கிரிக்கெட் வீராங்கனை கமாலினி, கோ-கோ வீரர் சுப்ரமணிக்கு தலா ரூ.25 லட்சம் ஊக்கத் தொகை: முதல்வர் ஸ்டாலின் | Cricketer Kamalini and Kho-Kho player Subramani to get Rs. 25 lakhs each – CM Stalin

Share

சென்னை: 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்திய அணியின் வெற்றிக்கு பங்களித்த தமிழக கிரிக்கெட் வீராங்கனை கமாலினி, கோ-கோ உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல பங்களித்த வீரர் வி.சுப்ரமணி ஆகியோருக்கு தமிழக அரசின் உயரிய ஊக்கத்தொகையாக தலா ரூ.25 லட்சம் வழங்கிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மலேசியாவில் 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள் ஜன. 18 முதல் பிப். 2 வரை நடைபெற்றன. இப்போட்டிகளில் தமிழகத்தைச் சார்ந்த கு. கமாலினி இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். அவர்தான் விளையாடிய ஏழு போட்டிகளில் ஒரு அரைச்சதம், 143 ரன்கள், 2 கேட்சுகள், 4 ஸ்டம்பிங் என நிகழ்த்தி அசாத்திய சாதனைகள் புரிந்துள்ளார். இந்த போட்டிகளில் கமாலினியின் பங்களிப்பால் இந்திய அணி கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

அதே போல், டெல்லியில் நடைபெற்ற முதல் கோ-கோ உலகக் கோப்பை போட்டிகள், ஜன. 13 முதல் ஜன. 19, வரை நடைபெற்றன. இப்போட்டிகளில் தமிழகத்தைச் சார்ந்த V. சுப்ரமணி அபாரமாக விளையாடியதற்காக “சிறந்த அட்டாக்கர் விருதை” வென்றார். இறுதிப் போட்டியில் நேபாள அணியை 54-36 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து, இந்திய அணி கோ-கோ உலகக் கோப்பையை வென்றது. இந்த போட்டிகளில் சுப்ரமணியின் பங்களிப்பால் இந்திய அணி கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலேசியாவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் கு. கமாலினியின் இந்தச் சாதனையைப் போற்றிப் பாராட்டும் வகையில், பல விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் போட்டிகளில் பங்கேற்று, தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெருமைகள் சேர்த்திட ஊக்கமளிக்கும் வகையிலும் கு. கமாலினிக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூபாய் 25 லட்சம் வழங்கிட இன்று (பிப்.8) உத்தரவிட்டுள்ளார்.

மேலும், டெல்லியில் நடைபெற்ற முதல் கோ-கோ உலகக் கோப்பை போட்டிகளில் தமிழகத்தைச் சார்ந்த சுப்ரமணி போல மேலும் பல விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் போட்டிகளில் பங்கேற்றுத் தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் பெருமைகள் சேர்த்திட ஊக்கமளிக்கும் வகையில், அவருக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூபாய் 25 லட்சம் வழங்கிட உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com