர்ந்த நாவலாசிரியர் இபென் மாண்ட்ரூப், இந்த சமீபத்திய நிகழ்வுகளை டென்மார்க் மக்களுக்கான கடுமையான எச்சரிக்கை மணியாகக் கருதுகிறார். அவர்கள் நீண்ட காலமாக கிரீன்லாந்தில் நேர்மறையான மற்றும் நல்ல செல்வாக்கைக் கொண்டவர்களென தங்களைப் பார்க்க பழகிவிட்டனர்.
“டென்மார்க் எதையும் திரும்பப் பெறாமல் கிரீன்லாந்திற்கு உதவி செய்து கொண்டிருந்தது என்ற கதையை அடிப்படையாகக் கொண்டு முழு உறவும் கட்டப்பட்டது” என்று அவர் கூறுகிறார்.
“கிரீன்லாந்தை பாதுகாத்து, அதன் சொந்தக் காலில் நிற்கக் கற்றுக் கொடுத்த தாய்நாடாக நாங்கள் டென்மார்க்கை விவரித்துள்ளோம்.
டென்மார்க் ஒரு ஆசிரியர் அல்லது பெற்றோர் என்றும், கிரீன்லாந்தை ஒரு மாணவர் அல்லது குழந்தை என்றும், கிரீன்லாந்துடனான டென்மார்க்கின் உறவை மக்கள் அடிக்கடி குறிப்பிடுகிறார்கள்” எனக் கூறி தொடர்ந்து பேசிய இபென், “டென்மார்க் எந்த நன்மையும் எதிர்பார்க்காமல் கிரீன்லாந்திற்கு உதவுகிறது என்று இந்த உறவு எப்போதும் விவரிக்கப்படுகிறது” என்றும் கூறுகிறார்.
மேலும், “ஏதோ கிரீன்லாந்து எங்களுக்கு கடன்பட்டிருப்பது போல, கிரீன்லாந்து எங்களுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்று டென்மார்க் மக்களாகிய நாங்கள் அடிக்கடி நம்புகிறோம்.” எனவும் அவர் விவரிக்கிறார்.
பட மூலாதாரம், Getty Images
“கிரீன்லாந்து ஏற்கனவே வளர்ச்சியடைந்துள்ளது”
சமீபத்திய ஆண்டுகளில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகள், கிரீன்லாந்தின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள், கிரீன்லாந்து சுதந்திரமாக இருக்க விரும்புவதாக தெரிவிக்கின்றன.
2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், கிரீன்லாந்து சுதந்திர நாடாக இருக்க வேண்டும் என்ற கருத்துக்கு, கிரீன்லாந்து மக்களிடையே 67.7 சதவீத ஆதரவு இருப்பதாக தெரியவந்தது.
“என்னுடைய பார்வையில், கிரீன்லாந்து ஏற்கனவே வளர்ச்சியடைந்துள்ளது. மற்ற நாடுகளுடன் சமமான நிலையில், நமது சொந்த முடிவுகளை நாமே எடுக்கத் தொடங்க வேண்டும் என்பதை நமது சுய மதிப்பு மற்றும் தன்னம்பிக்கை உணர்வு வெளிப்படுத்துகிறது” என்று நூக்கில் உள்ள சுற்றுச்சூழல் தொண்டு நிறுவனமான ஓஷன்ஸ் நார்த் கலாஅல்லிட் நுனாட்டின் இயக்குனர் ஜென்சீராக் பவுல்சன் கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய ஜென்சீராக், “ஒரு நாடு தனது சொந்த முடிவுகளை எடுக்க சுதந்திரம் பெற்றிருக்க வேண்டும். மற்றொரு தேசத்தால் கட்டுப்படுத்தப்பட கூடாது” என்றும் குறிப்பிடுகிறார்.
மேலும், “நாம் எதையும் செய்ய அனுமதி கேட்க வேண்டியதில்லை, (ஒரு குழந்தையாக) உங்கள் பெற்றோரிடம் ஏதாவது கேட்க வேண்டியிருக்கும் போது, அவர்கள் உங்களால் முடியாது என்று கூறினால், அப்போது எப்படி இருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? அப்படித்தான் இதுவும்”என்று விளக்குகிறார் ஜென்சீராக் பவுல்சன்.
ஆனால், “சுதந்திரம்” என்பது கிரீன்லாந்திற்கு ஒரு எளிய விஷயம் அல்ல, கடினமான சவால்கள் மற்றும் முடிவுகளை எதிர்காலத்தில் கிரீன்லாந்து சமாளிக்க வேண்டியிருக்கும் என்று போல்சன் கருதுகிறார்.
ஏனென்றால், “இன்றைய உலகில் அனைத்து நாடுகளும் ஒருவரையொருவர் நம்பியிருப்பதால், உண்மையான சுதந்திரம் சிக்கலானது” என்றும் ஜென்சீராக் குறிப்பிடுகிறார்.
இதுகுறித்து தொடர்ந்து விளக்கிய அவர், “டென்மார்க் கூட, ஒரு இறையாண்மை கொண்ட நாடாக, மற்ற நாடுகளைச் சார்ந்திருக்கிறது. எனவே, நான் ‘சுதந்திரம்’ என்பதற்குப் பதிலாக ‘அரசுரிமை’ என்ற வார்த்தையை பயன்படுத்த விரும்புகிறேன்”என்கிறார்.
பட மூலாதாரம், Getty Images
சுதந்திரத்திற்கான முக்கியக் கூறுகள்
கிரீன்லாந்தை கைப்பற்ற டிரம்ப் எப்படி திட்டமிட்டார் என்பது பற்றி அதிகம் தெரியவில்லை. 2019ஆம் ஆண்டு அவர் இந்த யோசனையை முதன் முதலில் பரிந்துரைத்த போது, அது “அடிப்படையில் ஒரு பெரிய ரியல் எஸ்டேட் ஒப்பந்தமாக” இருக்கும் என்று கூறினார்.
அமெரிக்க ஆட்சியின் கீழ் கிரீன்லாந்து எந்த அளவுக்கு தன்னாட்சி கொண்ட நாடாக இருக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அவர்களின் சமூக நலன்கள் அமைப்பு எவ்வாறு செயல்படும் என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.
கிரீன்லாந்தை பெறுவதற்கான அவரது அறிவிப்பைத் தொடர்ந்து, டிரம்ப் தனது நிலைப்பாட்டை வலுப்படுத்தினார்.
அதனையடுத்து, வடக்கு அட்லாண்டிக்கில் அமெரிக்கப் பகுதியை விரிவுபடுத்தும் தனது இலக்கை அடைய ராணுவத்தை பயன்படுத்தலாம் என்றும் அவர் வெளிப்டையாகப் பகிர்ந்துள்ளார்.
டொனால்ட் டிரம்பின் மூத்த மகன் மற்றும் டிரம்ப் குழுவினரின் வருகை, தீவை கையகப்படுத்தும் தனது யோசனையில் டிரம்ப் தீவிரமாக இருப்பதாக, அவரது கருத்துகளுக்கு வலு சேர்த்தது.
ஆனால் கிரீன்லாந்தில் உள்ள பலர் அவர்களின் வருகையால் ஈர்க்கப்படவில்லை. “அது எங்களை அமெரிக்காவின் அழுத்தத்தை எதிர்த்து உறுதியாக நிற்க வைக்கிறது. மேலும்,’தயவுசெய்து உங்களை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று சொல்ல வைக்கிறது,” என்கிறார் கிரீன்லாந்து அரசாங்கத்தின் ஐடி அதிகாரி ஜானஸ் கெம்னிட்ஸ் க்ளீஸ்ட்.
மேலும், “அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளைப் பற்றி முன்னர் நேர்மறையான அணுகுமுறையைக் கொண்டிருந்த சிலர் தங்களது கருத்தை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளனர்” என்றும் குறிப்பிடுகிறார் கெம்னிட்ஸ்.
இடதுசாரி இனுயிட் அட்டாகாடிகிட் கட்சியைச் சேர்ந்த டென்மார்க் நாடாளுமன்ற உறுப்பினரான ஆஜா கெம்னிட்ஸ், சுதந்திரம் எப்படி கிடைத்தாலும் சரி, ஆனால் சுதந்திரம் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தனது சொந்தக் கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளார்.
முதலாவதாக, திறமையான இளைஞர்கள் கிரீன்லாந்திலிருந்து வெளியேறுவதை நிறுத்த வேண்டியது முக்கியம் என்கிறார் கெம்னிட்ஸ். அவர் இதை ‘அறிவு இழப்பு’ எனக் குறிப்பிடுகிறார்.
அதாவது பல திறமையான நபர்கள், கிரீன்லாந்திலிருந்து கல்விக்காக வெளிநாட்டுக்குச் செல்கிறார்கள் ஆனால் அவர்கள் திரும்பி வருவதில்லை.
அவரது கூற்றுப்படி, டென்மார்க் மற்றும் பிற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் இளம் கிரீன்லாந்து மக்களில் 56 சதவீதத்தினர் மட்டுமே தங்கள் படிப்பை முடித்த பிறகு திரும்பி வருகிறார்கள்.
“இந்த எண்ணிக்கை அதிகமில்லை. அதனால், இளைஞர்கள் கிரீன்லாந்துக்குத் திரும்பி வந்து, இந்த பகுதியை மேம்படுத்த உதவும் முக்கியமான வேலைகளை மேற்கொண்டால் நன்றாக இருக்கும்” என்று அவர் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
கிரீன்லாந்து டென்மார்க்கிடம் சுதந்திரம் பெறுவதில் என்ன சிக்கல்?
ஆனால் ஒரு பரந்த பொருளாதார பிரச்னையும் உள்ளது என சுட்டிக்காட்டுகிறார் கெம்னிட்ஸ்.
“அரசியல் மற்றும் பொருளாதாரச் சுதந்திரம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது” எனக் கருதுகிறார் கெம்னிட்ஸ்.
மேலும் கிரீன்லாந்தில் வணிகத்தை வளர்ப்பதில் டென்மார்க் அரசுடன் ஒத்துழைப்பது மிகவும் முக்கியம், அதேபோல் மூலப்பொருட்களைப் பிரித்தெடுப்பதிலும் சுற்றுலா வளர்ச்சியிலும் அமெரிக்க அரசுடன் ஒத்துழைப்பதும் மிக முக்கியம்” என்றும் விளக்குகிறார்.
தற்போது, டென்மார்க் அரசாங்கத்தால் தரப்படும் “பிளாக் கிராண்ட்ஸ்” எனும் மானியத்தை கிரீன்லாந்து பொருளாதாரம் பெரிதும் சார்ந்துள்ளது.
2024 ஆம் ஆண்டில், டென்மார்க் அரசாங்கம் கிரீன்லாந்திற்கு ஆண்டுக்கு 480 மில்லியன் பவுண்டுகள் (சுமார் 610 மில்லியன் டாலர்கள்) மானியமாக வழங்கியது.
சுதந்திரத்திற்குப் பிறகு இந்த மானியம் கிடைக்காமல் போகும் என்பதால், அதனை மாற்றுவதற்கான வழியைக் கண்டுபிடிப்பதும் கிரீன்லாந்து மக்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக உள்ளது என நூக்கில் உள்ள கிரீன்லாந்து பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணர் சேவியர் அர்னாட் கூறுகிறார்.
“சுதந்திரத்தை நோக்கிய நகர்வுகளைத் தடுத்து நிறுத்தும் முக்கிய காரணிகளில் ஒன்று பொருளாதாரம்” என்றும் குறிப்பிடுகிறார் சேவியர் .
“கிரீன்லாந்தின் பொருளாதாரம் டென்மார்க் வழங்கும் “நிதி ஆதரவை பெரிதும் நம்பியுள்ளது”. டென்மார்க், நிதி வழங்குவதை நிறுத்தினால், கிரீன்லாந்தின் நிதி ஆதாரத்தில் ஏற்படும் பெரும் பின்னடைவை சரி செய்ய வேண்டி வரலாம்” என்பதையும் விளக்குகிறார் சேவியர் அர்னாட்.
ஆனால், அது “எப்படி என்பதுதான் கேள்வி. எடுத்துக்காட்டாக, புதிய கூட்டணிகளுடன் சுரங்கத் திட்டங்களை உருவாக்கி, அதில் கிடைக்கும் வரியின் மூலம் வருவாயை அதிகரிக்கும் போது, இந்த இடைவெளியை நிரப்ப முடிந்தால், பொருளாதார சுதந்திரத்திற்கான தெளிவான பாதை வெளிப்படும்”என விவரிக்கிறார் சேவியர்.
நல்வாழ்வுக்கான காரணி
பொருளாதாரத்தின் பெரும்பகுதியைக் அரசாங்கம் கட்டுப்படுத்தும் நோர்டிக் பாணியிலான (ஸ்காண்டிநேவியா, பின்லாந்து அல்லது ஐஸ்லாந்துக்கு தொடர்புடைய) மக்கள் நல அரசில் மற்றொரு கேள்வியும் முக்கியமானது.
அதாவது, டென்மார்க்குடனான உறவின் விளைவாக கிரீன்லாந்து தற்போது பெறும் அனைத்து சுகாதார மற்றும் சமூக நன்மைகளுக்கும் என்ன நடக்கும்? என்பது தான் அக்கேள்வி.
தற்போது, டென்மார்க் வழங்கும் நன்மைகளின் ஒரு பகுதியாக கிரீன்லாந்து நாட்டு மக்கள், டென்மார்க் மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான அனுமதியும் அடங்கும்.
கிரீன்லாந்து மக்களிடம் டென்மார்க்கிலிருந்து பிரிந்து செல்ல விரும்புகிறீர்களா என்று கேளுங்கள், பெரும்பாலானவர்கள் ஒரு எச்சரிக்கையுடன் ஆம் என்று கூறுகிறார்கள்.
ஆனால் நலத்திட்டங்களை இழக்காவிட்டால் மட்டுமே அவர்கள் ஆம் என்று கூறுவார்கள்.
மேலும், கிரீன்லாந்தின் கட்டுப்பாட்டை அமெரிக்கா எடுத்துக் கொண்டால், அதன் மக்கள் நல அமைப்புகள் (சுகாதாரம் மற்றும் சமூக நலன்கள் போன்ற அரசாங்க நிதியுதவி சேவைகள்) என்னவாகும் என்பதில் தீவிரமான கவலைகள் ஏற்படும்.
ஏனென்றால், நார்டிக் நாடுகள் மற்றும் பல மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும் போது அமெரிக்கா குறைவான சலுகைகளையே வழங்குகிறது.
ஆனால், கிரீன்லாந்து சுதந்திரமடைந்தால், அதன் மக்கள் புற்றுநோய் சிகிச்சை போன்ற மருத்துவ வசதிகளை இழக்க நேரிடும் என்ற கருத்துகளை சிலர் நம்புவதில்லை.
கிரீன்லாந்தின் முன்னாள் வெளியுறவு அமைச்சரும், தற்போதைய நலெராக் அரசியல் கட்சியின் தலைவருமான பீலே ப்ரோபெர்க், 1944 இல் டேனிஷ் ராஜ்ஜியத்தை விட்டு வெளியேறிய ஐஸ்லாந்தை இதற்கு ஒரு உதாரணமாகக் குறிப்பிடுகிறார்.
அதாவது, “ஐஸ்லாந்து தொடர்ந்து தனது நோயாளிகளை டென்மார்க்கிற்கு அனுப்புகிறது” என்று உதாரணத்தை விளக்குகிறார் ப்ரோபெர்க்.
தொடர்ந்து பேசிய அவர், “டென்மார்க்கில் ஐஸ்லாந்து மாணவர்கள் இன்னும் படிக்கிறார்கள், அதேபோல் டென்மார்க் மாணவர்கள் ஐஸ்லாந்திலும் படிக்கிறார்கள். நாங்கள் ராஜ்ஜியத்தை விட்டு வெளியேற முடிவு செய்தால் டென்மார்க் எந்த வகையில் தடை விதிக்க விரும்பும் என்பதைப் புரிந்துகொள்வது எனக்கு கடினமாக உள்ளது” என்றும் ப்ரோபெர்க் தெரிவித்தார்.
“சுதந்திரம் பற்றி விவாதிப்பதிலிருந்து நம்மை பயமுறுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட கருத்துகள் அவை” என்றும் அவர் வாதிடுகிறார்.
மறுபுறம், இதுபோன்ற கவலைகளின் காரணமாக ஒருபோதும் உண்மையான சுதந்திரம் கிடைக்காது என்று சில கிரீன்லாந்து மக்கள் நம்புகிறார்கள்.
“டென்மார்க், பெல்ஜியம் அல்லது அங்கோலா போன்ற நாடுகளில் காணப்படும் சுதந்திரம் இங்கு ஒருபோதும் நடக்காது” என்று கெம்னிட்ஸ் க்ளீஸ்ட் வாதிடுகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “இவ்வளவு சிறிய மக்கள் தொகையுடன், அதிலும் நன்கு படிக்காத ஒரு பகுதியினருடன், நாங்கள் பராமரிக்க விரும்பும் ஒரு சிக்கலான மக்கள் நல அமைப்புகளுடன், சுதந்திரம் என்ற சொல் பொதுவாகப் புரிந்து கொள்ளப்படும் அர்த்தத்தை நாம் ஒருபோதும் அடைய முடியாது” என விவரிக்கிறார்.
டிரம்பின் தந்திரோபாயங்கள்
இந்தப் பிரச்னைகள் அனைத்தும் பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருகின்றன, ஆனால் கிரீன்லாந்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற டிரம்ப் வெளிப்படையாக முயன்றதன் மூலம், அவை திடீரென்று ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஆனால் அமெரிக்க அதிபராக யார் இருந்தாலும், கிரீன்லாந்து மக்கள் அமெரிக்காவுடன் நெருக்கமான ஒத்துழைப்பதன் மூலம் பயன்பெறுவார்களா? அப்படியானால், எந்த அளவிற்கு பயன்பெறுவார்கள் என்பதுதான் கேள்வி.
“மற்ற நாடுகளைச் சார்ந்திருக்கும் கிரீன்லாந்தின் சார்புநிலையை விரிவுபடுத்தி, முடிந்தவரை பல வெளிநாடுகளுடன் தொடர்பு கொண்டிருப்பது தான், கிரீன்லாந்தின் தேசிய திட்டம்” என டேனிஷ் சர்வதேச ஆய்வுகள் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளரும் ஆர்க்டிக் பிராந்தியத்தில் நிபுணருமான உல்ரிக் பிராம் காட் கூறுகிறார்.
இந்த சூழலில், சில கிரீன்லாந்து மக்கள் டென்மார்க் அல்லது அமெரிக்காவுடனான “சுதந்திர கூட்டணி” மாதிரியை ஆதரிக்கின்றனர். அமெரிக்காவிற்கும் சில பசிபிக் தீவுகளுக்கும் இடையில் உள்ள இதேபோன்ற முறையை இந்த கருத்து பிரதிபலிக்கிறது.
ஆனால் “பிரச்னை என்னவென்றால், கிரீன்லாந்து டென்மார்க்கால் அதிகமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக உணர்கிறது,” என்கிறார் பிரம் காட். தொடர்ந்து பேசிய அவர், “கிரீன்லாந்தின் குறிக்கோள், குறைவான கட்டுப்பாட்டோடு, எந்தவொரு நாட்டையும் அதிகமாகக் சார்ந்திருப்பதைக் குறைப்பதாகும்.
சுதந்திரமான கூட்டுறவு என்பது ‘கூட்டணி’ பற்றியது அல்ல, மாறாக ‘சுதந்திரம்’ பற்றியது. இது ஒரு நாட்டின் சொந்த இறையாண்மையைப் பற்றியது” என்றும் விளக்குகிறார்.
கிரீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்போவதாக டிரம்ப் மிரட்டல் விடுத்தது ஆச்சரியமாக இருந்திருக்கலாம்.
ஆனால், இது ஒரு முக்கியமான பிரச்னை என்பதை அவரது குழு அறிந்திருந்தது. குறிப்பாக பல கிரீன்லாந்து மக்கள் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தனர். கிரீன்லாந்தில் செல்வாக்கு செலுத்துவதற்கு இதை ஒரு வாய்ப்பாக அவர்கள் கருதினர்.
“சமீபத்திய ஆண்டுகளில், இந்தக் கதைகள் அனைத்தும் வெளிவந்து, நவீனமயமாக்கல் சார்ந்து சொல்லப்பட்ட கதைக்கு புத்தொளி பாய்ச்சியுள்ளது. டென்மார்க் கிரீன்லாந்திற்கு நற்பண்புடன் உதவியது என்ற கருத்து கேள்விக்குள்ளாக்கப்பட்டது,” என்கிறார் இபென் மாண்ட்ரூப்.
மேலும், “கிரீன்லாந்து மக்களின் நலனுக்காகவே என்று கூறப்பட்ட திட்டம் உண்மையில் அவர்களுக்கு நல்லதல்ல. இந்தச் சூழல் டென்மார்க் மண்டலத்தில் உள்ள கிரீன்லாந்து மக்களின் நிலையைப் பற்றிய பல சிந்தனைகளைத் தூண்டுகிறது. டென்மார்க்குடன் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்ற கருத்தைச் சுற்றி, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல், சமீப ஆண்டுகளில் கிரீன்லாந்தில் எழுந்துள்ள விமர்சனத்தை இது தீவிரப்படுத்துகிறது.” என்கிறார் மாண்ட்ரூப்.
பட மூலாதாரம், Getty Images
நார்வே, ஐஸ்லாந்து மற்றும் கனடா
ஆனால் டென்மார்க்கும், அமெரிக்காவும் இல்லையென்றால், கிரீன்லாந்து வேறு யாருடன் இணைய முடியும்?
பெரும்பாலான கிரீன்லாந்து மக்கள், கனடா மற்றும் ஐஸ்லாந்துடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த விரும்புவதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
நலேரக் கட்சித் தலைவர் ப்ரோபெர்க் இந்த யோசனையை வரவேற்கிறார். இந்தக் கருத்துக் கணிப்பில் வெளிவந்துள்ள முடிவுகளில் நார்வேயையும் அவர் சேர்க்கிறார்.
“டென்மார்க்கை விட நார்வே மற்றும் ஐஸ்லாந்துடன் எங்களுக்கு பொதுவான விஷயங்கள் அதிகம் உள்ளன” என்று அவர் குறிப்பிடுகிறார்.
“டென்மார்க்கைப் போலல்லாமல், ஆர்க்டிக்கில் நாங்கள் அனைவரும் ஒரு தொடர்பைக் கொண்டுள்ளோம். சுதந்திரத்திற்குப் பிறகும் டென்மார்க்குடன் ஒருவித தொடர்பைப் பேண வேண்டும் என்ற எண்ணத்தில் நான் வெளிப்படையாக இருக்க ஒரே காரணம், அது சில கிரீன்லாந்து மக்களுக்கு உறுதியளிக்கக்கூடும் என்பதால்தான். ஏனெனில் அவர்கள் டென்மார்க்குடனான உறவுக்குப் பழகிவிட்டனர்.”எனத் தெரிவித்தார் ப்ரோபெர்க்.
இன்னும், ஒரு கேள்வி எஞ்சியுள்ளது.
அதாவது, கிரீன்லாந்து மக்கள் விரும்பும் சமூக நலன்களை வழங்குவதற்கு கனடாவும் ஐஸ்லாந்தும் பொறுப்பேற்கத் தயாராகுமா? என்பது தான் அக்கேள்வி.
ஆனால், நிச்சயமாக இல்லை என்பதாகவே கிட்டத்தட்ட அந்தக் கேள்விக்கான பதிலாக இருக்கும்.
இதனால் ஒருபுறம், புதிய வாய்ப்புகள் மற்றும் வளர்ச்சிக்கான சாத்தியங்களுடனும், மறுபுறம், அவர்களைத் தடுக்கக் கூடிய சவால்களுடனும் கிரீன்லாந்து மக்கள் நேர்மறை மற்றும் எதிர்மறை அம்சங்களைக் கொண்ட எதிர்காலத்தை எதிர்கொள்கின்றனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.