அப்படியே இருக்கிறார் பி.டி.உஷா!
கால்களில் அதே உறுதி, கண்களில் அதே வெறி, நெஞ்சில் அதே லட்சியத் தாகம்! ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வேண்டும் என்று இப்போதும் அவரது உதடுகள் முணுமுணுக்கின்றன.
இந்தியாவின் தங்கப் பெண்ணான பழைய உஷாவுக்கும் இப்போதைய புதிய உஷாவுக்கும் இடையே ஒரே ஒரு வித்தியாசம்… முன்பு அவர் ஒரு தடகள வீராங்கனை.
இப்போது புதிய புதிய புயல்களை உருவாக்கி வரும் பயிற்சியாளர்!
‘லண்டன் 2012’ என்பதே இப்போது உஷாவின் இலக்கு. இன்னும் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, லண்டனில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு, வலுவான தடகள அணியை அனுப்ப, கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஒவ்வொரு நாளும் உழைத்துவருகிறார் உஷா. அதற்காகப் புதிய சீடர்களைத் தேடி அலைகிறார் இந்தியாவெங்கும்!
சென்னை – நேரு ஸ்டேடியத்தில், சின்னச் சின்னப் பட்டாம்பூச்சிகளுக்கு நடுவே, தனக்கான தேவதைகளைத் தேடிக்கொண்டு இருந்த பி.டி.உஷாவிடம் பேசினோம்….
“இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கி வருவேன் என்று தடகள வீராங்கனையாக இருந்தபோது பல முறை சொல்லியிருக்கிறேன். ஆனால், 84 ‘ லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்கில் அதை நிறைவேற்ற முடியவில்லை. வெண்கலம்கூட வெல்ல முடியாமல் திரும்பினேன். அந்தக் குற்ற உணர்ச்சி என்னை அழுத்திக்கொண்டே இருந்தது. இன்னும் எனக்கு அந்த வேதனை குறையவே இல்லை. அதிலிருந்து விடு படத்தான் இந்தப் புதிய முயற்சி. வீராங்கனையாக இருந்து நான் இழந்தது ஒரு பதக்கம்தான். பயிற்சியாளராக இருந்து 10 பதக்கங்களையாவது வாங்கித் தராமல் விடமாட்டேன்!”