ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கிய 5-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி ஓரளவுக்குத் தேறி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்துள்ளது. கருண் நாயர் 52 ரன்களுடனும் வாஷிங்டன் சுந்தர் 19 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர்.
2ம் நாளான இன்று புதிய பந்தை எடுக்க இன்னும் 16 ஓவர்கள் உள்ள நிலையில் சுந்தரும், கருண் நாயரும் இந்த 16 ஓவர்களில் 45-48 ரன்கள் எடுக்க முடிந்தால் அதே சமயத்தில் விக்கெட்டுகளையும் இழக்காமல் இருந்தால் 250/6 என்ற நிலையிலிருந்து புதிய பந்து எடுத்த பிறகு தட்டித் தட்டி 300 ரன்களை எட்டி விடலாம். இந்தப் பிட்சில் இது நல்ல ரன்கள்தான்.
சாதனைத் துளிகள்: இங்கிலாந்துக்கு எதிரான இந்தத் தொடரில் இந்திய அணி மொத்தமாக இதுவரை 3,393 ரன்களை குவித்துள்ளது. ஒரு தொடரில் அதிக மொத்த ரன்கள் என்பதே இந்தச் சாதனை. இதற்கு முன்னர் 1978-79 மே.இ.தீவுகள் இந்தியா வந்த போது இந்திய அணி தொட ர் முழுதும் மொத்தமாக 3,270 ரன்களை எடுத்ததுதான் அதிகமாகும்.
மேலும் இந்த 3,393 ரன்கள் என்பது 1995க்குப் பிறகே எந்த ஒரு அணியும் ஒரு தொடரில் எட்டாத அதிக மொத்த ரன்களாகும். 2003-ல் தென் ஆப்பிரிக்கா இங்கிலாந்து தொடரில் மொத்தமாக 3,323 ரன்களைக் குவித்ததே அதிகமாக இருந்தது.
கருண் நாயர் சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக எடுத்த 302 ரன்களுக்குப் பிறகு நேற்று எடுத்த 52 நாட் அவுட் ஆகிய ஸ்கோர்களுக்கு இடைப்பட்ட நாட்களின் எண்ணிக்கை 3,149 என்கின்றன புள்ளி விவரங்கள். இரண்டு 50+ ஸ்கோர்களுக்கு இடையே இத்தனை பெரிய இடைவெளியில் இப்போது கருண் நாயர் நம்பர் 2 ஆக இருக்கிறார். முதலிடத்தில் பார்த்திவ் படேல் தனது 4வது அரைசதத்திற்கும் 5வது அரைசதத்திற்கும் இடையே 4,426 நாட்கள் காத்திருந்தார்.
இந்தத் தொடரில் இதுவரை ஷுப்மன் கில் எடுத்த 743 ரன்கள் இந்திய கேப்டனாக உயர் தனிச்சாதனையாகும். ஒரு கேப்டனாக 3வது அதிக ஸ்கோர்களை எடுத்த சாதனையையும் ஷுப்மன் கில் வசம் வந்துள்ளது.
டாஸில் சாதனை புரிந்து பார்த்திருக்கிறோமா? அதுவும் நடந்துள்ளது, இந்திய அணி 15 டாஸ்களைத் தொடர்ச்சியாகத் தோற்றுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் டாஸ் ஜெயிக்க இத்தனை பெரிய நீண்ட இடைவெளியை வேறு எந்த அணியும் சந்தித்தது கிடையாது. கடைசியாக ராஜ்கோட்டில் இங்கிலாந்துக்கு எதிராக டாஸ் வென்றதோடு சரி.
அதே போல் இந்தத் தொடரில் 5 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி டாஸில் தோற்றது. அதே போல் 2000-ம் ஆண்டுக்குப் பிறகு 2018-ல் இந்தியா இதே இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட்களிலும் டாஸில் தோற்றது. 4 முறை இந்திய அணி தொடர் முழுதிலும் டாஸை இழந்துள்ளது.
இந்தியாவும் இங்கிலாந்தும் 5வது டெஸ்ட்டிற்காக அணிகளில் 4 மாற்றங்களைச் செய்துள்ளது. 2003க்குப் பிறகு இது போன்று 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. 2015-ல் இலங்கையும் பாகிஸ்தானும் கண்டி டெஸ்ட்டில் தலா 4 மாற்றங்களைச் செய்தது குறிப்பிடத்தக்கது.