கரூர்: ‘சிகரெட் கேட்டா, பீடி தருவியா?’ – மளிகை கடைக்குள் மண்ணெண்ணெய் குண்டு வீசிய இளைஞர்

Share

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கருப்பகவுண்டன் புதூர் மேற்கு, கங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது: 52). இவருக்கு தமிழரசி (வயது: 42) என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இவர், கங்கா நகர் சந்திப்பில் அமைந்துள்ள தனக்கு சொந்தமான வீட்டின் முன் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த முகமது அன்சாரி (வயது: 24) என்ற இளைஞர் மளிகை கடைக்கு வந்து சிகரெட் கேட்டுள்ளார். கடைக்காரர் சுப்பிரமணி, ’சிகரெட் இல்லை’ என்று கூறியதால், 2 ரூபாய்க்கு பீடி மட்டும் வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார். அதன்பிறகு, சுமார் 15 நிமிடம் கழித்து மீண்டும் அப்பகுதிக்கு வந்த முகமது அன்சாரி, காலி குவார்ட்டர் பாட்டிலில் மண்ணெண்ணெய் நிரப்பி திரியை பற்ற வைத்து, மளிகை கடை மீது வீசி உள்ளார். மண்ணெண்ணெய் குண்டு வெடித்ததில் கடையின் முன்பு அடுக்கி வைத்திருந்த 20 லிட்டர் தண்ணீர் கேன்கள் மற்றும் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்த தின்பண்டங்களும் எரிந்து கருகியது.

கடைக்குள் வீசப்பட்ட குண்டு

கடைக்குள் வீசப்பட்ட குண்டு
தே.தீட்ஷித்

அதனைத் தொடர்ந்து, மண்ணெண்ணெய் குண்டு வெடித்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்தில் கூடியதால், முகமது அன்சாரி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து, தாந்தோன்றிமலை காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த தாந்தோன்றிமலை போலீஸார் மண்ணெண்ணெய் குண்டு வீசிய இடத்தில் இருந்த தடயங்களை சேகரித்து, தப்பியோடிய முகமது அன்சாரியை வலை வீசி தேடினர். இந்நிலையில், கொளந்தாகவுண்டனுர் பகுதியில் உள்ள சுடுகாட்டில் பதுங்கியிருந்த முகமது அன்சாரியை போலீஸார் கைது செய்தனர். அப்போது, அவர் தப்பிக்க முயன்று ஓடியபோது தடுமாறி விழுந்ததில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டதால், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இவர்மீது கரூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 10 – க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சொல்லப்படுகிறது. சிகரெட் இல்லை என்றதால், இளைஞர் ஒருவர் மளிகை கடைக்குள் மண்ணெண்ணெய் குண்டை வீசிய சம்பவம், கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com