காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ், இன்று நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நீதிமன்ற சிறைக்காவலில் வைக்க சிறைக்கு அழைத்துச் செல்ல முற்படும்போது தப்பி ஓடிய காணொலி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்த 30 நிமிடங்களுக்கு பின் சங்கர் கணேஷ், மீண்டும் கிளை சிறைக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார். டிஎஸ்பி சங்கர் கணேஷ் தப்பி ஓடவில்லை என்று காஞ்சிபுரம்காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
சம்பவத்தின் பின்னணி
காஞ்சிபுரம் மாவட்டம், பூசிவாக்கம் பகுதியில் “சிமெண்ட் முருகன்’ என்பவர், மற்றொரு நபருக்கும் தனக்கும் நடந்த அடிதடி சம்பவத்தில் தனக்கு உரிய நீதி வேண்டும் என்று காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இந்தப் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் புகார் அளிக்கப்பட்டு ஒரு மாத காலம் ஆகியும் காவல்துறை தரப்பிலிருந்து எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றும் முருகன் தரப்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. குறிப்பாக பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் (SC/ST Act) கீழ் நடவடிக்கை எடுக்கவில்லை என்று வழக்குத் தொடுத்திருந்தார்

இன்று (செப்டம்பர் 8) இந்த வழக்கை விசாரித்த காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி செம்மல், புகாரின் தீவிர தன்மையை எடுத்துரைத்து, ஒரு மாத காலமாகியும் காவல்துறை தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததைக் கண்டித்திருக்கிறார்.