கவனச்சிதறல் முதல் கட்டைவிரல் பாதிப்பு வரை… மொபைல் கேம்ஸ் ஆபத்துகள், மீளும் வழிகள்!

Share

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மொபைல் கேம்களில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆரம்பத்தில் ஜாலியாக கேம் விளையாடத் தொடங்குகிறவர்கள் பின்நாள்களில் அதற்கு அடிமையாகி அதிலிருந்து வெளியேற முடியாமல் தத்தளிக்கின்றனர். இதனால் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்னைகளுக்கு ஆளாகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகம். மொபைல் கேம்ஸால் ஏற்படும் பிரச்னைகள், அவற்றுக்கான தீர்வுகள் குறித்து நரம்பியல் மருத்துவர் சதீஷிடம் பேசினோம்.

“நினைவுத் திறனை அதிகபடுத்தவும், முடிவெடுக்கும் திறனை வளர்க்கவும்தான் விளையாட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஆன்லைன் கேம்

குறிப்பாக `ஏடிஹெச்டி’யால் (Attention Deficit Hyperactivity Disorder) பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஓர் இடத்தில் அமரச் செய்து அவர்களின் கவனச் சிதறலைத் தடுக்க கேம்கள் பெரிதும் பயன்படுகின்றன.

கேம்களில் உடல் சார்ந்த விளையாட்டுகள், வீடியோ மற்றும் செல்போன் கேம்கள் என இருவகை இருக்கின்றன. இவற்றில், உடல் சார்ந்த விளையாட்டுகளால் எந்தப் பிரச்னையும் இல்லை. அவற்றை விளையாடும்போது, மூளையில் மகிழ்ச்சியைத் தரும் ஹார்மோன்கள் அதிகமாகச் சுரந்து உடல் எடை சீராக இருக்கும். தவிர, அறிவுத் திறனை அதிகரிப்பதுடன் சமூகத்தோடு ஒன்றி வாழும் மனப்பான்மையையும் அதிகரிக்கும்.

ஆனால், வீடியோ மற்றும் மொபைல் கேம்கள் அப்படி இல்லை. இந்த கேம்களை விளையாடும்போது மகிழ்ச்சியைத் தரும் ஹார்மோன்கள் சுரந்தாலும் உடல் உழைப்பு இல்லாததால் கலோரிகள் குறைவது தடைப்படுகின்றது. இதன் விளைவாக மூளை குழப்பத்திற்கு உள்ளாகிறது. இதனால், அதிகப்படியான தனிமை, கவலை மற்றும் மன அழுத்தத்திற்கு வித்திடும்.

இந்த நிலை நீடிக்கும்போது மன அழுத்தம் மற்றும் மனநோய் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு வழிவகுக்கக் கூடும். மணிக்கணக்காக மொபைல் கேம்களில் நேரத்தைச் செலவிடுபவர்களுக்கு மூளையில் ஓய்வு என்ற ஒன்று ஏற்படுவதே இல்லை. அவர்கள் உறங்கும்போதுகூட, மூளை அந்த விளையாட்டை பற்றிய சிந்தனையிலே இருக்கும்.

வீடியோ கேம்

நாளடைவில் அந்த கேம்களுக்கு தீவிரமாக அடிமையாகி அவர்களின் அன்றாட வாழ்வையே பாதிக்கிறது. ஒருகட்டத்தில் சமூகத்தில் இருந்து அவர்களை விலகியே இருக்கும்படி செய்கிறது.

அதுமட்டுமல்ல தொடர்ச்சியாக கேம் விளையாடுபவர்கள் `ட்ரிகர் ஃபிங்கர்’ எனும் பிரச்னைக்குள்ளாகின்றனர். அதாவது விரல் நரம்புகளில் பாதிப்பு ஏற்படுவதைத்தான் `ட்ரிகர் ஃபிங்கர்’ என்போம். மற்ற விரல்களைக் காட்டிலும் கட்டை விரல்களில்தான் இந்தப் பிரச்னை அதிகமாக ஏற்படுகிறது. காரணம், கேம் விளையாடும்போது கட்டை விரலைத்தான் அதிகம் பயன்படுத்துகிறோம். அதற்காக மற்ற விரல்களை பாதிக்காது என்று அர்த்தம் கிடையாது, மற்ற விரல்களையும் பாதிக்கும். இப்படி மொபைல் கேம்களில் நிறைய ஆபத்துகள் ஒளிந்திருக்கின்றன.

இதனை கண்டறிந்து குணப்படுத்துவது எளிதான ஒன்றுதான். முதலில் உங்கள் குழந்தைகள் கேம்களுக்கு அடிமையாகியிருக்கின்றனரா என்று கண்டறிய வேண்டும். கேம்களுக்கு அடிமையான குழந்தைகள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளத் தொடங்குவர். பின்பு அவர்களின் சுய பராமரிப்பு குறைவதுடன், படிப்பிலும் மந்தமாவார்கள். அப்படியான சூழலில் பெற்றோர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

மனநல பாதிப்பு

மருத்துவரின் ஆலோசனை பெற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு கவுன்சலிங் கொடுப்பது, இசையுடன் கூடிய சிகிச்சையைக் கொடுப்பது போன்றவற்றை முயற்சி செய்யலாம். இப்படி அவர்களின் கவனத்தை திசைத்திருப்புவதன் மூலம் அவர்களை கேம் அடிக்‌ஷனிலிருந்து வெளியே கொண்டு வரலாம்.

மிரட்டி அவர்களை நம் வழிக்கு வர வைக்கலாம் என நினைப்பது தவறான செயல். பெற்றோர்கள், நண்பர்களின் அரவணைப்பு மற்றும் மருத்துவர்களின் ஆலோசனை ஆகியவைதான் அவர்களை மீட்கும் சரியான வழி” என்கிறார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com