அஜீத் நடித்த `வீரம்’ உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகர் பாலா. இவர், இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பி ஆவார். இவருக்கு கல்லீரலில் பிரச்னை ஏற்பட்டு, கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கல்லீரல் செயலிழப்பு ஏற்பட என்ன காரணம்… கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைதான் இதற்கு தீர்வா… கல்லீரல் சிறப்பு மருத்துவர் ஜாய் வர்கீஸிடம் கேட்டோம்…
“கல்லீரல், தனது பணியைச் செய்ய இயலாமல் முற்றிலும் செயலிழப்பதை ‘தீவிர கல்லீரல் செயலிழப்பு’ (Acute liver Failure) எனக் கூறுவோம். இந்த நிலை ஏற்படும்போது, கல்லீரலால் செய்யப்படும் பணி எதுவுமே உடலில் நடைபெறாமல் நின்றுபோகும். உணவில் உள்ள சத்தை உட்கிரகிப்பதில் தொடங்கி, வளர்சிதை மாற்றத்துக்கு உதவியாக இருப்பது, உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுவது என கல்லீரலுக்கு முக்கியப் பங்கு உண்டு. கல்லீரல் செயலிழக்கும் போது இந்தச் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு, அது மற்ற உறுப்புகளையும் பாதிக்கத் தொடங்கும். கல்லீரல் செயலிழப்பால் மஞ்சள் காமாலை ஏற்படும். நச்சுகள் உடலை விட்டு வெளியேறாமல் உடலிலேயே இருப்பதால், மூளை பாதிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபர் மூர்ச்சையாவதற்கும் (Unconscious) கூட வாய்ப்புள்ளது.