காஞ்சிபுரத்தில் சாம்சங் இந்தியா நிறுவனத்துக்கு எதிராகக் காலவரையற்ற போராட்டத்தை அங்கு பணிபுரியும் சுமார் 1500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
தொழிற்சங்கம் தொடங்குவதற்கு நிர்வாகம் அனுமதி மறுப்பதாகவும், சம்பள உயர்வு, பணிநேரம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தபோது, நிர்வாகத்தின் அச்சுறுத்தலுக்கு ஆளானதாகவும் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
சட்டத்துக்கு உட்பட்டு தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சாம்சங் இந்தியா நிறுவனம் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளது.
வியாழன் (செப்டம்பர்12) அன்று தலைமைச் செயலகத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சாம்சங் இந்தியா நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதிலும் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை.
தமிழ்நாட்டில் 17 ஆண்டுகளாக சாம்சங் இந்தியா நிறுவனம் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது போராட்டம் வெடித்தது ஏன்?
என்ன பிரச்னை?
தென்கொரியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சாம்சங் நிறுவனத்துக்கு இந்தியாவில், உத்தரபிரதேசத்தில் நொய்டாவிலும், தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்திலும் தொழிற்சாலைகள் உள்ளன.
காஞ்சிபுரத்தில் சுங்குவார்சத்திரத்தில் அமைந்துள்ள இந்நிறுவனத்தின் தொழிற்சாலையில், வாஷிங்மெஷின், குளிர்சாதனப் பெட்டி, தொலைக்காட்சி, கம்ப்ரஸர் (compressor) ஆகியவை தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் பணியில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில், 1,700 பேர் வரை நிரந்தரப் பணியாளர்களாக உள்ளனர். சாம்சங் இந்தியா நிறுவனம் 2007-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டாலும், இதுநாள் வரையில் அங்கு தொழிற்சங்கங்களின் செயல்பாடுகள் எதுவும் குறிப்பிடும்படியாக இல்லை.
இதனைப் போக்கும் வகையில் கடந்த ஜூன் மாதம் சி.ஐ.டி.யூ சார்பில் சாம்சங் இந்தியா தொழிலாளர் நலச்சங்கம் உருவாக்கப்பட்டது. இதற்கான அங்கீகாரக் கடிதம் கேட்டு தொழிற்சாலை நிர்வாகத்தை அணுகியபோது, ஏராளமான பிரச்னைகளைத் தாங்கள் எதிர்கொண்டதாகத் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
போராட்டம் வெடித்தது ஏன்?
சி.ஐ.டி.யூ காஞ்சிபுரம் மாவட்டச் செயலரும், சாம்சங் இந்தியா தொழிலாளர் நலச்சங்கத்தின் தலைவருமான முத்துக்குமார், “தொழிற்சாலையில் சங்கம் அமைத்த பிறகு, அதை ஏற்க முடியாது என நிர்வாகம் கூறியது. அத்துடன் மட்டும் நிற்காமல் சங்கத்தை அழிப்பது, சங்கத்தின் பின்புலத்தில் உள்ள தொழிலாளர்களை அச்சுறுத்துவது என பலவழிகளில் நிர்வாகம் அத்துமீறி செயல்படுகிறது,” என்கிறார்.
மேலும், ” ‘சி.ஐ.டி.யூ-வில் சேரக் கூடாது, நிர்வாகம் ஏற்படுத்திய தொழிலாளர் அமைப்பில் மட்டும் இணைய வேண்டும்’ என வற்புறுத்தினர். அதற்காக அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆபத்தானவை. அதனால்தான் வெளியே வந்து போராட்டம் நடத்துகிறோம்,” என்கிறார்,
தொழிற்சாலையில் பணிபுரியும் நிரந்தர தொழிலாளர்களில் சுமார் 1,500 பேர் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளதாக குறிப்பிடும் முத்துக்குமார், “சம்பள உயர்வு, தொழிலாளர் நலன் ஆகிய கோரிக்கைகள் தொடர்பாக சாம்சங் நிர்வாகம், தொழிற்சங்கத்திடம் பேச வேண்டும். தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்பதுதான் எங்களின் பிரதான கோரிக்கை. அதற்காகவே போராடுகிறோம்,” என பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
தொழிலாளர்களின் கோரிக்கை ஏற்கப்படாததால், கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி போராட்டத்தைத் துவங்க உள்ளதாக நிர்வாகத்துக்கு சி.ஐ.டி.யூ தரப்பில் இருந்து நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் பலன் அளிக்காததால் தொழிற்சாலையில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள தனியார் இடத்தில் தொழிலாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
களநிலவரம் என்ன?
நான்காம் நாள் (செப்டம்பர் 12) போராட்டத்தின் போது களநிலவரத்தை அறிவதற்காக பிபிசி தமிழ் போராட்டம் நடக்கும் இடத்துக்குச் சென்றது. சாம்சங் இந்தியா தொழிற்சாலையின் சீருடையில் தொழிலாளர்கள் அனைவரும் அமர்ந்திருந்தனர்.
‘எதற்காக இந்தப் போராட்டம்?’ என்பது குறித்து ஒவ்வொருவரும் தனித்தனியாக மேடையில் பேசினர்.
போராட்டத்தை நீர்த்துப் போக செய்வதற்காகப் பல வகைகளில் நிர்வாகம் முயற்சி செய்வதாக அங்கிருந்த தொழிலாளர்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.
பெயர் அடையாளம் வேண்டாம் எனக் கூறிவிட்டு பிபிசி தமிழிடம் பேசிய பணியாளர் ஒருவர், “அனைவரும் பொதுவான வேலையைத்தான் செய்கிறோம். ஆனால், சம்பளத்தில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. சிலருக்கு 50,000 ரூபாய் சம்பளம் தருகின்றனர். சிலர், 20,000 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்க்கின்றனர். ஒரே வேலையில் இவ்வளவு வித்தியாசம் இருக்கிறது. இதைச் சரிசெய்யுமாறு கேட்டபோது, நிர்வாகம் மறுத்துவிட்டது. கேள்வி கேட்க முடியாத இடத்தில் இருப்பதை உணர்ந்ததால்தான் சங்கத்தையே துவங்கினோம்,” என்கிறார்.
அங்கிருந்து, சாம்சங் இந்தியா நிறுவனத்துக்குச் சென்றபோது, அதன் பிரதான வாயில்களில் சீருடை அணிந்த பாதுகாவலர்கள் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்களிடம் பேசியபோது, “நாங்கள் எதையும் பேசக் கூடாது. நிர்வாகம் தரப்பில் பதில் சொல்வார்கள்,” என்று மட்டும் பதில் அளித்தனர்.
பேச்சுவார்த்தையில் தோல்வி ஏன்?
காலவரையற்றப் போராட்டம் தொடங்குவதற்கு முன்னர் தொழிலாளர் நலத்துறையின் காஞ்சிபுரம் மாவட்டத் துணை கமிஷனர் கமலக்கண்ணனுடன் தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
“இந்தப் பேச்சுவார்த்தையில் சாம்சங் இந்தியா நிர்வாகம் தரப்பில் என்ன சொல்லப்பட்டதோ அதை அப்படியே தொழிலாளர் நலத்துறையும் பேசியது. ‘இது அரசின் பேச்சுவார்த்தை போல இல்லை’ எனக் கூறி வெளியேறிவிட்டோம்,” என்கிறார் சாம்சங் இந்தியா தொழிற்சங்க தலைவர் முத்துக்குமார்.
போராட்டம் தொடங்கிய பிறகும் இதேபோன்ற நிலை ஏற்பட்டால் பேச்சுவார்த்தையில் தொடர்வதை மறுபரிசீலனை செய்வோம் என அதிகாரிகளிடம் கூறிய பிறகே தொழிலாளர்களின் புகார்கள் பதிவு செய்யப்பட்டதாக, பிபிசி தமிழிடம் முத்துக்குமார் தெரிவித்தார்.
“அடிப்படைச் சம்பளம் 35,000, இரவுப் பணிக்கான படி உயர்வு, மருத்துவ அலவன்ஸ் உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். வேலை நேரத்தை 8 மணிநேரமாக இல்லாமல் 7 மணிநேரமாக குறைக்கப்பட வேண்டும் ஆகியன முக்கியமானவை. ‘இரவு 11 மணி வரையில் ஓவர் டைம் பார்க்க முடியாது’ எனக் கூறினோம். இதை மட்டும் நிர்வாகம் ஏற்றுக் கொண்டு, கட்டாயப்படுத்த மாட்டோம் எனக் கூறியது. இதர கோரிக்கைகளை ஏற்க மறுத்துவிட்டது. இந்த விவகாரத்தில் அரசு தொழிலாளர்களின் பக்கம் நிற்கவில்லை,” என்கிறார் முத்துக்குமார்.
இந்தக் கருத்தை மறுத்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், “தொழிலாளர்களின் நலனுக்காக மட்டுமே அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களின் பக்கம் நிற்கவில்லை என்பது தவறானது. குடும்ப ஓய்வூதியம், தனி நபர் ஓய்வூதியம், மருத்துவ உதவிகள், பணியின் போது இறந்தால் இழப்பீடு என தொழிலாளர்களின் நலனில் அக்கறை செலுத்தி வருகிறோம்,” என்கிறார்.
தென்கொரிய போராட்டத்துடன் தொடர்பா?
“சி.ஐ.டி.யூ சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு வேறு வேலைகளைக் கொடுக்கின்றனர். உதாரணமாக, போர்க் லிப்ட் (Forklift) ஆபரேட்டர்களை வாஷிங்மெஷின் பிரிவில் வேலை பார்க்க சொல்கின்றனர். தங்களுக்குத் தெரியாத வேலையைப் பார்க்குமாறு அழுத்தம் கொடுப்பதால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றனர்,” என்கிறார் முத்துக்குமார்.
தென்கொரியாவில் சாம்சங் நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் வெடித்ததால்தான் இங்கும் போராட்டம் நடப்பதாக கூறும் தகவலில் உண்மையில்லை எனக் குறிப்பிடும் முத்துக்குமார், “தென்கொரியாவில் அண்மையில் இரண்டு போராட்டங்களை அங்குள்ள தொழிலாளர்கள் நடத்தினர். அதில் ஒன்று, விடுமுறை தொடர்பானது. அடுத்து வர்த்தகத்தில் கிடைத்த லாபத்தில் ஊதியம், போனஸ் ஆகியவற்றைக் கேட்டனர். ஆனால், தமிழ்நாட்டில் சங்கமே கூடாது என நிர்வாகம் கூறுவதால்தான் போராட்டம் நடக்கிறது. தொழிற்சங்கத்தைப் பதிவு செய்வதில் கூட அரசு நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுக்கின்றனர்,” என்கிறார்.
“தென்கொரியாவில் ஒரு தொழிலாளிக்கு மாதம் லட்சக்கணக்கணக்கான ரூபாய்களை சாம்சங் நிறுவனம் செலவு செய்கிறது. இங்கு ஒரு தொழிலாளிக்கு 28,000 முதல் 35,000 வரை செலவு செய்கின்றனர். அங்கு வாரத்துக்கு இரண்டு நாள்கள் விடுப்பு என்றால் இங்கு 1 நாள் தான் விடுமுறை. இங்குள்ள சம்பளம் என்பது இதர நிறுவனங்களை ஒப்பிடும் போது குறைவுதான்,” என்கிறார்.
உற்பத்தியில் பாதிப்பா?
தொழிலாளர்களின் போராட்டம் நான்காவது நாளை கடந்து நீடிப்பதால் சாம்சங் இந்தியா நிறுவனத்தில் வீட்டு உபயோக பொருள் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் முத்துக்குமார்.
“80% அளவுக்கு உற்பத்தி நடைபெறவில்லை எனத் தெரிகிறது. இதை சரிசெய்வதற்கு நொய்டாவில் இருந்தும், இங்குள்ள ஒப்பந்த ஊழியர்களையும் பயன்படுத்தியும் அந்த வேலைகளைச் செய்யுமாறு கூறுகின்றனர். இது நிரந்தரம் அல்ல. அவ்வாறு செய்ய முடியாது.
“அதையும் மீறி பணிகள் தொடர்ந்தால், ‘அது சட்டவிரோத உற்பத்தி’ என தொழிலாளர் நலத்துறையிடம் தெரிவித்துவிட்டோம். அவர்களும் அதை ஏற்றுக் கொண்டனர். போராட்டத்தையும் மீறி இந்த உற்பத்தி தொடருமானால் அதை நிறுத்தும் வகையில் எங்களின் அடுத்தகட்ட போராட்டம் நடக்கும்,” என்கிறார் முத்துக்குமார்.
‘பிரச்னைகளை தீர்ப்போம்’ – அமைச்சர் சி.வி.கணேசன்
தொழிலாளர்களின் போராட்டம் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட தொழிலாளர் நலத்துறை துணை கமிஷனர் கமலக்கண்ணனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசியபோது, “தற்போது இந்த விவகாரம் குறித்துப் பேச முடியாது,” என மறுத்துவிட்டார்.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனிடம் பிபிசி தமிழ் பேசியபோது, “சாம்சங் இந்தியா நிறுவனம் குறித்த பிரச்னைகளைத் தீர்த்து வைப்பதாக தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு உறுதியளித்திருக்கிறேன். இதற்கான பேச்சுவார்த்தையில் தொழிலாளர் நலத்துறை செயலர், முதல்வரின் செயலர் ஆகியோர் உள்ளனர். தொழிலாளர்களின் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றித் தருவோம்,” என்கிறார்.
சாம்சங் இந்தியா நிறுவனம் சொல்வது என்ன?
சாம்சங் இந்தியா நிறுவனத்தின் தரப்பில் விளக்கம் கேட்பதற்கு அந்நிறுவனத்தின் பொதுமேலாளர் பார்த்திபனிடம் பிபிசி தமிழ் பேசியது. “ஊடக நிறுவனங்களுக்கு நிறுவனத்தின் தரப்பில் இருந்து செய்தி அறிக்கை வெளியிடப்படும்,” என்று மட்டும் பதில் அளித்தார்.
இதன்பின்னர், சாம்சங் இந்தியா நிறுவனத்தின் இ-மெயில் முகவரிக்கு கேள்விகளை அனுப்பினோம். தொழிலாளர்களை அச்சுறுத்துவது, அரசுத்துறையுடன் இணைந்து தொழிற்சங்கத்தைத் தொடங்கவிடாமல் தடுப்பது ஆகியவை குறித்து கேள்விகளைக் கேட்டிருந்தோம். இந்தக் கேள்விகளுக்கு சாம்சங் இந்தியா நிறுவனம் நேரடியாக பதில் அளிக்கவில்லை.
மாறாக, அந்நிறுவனத்தின் ஊடக செய்தி தொடர்பாளர் பிபிசி தமிழுக்கு அனுப்பியுள்ள இமெயிலில், “எங்களுக்கு தொழிலாளர்களின் நலன்கள்தான் முதன்மையானவை. தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளைச் சட்டத்துக்கு உட்பட்டு நிறைவேற்றுவது குறித்துப் பேசி வருகிறோம். எங்கள் நுகர்வோர் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
– இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.