சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் நடைபெற்ற நிர்வாகிகள் குழு கூட்டத்திற்கு பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் சசிகலா குறித்துஆலோசிக்கப்படவில்லை என்றும், நாடாளுமன்ற தேர்தல் குறித்து பேசப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது:
நாடாளுமன்ற தேர்தலுக்கு கிளை கழக நிர்வாகிகள் முதல் தலைமை கழக நிர்வாகிகள் வரை செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் அறிவுரை வழங்கப்பட்டது. அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை இல்லை.
இந்த கூட்டத்தில் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் குறித்து எந்த விவாதமும் அதிமுக நிர்வாகிகள் குழு கூட்டத்தில் நடைபெறவில்லை. அவர்கள் குறித்து ஆலோசனை நடத்தி எங்களது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. ஆண்டிகள் கூடி மடம் கட்டுவது போலத்தான் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி கொண்டிருக்கிறார்.
நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக தலைமையிலான கூட்டணிதான் இருக்கும். தேர்தல் நேரத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். அந்த கூட்டணியின் தொகுதி ஒதுக்கீடு குறித்து தேர்தல் நேரத்தில் கட்சி முடிவு செய்யும்.
சட்டபூர்வமாக கூட்டப்பட்ட பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதே பொதுக்குழுவில் ஓபிஎஸ் நீக்கப்பட்டார். உயர்நீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வும் பொதுக்குழு குறித்து சாதகமான தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில், ஓபிஎஸ் எவ்வாறு கட்சியை முடக்க முடியும். ஓபிஎஸ் மற்றும் அவரது அணியினர் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஆட்சி அமையக்கூடாது என்பதில் தீவிரமாக உள்ளார் என ஜெயக்குமார் கூறினார்.