தஞ்சாவூர் கீழவாசல் தட்டான்தெரு பகுதியில் இளைஞர்கள் சிலர் மாத்திரையை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் நரம்பில் செலுத்தி போதை ஏற்படுத்திக்கொண்டு வந்துள்ளனர். குறிப்பாக கல்லூரி மாணவர்கள் இத்தகைய போதைப்பழக்கத்து ஆளாகி வந்துள்ளனர். ஒரு கும்பல், கல்லுாரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்.பி.,ராஜராமன் உத்தரவின் பேரில், கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீஸார் விசாரணையில் ஈடுபட்டனர்.

இதில், தட்டான்தெருவில் போதை மாத்திரை மற்றும் ஊசி விற்பனை செய்த கீழவாசல் பகுதியை சேர்ந்த முகமது அப்பாஸ், பிரவீன், அரவிந்த், வெங்கடேசன், அம்மாபேட்டையைச் சேர்ந்த சந்தோஷ்குமார், வண்டிக்காரத் தெருவைச் சேர்ந்த அபிஷேக் ஆகிய 6 பேரை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். இவர்களிடம் போலீஸ் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.